உலகம்தழுவிய ஆளில்லா விமான (Drone – ட்ரோன்) போர்முகத்தை சீனா உருவாக்கிவிட்டது.

உலகம்தழுவிய ஆளில்லா விமான (Drone – ட்ரோன்) போர்முகத்தை சீனா உருவாக்கிவிட்டது.  அமெரிக்கா அந்த சந்தையில் கட்டாயம் இணையவேண்டும் அல்லது பின்னால் நிற்கவேண்டும்.
ட்ரோன் போர்முறை என்பது இருபத்தியோராம் நூற்றாண்டின் உலகளாவிய பாதுகாப்பு விடயத்தில் முக்கிய இடத்தை வகிக்கிறது. அல்கெய்தா (al Qaeda)போன்ற அரசல்லாத தரப்புகள் முதல் கடந்த தைமாத்தில் ஈரானிய மேஜர் ஜெனரல் காசிம் சொலைமானியை (Qasem Soleimani) கொலை செய்ததுவரை ஆயிரக்கணக்கான ஆளில்லா வானூர்தித் தாக்குதல்களை அமெரிக்கா நிகழ்த்தியுள்ளது.
drone1 உலகம்தழுவிய ஆளில்லா விமான (Drone - ட்ரோன்) போர்முகத்தை சீனா உருவாக்கிவிட்டது.
குர்திஸ்தானிய தொழிலாளர் கட்சிக்கு (Kurdistan Workers’ Party) எதிராக துருக்கியும், மேற்கு ஆபிரிக்க கிளர்ச்சியாளர்களான போகோ கரம் (Boko Haram) அமைப்பினரிற்கு எதிராக நைஜிரியாவும் ஐ.எஸ்.ஐ.எஸ் (ISIS) இற்கு எதிராக ஈராக்கும் ஆயுதம் தாங்கிய ஆளில்லா வானூர்திகளை பயன்படுத்தியிருக்கின்றன.
சவுதி அரேபியாவும் ஐக்கிய அரபு இராச்சியமும் லிபியாவிலும் ஏமனிலும் (Yemen) ஆளில்லா வானூர்திகளைப் பாவித்து மோசமான தாக்குதல்களை நிகழ்த்தியிருக்கின்றன.
அண்மைய சில வாரங்களாக ஆர்மேனியாவுடனான போரில் விசேடமாக கவசவாகனங்களிற்கு எதிராகவும் நெடுந்தூர பீரங்கிகளிற்கு எதிராகவும் ஆயுதம் தாங்கிய ட்ரோன்களை அஜர்பைஜான் (Azerbaijan) பயன்படுத்தியிருப்பது விவாதிக்கக்கூடிய அளவிற்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆயுதம் தாங்கிய ட்ரோன்கள் வேகமாக பெருகிவருகின்றன.
இதனால் எதிர்வரும் வருடங்களில் ஆளில்லா வானூர்திகளின் போர்முகம் என்பது இன்னும் அதிகமாகிவிடும்.  2011 இற்கு முன்னர் அமெரிக்கா, ஐக்கிய ராச்சியம், இஸ்ரேல் ஆகிய நாடுகளே ட்ரோன்களை வைத்திருந்தன ஆனால் 2011 தொடக்கம் 2019 வரை இந்த எண்ணிக்கை பதினெட்டு நாடுகளாக உயர்ந்திருப்பதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.
சீனா பிரதான வினியோகஸ்தராக தன்னை வெளிப்படுத்தியமையும் ட்ரோன்களின் பாவனையின் விரைவான அதிகரிப்பும் ஒன்றித்த நிகழ்வாகியிருக்கிறது. 2011 இல் இருந்து 2019 வரை ட்ரோன் இனை பாவித்துவரும் 18 நாடுகளில் 11 நாடுகள் சீனாவிடம் இருந்தே ஆயுதம் தாங்கிய ட்ரோன்களை வாங்கியதை நாம் காண்கிறோம்.
