இலட்சத்தீவு அருகே அமெரிக்க கடற் படை பயிற்சி – இந்தியா கண்டனம்

615 Views

அமெரிக்கக் கடற்படை  இலட்சத்தீவுகளுக்கு மேற்கே 130 கடல் மைல் தொலைவில் உள்ள இந்தியாவின் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் பயிற்சியை இந்த வாரம் மேற்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.

 இந்தப் பயிற்சி  இந்தியாவிடம் முன் அனுமதி பெறாமல் நடத்தப்பட்டதாக இந்தியத் தரப்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆனால் இந்த பயிற்சியை மேற்கொள்வதற்கு தனக்கு உரிமையும் சுதந்திரமும் உள்ளதாக அமெரிக்காவின் ஏழாவது கடற்படை தெரிவித்துள்ளது.

மேலும் சர்வதேச சட்டத்தின்படியே இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டதாக ஏழாவது படைத் தொகுதியின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்தியாவின் சிறப்புப் பொருளாதார மண்டலம் அல்லது துணைக்கண்டப் பகுதியில் இராணுவப்பயிற்சி அல்லது போர்ப் பயிற்சிக்கான அனுமதி பெறப்பட வேண்டும் என்று சர்வதேச சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில்,”சிறப்புப் பொருளாதார மண்டலத்திலும் துணைக்கண்டப் பிராந்தியத்திலும் பிற நாடுகள் இராணுவ, ஆயுதப் பயிற்சி, குறிப்பாக, கடலோர நாட்டின் அனுமதியின்றி ஆயுதங்கள் அல்லது வெடிபொருட்கள் பயன்படுத்தும் பயிற்சியை மேற்கொள்ள கடல்சார் சட்டம் குறித்த ஐ. நாவின் சட்டம் அதிகாரம் அளிக்கவில்லை என்பதே இந்தியாவின் நிலைப்பாடு” என்று இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

Leave a Reply