ஈழஅகதிகளை அனுப்புவதை சுவிஸ் நிறுத்தாது, ஆனால் தாமதமாகலாம்!

524 Views

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான  தீர்மானம் நிறைவேறி இருக்கின்ற பின்னணியில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பான கொள்கைகளில் மாற்றங்கள் வருமா? என்ற கேள்விகளை அகதிகள் நல அமைப்புகள் எழுப்புகின்றன. இலங்கை அகதிகளைத் திருப்பி அனுப்புவதில்லை என்று பொதுவான முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. அந்நடவடிக்கை தொடரும். தொற்றுநோய் காரணமாக அது தாமதமாகலாம் – என்று சுவிஸ் நாட்டின் குடியேற்றவாசிகளுக்கான செயலகம் தெரிவித்துள்ளது. ‘சுவிஸ் இன்போ’ செய்தி ஊடகம் இத்தகவலை வெளியிட்டிருக்கிறது.

“தற்போதைய நிலைமையின் அடிப்படையில் இலங்கையில் பொதுவான ஆபத்து இருப்பதாகக் கருதுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. அங்கு முழு இனக் குழுமங்களும் அபாயத்தில் இல்லை. எனவே சுவிஸில் ஒழுங்கான வதிவிட அனுமதி இன்றித் தங்கி இருக்கின்ற இலங்கைப் பிரஜைகளைத் திருப்பி அனுப்புகின்ற நடைமுறைகளில் மாற்றம் இருக்காது. ஒவ்வொருவருடைய புகலிட விண்ணப்பங்களும் தனித்தனியே கவனமாக ஆராயப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக அவர்களைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகள் தாமதமாகலாம். ஆனால் பொதுவான ஒரு முடிவாக அது நிறுத்தப்பட மாட்டாது.”என்று சுவிஸ் கூட்டாட்சி அரசின் குடியேற்றவாசிகளுக்கான செயலகம் (State Secretariat for Migration – SEM) தெரிவித்துள்ளது என ‘சுவிஸ்இன்போ’ செய்தி குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply