ஈழத்தமிழர்களுக்கான உலக ஆதரவு நிலை வளர்க்கப்பட வேண்டும்

கோவிட் 19இற்குப் பின்னரான, அமெரிக்காவின், புதிய உலக ஒழுங்கு முறையில், மனித உரிமைகளை மையப்படுத்திய அரசியல், அதன் செல்நெறியாக முன்னெடுக்கப்படும் என்பது இன்றைய அமெரிக்க அரச அதிபர் பைடன் அவர்களின் முடிவாக உள்ளது.

இதனை ஊக்குவிக்கும் வகையில், 24.06.2021 இல் அமெரிக்காவின் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, அமெரிக்க அரசுக்கு அனைத்துலக நீதியை வளர்ப்பதற்கான அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளது. அதில் சிறீலங்காவில் நீதியை வளர்ப்பது குறித்துப் பின்வருமாறு தெரிவித்துள்ளது.

“2019ஆம் ஆண்டு கோத்தபாய இராசபக்ச அதிபர் தேர்தலில் சிறீலங்காவில் தெரிவானதன் பின்னர் அங்கு மக்களின் உயிர்களுக்கும், உடமைகளுக்குமான மனித உரிமைகள் பாதுகாப்பு மிக மேசமான துன்ப நிலைக்கு உள்ளாகியுள்ளது.

2020 பெப்ரவரியில், 2015இல் அனைத்துலக நாடுகளின் மன்றத்தின் மனித உரிமைகள் பாதுகாப்புச் சபைக்குச், சிறீலங்கா, அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற  போர் முடிவடைந்த 2009 வரையான காலப் பகுதியில் நடைபெற்ற யுத்தக் குற்றச் செயல்களுக்கு நீதியையும், பொறுப்புக் கூறலையும் ஏற்படுத்துவோம் என அளித்த உறுதி மொழியை மீறியது.

2021 மார்ச்சில் முடிவடைந்த 46ஆவது அமர்வில் மனித உரிமைகள் சபையில், அதன் அனைத்துலக மனித உரிமைகள் ஆணையகத்திற்குச், சிறீலங்காவை எதிர் காலத்தில் பொறுப்புக்கூற வைப்பதற்கான நடவடிக்கைகளுக்கான தந்திரோபாயங்களை வளர்ப்பதற்கு ஆதரவான, தகவல்களையும், சாட்சியங்களையும்,  ‘திரட்டவும், ஒருங்கிணைக்கவும், ஆராயவும், பாதுகாத்து வைக்கவும்’, அத்துடன் பொருத்தமான  நீதி மற்றும் செயற்பாடுகளுக்கு ஆதரவு அளிக்கவும் ஆணையளித்தது.

அனைத்துலக மனித உரிமைகள் ஆணையகத்திற்கு மேலும் ஆதரவு அளிக்கக் கூடிய வகையில் அனைத்துலக மனித உரிமைகள் ஆணையகத்தின் ஆணையாளர் மிசேல் பச்லெட் அவர்கள், அமெரிக்க அரசாங்கம், பின்வருவனவற்றைச் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார் :-

“சிறீலங்காவை, அனைத்துலகக் குற்றச் செயல்களைச் செய்தவர்களை அவர்களுடைய தேசிய நீதிமன்றமான சிறீலங்கா நீதிமன்றத்தின்  முன் நிறுத்தி, விசாரித்து, தண்டனைகளை வழங்குமாறு அமெரிக்கா வலியுறுத்த வேண்டும். மிக மோசமான மனித உரிமை வன்முறைகளையும், அழிப்புக்களையும் செய்தவர்களுக்கு மேலான பயணத் தடைகளையும், சொத்து முடக்கங்களையும் செய்தல் வேண்டும்.”

அமெரிக்காவின் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் இந்த வழிப்படுத்தலை அமெரிக்க அரசாங்கம் நடைமுறைப் படுத்துவதை அமெரிக்க மக்கள் மூலம் ஊக்குவிக்க வேண்டிய பொறுப்பில் புலம் பதிந்த ஈழத் தமிழர்கள் உள்ளனர்.