மறுபுறத்தில் அமெரிக்கா ஒரே ஒரு நாடான பிரான்சிற்கு மட்டுமே ட்ரோன்களை ஏற்றுமதி செய்திருக்கிறது என்பது கவனத்திற்குரியது. ஆயுதம் தாங்கிய ட்ரோன்கள் பரவிவரும் சூழலில் வாசிங்டனில் தலைமையேற்கும் அமெரிக்காவின் புதிய நிர்வாகம், அமெரிக்கா அதிநவீன ட்ரோன் தொழில்நுட்பத்தை விற்குமா? யாரிற்கு? எப்போது? போன்ற கடினமான கேள்விகளிற்கு பதில் சொல்லவேண்டியிருக்கிறது.
பழைய கட்டுப்பாடுகள்
உலகில் அதிக மேம்பட்ட ட்ரோன்களை அமெரிக்கா வைத்திருக்கிறது. கூடவே அதனை வாங்குவதற்கு ஏராளமான நாடுகள் அக்கறை கொண்டுள்ளன. ஆனால் 1987 இல் உருவாக்கப்பட்ட உடன்படிக்கையின் படியமைந்த ஒரு ஏற்றுமதிக்கட்டுப்பாட்டு ஆணையம் இத்தகைய ஆயுதம் தரித்த ட்ரோன் தொழில்நுட்பத்தை விற்கும் திறனை கட்டுப்படுத்துகிறது.
பேரழிவு ஆயுதங்களைக் கொண்டுசெல்லும் ஏவுகணைகளின் பரவலைத் தடுப்பதற்கு ஏவுகணைத் தொழில்நுட்ப கட்டுப்பாட்டு ஆணையம் பனிப்போர்காலத்தில் நிறுவப்பட்டது. இந்த ஆணையம்  300 கிலோமீற்றர்களிற்கு மேல் பறக்கக்கூடிய 500 கிலோவிற்கு அதிகமாக சுமக்கக்கூடிய வகை ஒன்று என வகைப்படுத்தப்பட்ட ஏவுகணைத் தொழில்நுட்பத்தை ஏற்றுமதிசெய்யக் கூடாதென அமெரிக்காவை கட்டுப்படுத்துகிறது.
இந்த ஆணையம் ஒருவழி பயணிக்கும் ஏவுகணைப் பாவனைகளை ஒழுங்குபடுத்துவதையே கருத்தில் கொண்டது, வானூர்திகளை அல்ல. ஆனால் 1987 இல் இத்தகையை கட்டுப்பாட்டைக் கொண்டுவரும்போது இப்போதைய செயற்பாட்டினைப்போல் அப்போதைய ட்ரோன்கள் இருக்கவில்லை. அவை ஒருவழிப்பாதை இலக்குகளில் ஏவுகணைகளின் துல்லியத்தை சரிபார்ப்பதற்கும் மிகவும் குறுகிய தூர பாதுகாப்பு நடவடிக்கைகளிற்குமே பிரதானமாக பயன்படுத்தப்பட்டன.
ஆனால் தற்கால நவீன ட்ரோன்கள் அதிகம் அதிகம் வானூர்திகளை ஒத்திருக்கின்றன. அவற்றால் வானூர்திகள் போன்று வானில் மணிக்கணக்காகவும் நாட்கணக்காகவும் உலவவும் புறப்பட்ட தளத்திற்கு மீண்டும் வரவும் முடிகிறது. ஆயினும் கூட இப்போதும் அவை 1987 இல் கொண்டுவரப்பட்ட ஒருவழிப்பாதை ஆயுதங்களின் வகைக்குள் அடக்கப்பட்டு அவற்றிற்கான கட்டுப்பாடுகளே கடைப்பிடிக்கப்படுகிறது.
இதனால் அதிகமாக கடந்த தசாப்தத்தில் சீனாவும் ஏனையவர்களும் ஆயுதம் தாங்கிய ட்ரோன்களை ஏற்றுமதி செய்கின்றபோதும் அமெரிக்கா இந்தச் சந்தையில் நுழைவதில் தாமதம் நிலவுகிறது.
