ஈழ தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கு! – ச.பாலமுருகன்

பாராளுமன்றத்தில்  9.12.2019 ல் குடியுரிமை திருத்த சட்டம் விவாதத்திற்கு வருகிறது. இந்த சட்டம் இந்தியாவின் மதச் சார்பின்மை கருத்தை புதைக்க உள்ளது. பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து வரும் முஸ்லீம் இல்லாதவர்களை இந்திய குடியுரிமை வழங்க வழி வகை செய்துள்ளது.

தமிழர்களாகிய நமது முக்கிய கோரிக்கையான 1983 க்கு பின்னர் இலங்கையிலிருந்து வந்து பல்வேறு முகாம்களில் தங்கியுள்ள ஈழ அகதிகள் இந்தியாவையே வாழிடமாக ஏற்றுக்கொண்டவர்கள்.இங்கேயே வாழ விரும்புபவர்கள்.

2014 ஆண்டு டாடா சமூக ஆய்வு நிருவனமும், டேனிஸ் அகதிகள் கவுன்சிலும் இணைந்து நடத்திய ஆய்வில் 79 % அகதிகள் இந்தியாவை தாயகமாக கருதுவது வெளிப்பட்டது. இந்தியாவோடு தொப்புள் கொடி உறவுள்ள இம் மக்களுக்கு இந்திய குடியுரிமை தர வேண்டும் என பல ஆண்டு கோரிக்கை கிடப்பில் போடப்பட்டு வந்தது.

இச் சூழலில் கடந்த 2016 ஆண்டு ப.ஜ.கா கொண்டு வந்த இந்த குடியுரிமை திருத்த சட்டம் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு வந்ததால் பின் பாராளுமன்றம் நிலை குழு ஆய்வுக்கு அனுப்பப் பட்டது.7.1.2019 அக் குழு உறுப்பினர்கள் ஈழ தமிழர்களையும், திபத்திய புத்த மத அகதிகளுக்கும் குடியுரிமை தரலாம் என பரிந்துரித்தனர்.

ஆனால் மத்திய உள் துறை அமைச்சகம் தாங்கள் குடியுரிமை வழங்குவது குறித்து 29.12.2011 தேதியிட்ட ஒரு நிலைப்பாட்டு நடைமுறையை கடைபிடிப்பதாகவும் (standing operative procedure) அதன் படி வெளிநாட்டை சார்ந்த போரால் பாதிக்கப்பட்டவர்கள் நீண்ட கால விசாவில் இங்கே தங்கிக் கொள்ளலாம் குடியுரிமை வழங்க முடியாது எனக் கூறி ஈழ தமிழர்களை குடியுரிமை சட்டத்தில் இணைக்கவில்லை.

ஆனால் இதற்கு முரணாக பாக்,ஆப்கான்,பங்களாதேஷ் என்ற நாடுகளின் (வெளிநாட்டினர்) முஸ்லீம் அல்லாதாரை மட்டும் குடியுரிமை தர சட்டம் கொண்டு வருவது தமிழ் சமூகத்திற்கு செய்யும் அநீதியாகும்.காஷ்மீரிகளை பாராளுமன்றம் மூலம் அநீதி செய்ததற்கு இணையானது.

ஈழ தமிழர்கள் படிப்பு,வேலை வாய்ப்புகளில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.சுய மரியாதை இழந்துள்ளனர்.அகதிகளாய் இருப்பதால் இந்த கூடுதல் அவலம். மதத்தால் மக்களின் குடியுரிமை முடிவு செய்வதில் எந்த சிறு உடன்பாடும் கிடையாது. ஆனால் ஒரு வாதத்திற்காக ஈழ மக்களில் உள்ள இஸ்லாமியவர்கள் இல்லாதோறுக்கு அல்லது “அக் மார்க்” இந்துக்களுக்கு கூட ப.ஜ.கா குடியுரிமை மறுப்பதேன்? தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் அவ்வளவு வன்மமா?

தி.மு.க அதன் கூட்டணி கட்சியினர் இந்த சட்டத்திருத்தத்தை தடுக்கவில்லை என்றால் அது பெரும் வரலாற்று பிழையாக மாறும்.

ஈழத் தமிழர்களை தேர்தல் லாபத்திற்கு மட்டும் பார்க்கும் அவல நிலையால் இந்த அவலம் வந்துள்ளது.

மனித உரிமை பார்வையில் ஈழத் தமிழ் அகதிகளின் இந்திய குடியுரிமைக்கு குரல் கொடுங்கள்!

குறிப்பு – ச.பாலமுருகன் ஒரு மனித உரிமை ஆர்வலர் மற்றும் எழுத்தாளர். பி.யூ.சி.எல் என்ற அமைப்பில் இணைந்து செயல்படுபவர். வழக்குரைஞர். பழங்குடிமக்களின் மீதான மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர். இவர் எழுதிய சோளகர் தொட்டி நாவல் வீரப்பன் தேடலின் போது பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களின் வாழ்வை மையமாக கொண்டது. இவர் தமிநாடு ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்தவர்

Leave a Reply