வியட்னாம் யுத்தத்தில் அமெரிக்காவின் தவறுகளை அமெரிக்காவுக்கு உணர்த்தி, சீர்மை செய்தவர்கள் அமெரிக்க மக்களே என்பதை உலக வரலாறு தெளிவாக எடுத்துரைக்கின்றது. எனவே உலகத் தமிழர்களாகப் பலம் பெற்றுள்ள ஈழத் தமிழர்கள், அமெரிக்க மக்களுடனான தங்கள் நல்லுறவுகளை, எந்த எந்த வழிகளில் எல்லாம் வளர்க்க இயலுமோ, அந்த வழிகளில் எல்லாம் வளர்த்து, ஈழத் தமிழர்களின் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் என்பதும் அமெரிக்காவின் இன்றைய உலகின் புதிய ஒழுங்கு முறை உருவாக்கத்தில் ஒரு கூறாக இடம் பெறச் செய்தல் வேண்டும்.

அதே வேளை உலகின் தேச அரசுகளில் ஒன்று என்ற தனது அனைத்துலக நிலையைப் பயன்படுத்திச் சிறீலங்கா, பெருகிவரும் ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு நிலைகளைத் தணிப்பதற்கான தனது தந்திரோபாயங்களைத் தொடங்கி விட்டது. இதற்குச் சில உதாரணங்களை எடுத்து நோக்கலாம்.

2022ஆம் ஆண்டு ஆவணி மாதத்திற்கு முன்னதாகச் சிறீலங்காவில் கண்ணிவெடிக் குவிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் நெறிப்படுத்தலைத் தாங்கள் ஒருவருடம் முன்னதாக இந்த ஆனி மாதத்திலேயே நிறைவேற்றி விட்டதாகச் சிறீலங்கா அறிவித்து, அனைத்துலகச் சட்டங்களுக்கு தாங்கள் இணைவாகச் செயற்படுவதாகக் காட்டியுள்ளது.

அனைத்துலகச் சிறுவர் தொழிலளார் நாளில், ‘சிறகுகள் விரித்து பறக்கவே’ என்னும் சிறுவர் உரிமைக்கான குறும் படத்தை, ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலகத் தொழிலாளர் அமைப்புடன் இணைந்து, தயாரித்துத் தன்னைச் சிறுவர் உரிமைகள் நலனில் அக்கறை கொண்ட நாடாகக் காட்சிப்படுத்தியது.

அத்துடன் வீடுகளில் பணியாளர்களாக வேலை செய்யும் பெண்களின் உரிமைகளுக்கான அனைத்துலக தினத்தில், பணிப்பெண்களுக்கான பாதுகாப்பும், தொழில் உரிமைகளும் வழங்கும் நாடுகளில் தான் முதன்மையில் உள்ளதாக வெளிப்படுத்தியுள்ளது.

அவ்வாறே சிறீலங்காவின் நீதி அமைச்சர் அலிசப்ரி ‘அராப் நியூஸ்’ அனைத்துலக ஊடகத்திற்கு அளித்த செவ்வியில் “பயங்கரவாதத் தடைச் சட்டம் மாற்றங்களுக்கு உள்ளாக்கப்படும் அல்லது கைவிடப்படும்” என உலகுக்கு அறிவித்து, தாங்கள் மேற்குலகுடன் நெகிழ்ச்சிப் போக்கில் பயணிக்கத் தயார் எனக் காட்டியுள்ளார்.

அமைச்சர் நாமல் இராசபக்ச சிறீலங்காப் பாராளுமன்றத்தில் முன்மொழிந்த பிரேரணையின் அடிப்படையில் சிறீலங்கா ஜனாதிபதி ‘பொசன்’ பௌத்த மதப் பெருவிழாவையொட்டி கருணை அடிப்படையில் விடுதலை செய்த 93 பேரில், கிட்டத்தட்ட அவர்களின் வாழ்வில் பெரும் பகுதியைப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் கழித்து விட்ட 16 ஈழத் தமிழரையும், விடுதலை செய்துள்ளார்.

அதேவேளை நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையில், தான் தனது கொள்கைகளில் இருந்து அசைய மாட்டாரெனவும், வெளியார் தலையீட்டை அனுமதிக்க மாட்டார் எனவும் உறுதிப்படுத்திச் சிங்கள பௌத்த அரசாகத் தன்னை மீளவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் புலம்பதிந்த ஈழத் தமிழர்களின் ஒருங்கிணைந்த ஒரே குரலிலான சனநாயக வழிகளிலான திட்டங்கள், செயற்பாடுகள் மூலமே ஈழத் தமிழர்களின் அனைத்துலக நீதியை அவர்கள் அடையச் செய்ய முடியும் என்பதே இலக்கின் இவ்வார எண்ணமாக உள்ளது.