வெல்வோரும் தோற்போரும்
ட்ரோன்களை விற்பனை செய்வதற்கான அமெரிக்கக் கட்டுப்பாடு தற்செயலானதாயினும் அது ஆயுதம் தரித்த ட்ரோன்களை வாங்கக்கூடிய நாடுகளின் விடயத்தில் பலமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது, 1987 ஆணையத்தின் பரிந்துரைகளின் வகை ஒன்றிற்கு உற்பட்டே தங்களது ஏற்றுமதிச் செயற்பாட்டுமுறை அமைவதாக சீனா அறிவித்திருக்கிறது.
1987 ஏவுகணைக் கட்டுப்பாட்டு உடன்படிக்கையின் சரத்துக்களிற்கு கீழ்ப்படிவதாக சீனா கூறினாலும் அதற்கு உடன்படவேண்டிய அவசியம் சீனாவிற்கு இல்லை. ஏனெனில் அந்த உடன்படிக்கையில் சீனா கையொப்பமிடவில்லை. ஆகையால் ட்ரோன்களை ஏற்றுமதி செய்வதற்காக சந்தையை தெரிவு செய்வதில் சீனாவிற்கு இந்த விடயத்தில் அதிக சுதந்திரம் உள்ளது.
சீனாவிடம் இருந்து ட்ரோன்களை வாங்கிய 11 நாடுகளில் எகிப்து(Egypt), உஸ்பெஸ்கிஸ்தான் (Uzbekistan)போன்ற சில ஜனநாயக நாடுகள் உள்ளன. ஏனைய ஒன்பது நாடுகள் இதை வாங்கிய முதல் வருடத்திலேயே ஜனநாயக விரோதமாக நடந்தன. ஆய்வுகளின்படி 2011 தொடக்கம் 2019 வரை ஜனநாயகச் சக்திகளைவிட ஜனநாயக விரோதச் சக்திகளே  8 மடங்கு என்கின்ற அதிக அளவில் ஆயுதம் தரித்த ட்ரோன்களை கையகப் படுத்தியிருக்கின்றன.
இவ்வாறு ஜனநாயக சக்திகளைவிட ஜனநாயக விரோத சக்திகள் அதிகமாக ஆயுதம் தரித்த ட்ரோன்களை கையகப்படுத்துவதற்கான காரணங்களின் ஒன்று  வாங்குபவர்கள் அதனைப்பயன்படுத்துவதில் கட்டுப்பாடுகளை அமெரிக்காவை விட சீனா  அதிகம் விதிக்கவில்லை என்பதாகும்.
இதனால் சர்வதேச சட்டங்களையும் மனித உரிமைகளையும் மீறிக்கூட அவற்றை பயன்படுத்துவதற்குரிய போதிய சுதந்திரமும் அதிக ஒத்திசைவும் சீனாவிடம் இருந்து வாங்குவதால் அவர்களிற்கு கிடைக்கிறது.
சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் (People’s Liberation Army) ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் Xu Guangyu கூறியதுபோல் ஆயுதங்களை விற்பதில் சீனாவின் பிரதான அனுகூலங்களில் ஒன்று குறிப்பிட்ட ஆயுதப்பாவனை தொடர்பாக வாங்கும் நாடுகளின் நிலைப்பாடுகளிலும் அதன் உட்கொள்கைகளிலும் நிபந்தனைகள் விதிப்பதில்லை என்பதாகும்.
இதனை அமெரிக்காவோடு ஒப்பிடுகையில், அமெரிக்க விற்பனையில் 1987 ஏவுகணை உடன்படிக்கையின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஏனைய வழக்கமான ஆயுத பரிமாற்ற கொள்கைகளின் அடிப்படையில்  2015 ட்ரோன் ஏற்றுமதிக் கொள்கை வரையரை செய்யப்படுவதை காணலாம்.
அதன்படி அமெரிக்காவிடம் இருந்து ட்ரோனினை வாங்கும் நாடுகளிற்கு அதனைப் பயன்படுத்துவதில் சர்வதேச மனிதாபினமானச் சட்டம் (international humanitarian law ), சர்வதேச மனித உரிமைச்சட்டம் (international human rights law) உள்ளடங்கலான சர்வதேச சட்ட விதிகளை  மீறுவதையோ உள்நாட்டு மக்கள் மீது சட்டவிரோத கண்காணிப்பையோ சட்டவிரோத நடவடிக்கைகளையோ மேற்கொள்வதையோ 2015 ட்ரோன் ஏற்றுமதிக்கொள்கையின் அடிப்படையிலான கட்டுப்பாடுகளாக விதிக்கப்படுவதை கவனிக்கலாம்.
அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான பிரான்சிற்கு கூட ஆயுதம் தரித்த MQ-9 Reaper  ட்ரோன்களை விரிவுறுத்த ஒருகட்டத்தில் அமெரிக்க அரசின் அனுமதி தேவைப்பட்டிருந்தது.
இவ்வாறு ட்ரோன் விற்பனையில் அதன் விதிகளை மீறும் நாடுகளிற்கு அதற்கான உதிரிப்பாகங்களையும், வெடிமருந்துகளையும் தொடர்ந்து வழங்குவதை நிறுத்தும் கிடுக்குப்பிடியை வைத்தவாறே அமெரிக்கா தனது விற்பனை உடன்படிக்கையை மேற்கொள்கிறது.
இவ்வாறான காரணங்களால் அமெரிக்காவிலும் பார்க்க சீனாவில் இருந்து அதிக எண்ணிக்கையான ட்ரோன்கள் உலகெங்கும் பெருகிவிட்டன. இறங்குமுகமான இந்த முன் உதாரணம் பின்விளைவுகளைக் கொண்டிருக்கிறது.
டரோன் ஏற்றுமதி தொடர்பான அமெரிக்காவின் கட்டுப்பாடுகளால் உலகெங்கும் ட்ரோனின் பரவல் தடுக்கப்படவில்லை மாறாக சீனாவிடம் இருந்து ஜனநாயக விரோத சக்திகளாக விளங்கும் நாடுகள் அவற்றைக்கொள்வனவு செய்திருக்கும் நிலையே தோன்றியிருக்கிறது. இதனால் அமெரிக்காவின் ஜனநாயக நட்புச் சக்திகள் பிரதிகூலத்தையே அனுபவிக்கின்றனர்.
அதேவேளை தனது ட்ரோன் ஏற்றுமதி ஊடாக அமெரிக்காவின் பங்காளிச் சக்திகள் உட்பட உலகெங்கும் உள்ள நாடுகளுடன் இராணுவ பாதுகாப்பு உறவுகளையும் கட்டியெழுப்பியிருக்கிறது சீனா. உதாரணமாக ஜோர்தான், ஈராக், ஐக்கிய அரபு இராச்சியம், சவுதி அரேபியா போன்ற நாடுகளின் ஆயுதம் தாங்கிய ட்ரோன்களைக் கொள்வனவு செய்வதற்கான கோரிக்கைகளை அமெரிக்கா நிராகரித்திருந்தது. இத்தகைய நாடுகள் அமெரிக்காவிற்குப் பதிலாக சீனாவிடம் இருந்து ஆயுதம் தரித்த ட்ரோன்களைக் கொள்வனவு செய்திருக்கின்றன.
அமெரிக்காவின் வாடிக்கையாளர்கள்
இத்தகைய சாதகமற்ற இயங்குநிலையை கருத்தில் கொண்டு 1987 (ஏவுகணை ஏற்றுமதிக் கொள்கை) நடைமுறையை மீள்பரிசீலனை செய்ய 2020 யூலையில் அதிபர் ட்ரம்பின் (Tonald Trump) நிர்வாகம் தீர்மானித்தது.
மணிக்கு 800 கிலோமீற்றரிற்கு உட்பட்ட வேகத்தில் பறக்கும் General Atomics’ Predator  மற்றும் Reaper  போன்ற ட்ரோன்கள் தரம் 1 இல் இருந்து தரம் 2 க்கு வகைப்படுத்தப்பட்டன.  இதனால் அவற்றை விதிமுறைச் சிக்கல்கள் இல்லாது ஏற்றுமதி செய்யும் நிலை ஏற்படுத்தப்பட்டது.
