ஈஸ்ட்டர் தாக்குதலை நடத்தியவர்களுக்கு எவ்வாறு நிதி உதவிகள் கிடைத்தன? பொலிஸ் பேச்சாளர்

ஈஸ்டர் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு, இலங்கையின் சட்டரீதியான அமைப்புகளிடம் இருந்தும் நிதி உதவிகள் கிடைத்துள்ளனவென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். அத்தோடு, சட்டவிரோதமான அமைப்புகளும் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு அமைப்புகளும், அந்தப் பயங்கரவாதிகளுக்கான நிதி உதவியைச் செய்துள்ளனவெனவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல், வெல்லம்பிடிய செப்புத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு, சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பொருள்களால் கிடைக்கப்பெற்ற வருமானங்களையும், மேற்படி பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு வழங்கியுள்ளதாகக் கண்டறியப்பட்டு உள்ளதென அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், இதுவரையில் 237 பேரைக் கைது செய்துள்ளதாகவும் அவர்களில் 26 பேரை, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளதோடு, 8 பேரைத் தடுத்து வைத்து விசாரணை செய்துவரும் நிலையில், ஐவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும், பேச்சாளர் தெரிவித்தார்.

மேலும், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் 63பேரைத் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருவதோடு, அவர்களில் 16 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.