பொருளாதார நெருக்கடியின் போது, இந்திய அரசாங்கம் இலங்கை முழுவதையும் ஆதரித்தது, இனவாத அணுகுமுறையை எடுக்கவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தமிழர்கள் சிங்களவர்கள் ஏனைய சமூகத்தினர் அடங்கிய இலங்கை முழுவதற்கும் நாங்கள் எங்கள் ஆதரவை வழங்கியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
மிகவும் பாரதூரமான பொருளாதார நெருக்கடியில் உள்ள அயல்நாட்டிற்கு உதவிவழங்கும் விடயத்தில் நாங்கள் இனரீதியிலான அணுகுமுறையை பின்பற்றவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அயல்நாடு நெருக்கடியான நிலையில் உள்ள தருணத்தில் நாங்கள் உதவ முன்வராவிட்டால் நாங்கள் எங்கள் கடமைகளை நிறைவேற்ற தவறியவர்களாக மாறிவிடுவோம் -நாங்கள் சரியான தருணத்தில் உதவினோம் எனவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியா தனது நீண்டகால நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான வாக்கெடுப்பை புறக்கணித்தது என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்த நிலைப்பாட்டை முந்தைய இந்திய அரசாங்களும் பின்பற்றியுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தமிழ் சமூகத்தின் நலன்களை முன்னெடுப்பதற்கு இதுவே மிகவும் ஆக்கபூர்வமான அணுகுமுறை தொடர்ந்தும் இதுவே எங்கள் அணுகுமுறையாக காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.