இவ்வாறு கொள்கையில் மாற்றம் செய்த பின்னர் ட்ரம்ப் நிர்வாகம் காங்கிரசிற்கு (பிரதிநிதிகள் சபை மற்றும் செனற்சபை அடங்கிய அமெரிக்க நாடாளுமன்றம்) தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து தாய்வானிற்கும் ஐக்கிய அரபு இராஜ்சியத்திற்கும் ஆயுதம் தாங்கிய ட்ரோன்களை விற்பதற்கு நாடாளுமன்றம் அனுமதியும் அளித்தது.
கூடவே தேசிய பாதுகாப்புச் செயலாளர் மைக்பொம்பியோவும் (Mike Pompeo) பாதுகாப்புச் செயலாளர்  மார்க் எஸ்பரும் (Defense Mark Esper) அமெரிக்காவின் ஆயுதம் தரித்த ட்ரோன்களை வாங்கும்படி இந்தியாவிற்கு அழுத்தமும் கொடுத்தனர்.
இவ்வாறு ஆயுதம் தரித்த ட்ரோன்களை ஏற்றுமதி செய்வதில் அமெரிக்கா காட்டும் ஆர்வம் ட்ரோன் விற்பனைச்சந்தையில் ஜனநாயக விரோத நாடுகளிற்கு இருந்த சாதகத்தை மெல்ல மெல்ல ஜனநாயக நாடுகளின் பக்கம் திருப்பக்கூடும்.
அதேநேரம் ஆயுதப் பரவலும் அதிகரிக்கும். துருக்கிபோன்ற காத்திரமான ட்ரோன் வழங்குனர்களும் அண்மைய வருடங்களில் தங்களின் விற்பனையை அதிகரித்திருக்கிறார்கள்.
இதுவும் உலகெங்கும் ட்ரோன்களின் பெருக்கத்தில் பெரும் பங்காற்றும். உதாரணமாக ஆர்மேனியாவுடனான போரில் வான்வழித் தாக்குதல்களை நடத்துவதற்கு துருக்கிய தயாரிப்பு ட்ரோன்களையே அசர்பைஜான் (Azerbaijan) பயன்படுத்தியிருக்கிறது.
புதிய ட்ரோன்களின் தாக்கம்.
ஒட்டுமொத்தமாக பார்த்தால் இப்போதைக்குத்தான் ட்ரோன்களின் அச்சுறுத்தல்களின் தீவிரம் குறைவாக உள்ளது. அரச தரப்பினரும் அரசல்லாத தரப்பினரும் ட்ரோன்களைப் பெற்றுவருவதால் அண்மைய எதிர்காலத்தில் ட்ரோன் தாக்குதல்களின் எண்ணிக்கையும் அச்சுறுத்தலும் அதிகரிக்கும்.
தற்போதைய தலைமுறை ட்ரோன்கள் பயணிகள் விமானங்கள் போன்று வேகம் குறைவாகவும் பாதுகாப்புத் தந்திரங்கள் குறைந்தவையாகவும் பொதுவாக தங்களை தற்காத்துக் கொள்ளமுடியாதவையுமாக காணப்படுவதால் அடையாளம் காணப்படுமிடத்து ஒப்பீட்டளவில் இலகுவாக சுட்டுவீழ்த்தப்படக் கூடியவையே.
ஈரான், சிரியா மற்றும் ஏமனின் கவுதி (Houthi movement) கிளர்ச்சியாளர்கள் அமெரிக்காவின் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள்.
ஆகையால் தற்போதைய தலைமுறை ட்ரோன்கள் வான்வெளிப் போட்டியில் மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டையே கொண்டிருக்கின்றன. இதனால் அதிநவீன இராணுவ வல்லாற்றல்களுக்கிடையிலான மோதல்களில் இவை பெறுமதிமக்கவையாக மிளிர வாய்ப்புகள் குறைவு.
எப்படியோ தன்னுடைய சோவியத் கால வான்பாதுகாப்பு கட்டமைப்பு மீது அசர்பைஜானிகள் (Azerbaijani) மேற்கொண்ட தாக்குதல்களின் மூலம் ஆர்மேனியா கற்றுக்கொண்டதைப்போன்று அதிக இராணுவங்கள் ட்ரோன் தாக்குலின் பாதிப்பிற்கு உள்ளாகக் கூடியவையே.
தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கோ அல்லது எதிரியின் பாதுகாப்பு வலயம் மீது படையெடுப்பதற்கும் நிர்மூலம் செய்வதற்கும் ஏற்றவகையில் ட்ரோன்களிற்கான தொழில்நுட்பம் மேம்படுத்தப்படும்போது தற்போதிருப்பதைவிட எதிர்காலத்தில் அத்தகையை ட்ரோன்கள் காத்திரமான பங்காற்றும் ஆயதங்களாக விளங்கும்.
ட்ரோன்களின் பாவனையால் சில வழிகளில் உறுதித்தன்மைக்கு பங்களிப்புச்செய்ய முடியும் என்றும் சில ஆய்வுகள் பரிந்துரை செய்கின்றன.
ஆள் இல்லா விமானங்களைச் சுட்டுவீழ்த்துவதைக் காட்டிலும் ஆள்உள்ள விமானங்களைச் சுட்டுவீழ்த்துவதிலேயே இராணுவ ரீதியாக முடிவெடுப்பவர்கள் அதிக ஆர்வம் காட்டியிருப்பதையே போர்க்களங்கள் அனுபவப்பாடமாக வெளிப்படுத்திநிற்கின்றன.
இதற்கு ஒரு நடைமுறை உதாரணமாக அமெரிக்காவின் 130 மில்லியன் டொலர் பெறுமதியான RQ-4 Global Hawk  கண்காணிப்பு ட்ரோனினை ஈரான் சுட்டுவீழ்த்தியதற்குப் பதிலடியாக வான்வழித்தாக்குதல் நடத்துவதில் இருந்து யூன் 2019 இல் ட்ரம்ப் பின்வாங்கியதைக் கருத்தில் கொள்ளலாம். அவரின் முடிவை நியாயப்படுத்தும் வகையில் ஈரானின் தாக்குதலிற்குப் பதிலடியாக ஒரு ஆளில்லா விமானத்தை சுட்டுவீழ்த்துவது சமமாகாது என்று ருவிற்றறில் கூறியிருந்தார்.
drone2 உலகம்தழுவிய ஆளில்லா விமான (Drone - ட்ரோன்) போர்முகத்தை சீனா உருவாக்கிவிட்டது.
இத்தகைய இராணுவ தொழில்நுட்பத்தின் நீண்டகாலத் தாக்கம் எவ்வாறிருக்கும் என்பது தெரியாவிட்டாலும் போத்தலிற்கு வெளியே பூதம் வந்துவிட்டது என்பது தெளிவாக தெரிகிறது. அதாவது ட்ரோன்கள் வேகமாக பெருகிக் கொண்டிருக்கிறது.  புதிதாக வரும் பைடன் நிர்வாகத்திற்கு ட்ரோன்களின் பெருக்கம் பற்றிய பெரிய கேள்வி பாரிய சவாலாக இருக்கும்.
ஜனாதிபதி ஜோ பைடனால் ட்ரோன்கள் ஏற்றுமதி தொடர்பாக ஒபாமா கால கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டுவர முடியும். அது மீண்டும் சீனாவிற்கே சந்தையை விட்டுக் கொடுப்பதாய் அமையும். மாறாக ட்ரோன்களின் எதிர்கால யுத்த பங்களிப்பை கருத்தில் கொண்டு ட்ரம்ப் நிர்வாகத்தின் முடிவிலேயே இருக்கவும் முடியும்.
அல்லது இரண்டிற்கும் நடுவிலான ஒரு முடிவை எடுக்கமுடியும். அதாவது ட்ரோன்களை தமது நேச சக்திகளிற்கு குறிப்பாக ஜனநாயக சக்திகளிற்கு கிடைக்கக்கூடிய வகையில் செய்வதோடு ட்ரோன் ஏற்றுமதியில் முன்பிருந்ததைப்போன்று ஒருவகை உயர் கண்காணிப்பையும் மேற்கொள்வது என்பதாகும்.
மூலம்: foreignaffairs.com
மூலப்பிரதி எழுதியவர்கள்: Michael C. Horowitz, Joshua A. Schwartz, and Matthew Fuhrmann
தமிழில் மொழிமாற்றம் – இந்திரன் ரவீந்திரன் (20.11.2020)