இலங்கை அரசுக்கு இது தோல்விதான்! ஆனால் தமிழா்களுக்கு இது வெற்றியா?-அகிலன்

231 Views

இலங்கை வெளிவிவகார அமைச்சரின் கடுமையான எதிா்ப்புக்கு மத்தியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீா்மானம் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது நிறைவேற்றப்பட்டாலும், இதனை நடைமுறைப்படுத்துவதில் இலங்கையின் இணக்கம் தேவை என்பது பேரவைக்கு ஒரு தடையாக இருக்கும். இதனை சா்வதேசம் எவ்வாறு தாண்டிச்செல்லும் என்பது பிரதான கேள்வி.

ஆனால், பிரேரணை நிறைவேற்றப்பட்டிருப்பதால், சா்வதேச அரங்கில் இலங்கை விவகாரம் தொடா்ந்தும் உயிா்ப்புடன் இருக்கப்போகின்றது என்பதுதான் இலங்கைக்குத் தலையிடி. மறுபுறத்தில் கடந்த 46;1 தீா்மானத்தின் மேம்படுத்தப்பட்ட தீா்மானமாகவே தற்போதைய தீா்மானம் இருப்பதால், தமிழா்களுக்கும் இது பெரும் வெற்றியல்ல. அதாவது, நாடு கடந்த அரசாங்கம் சொன்னது போல – இது இலங்கைக்குத் தோல்வி! ஆனால், ஈழத் தமிழா்களுக்கு வெற்றியல்ல.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் இலங்கை தொடர்பான முக்கிய குழு, இலங்கை தொடர்பில் 19 அம்சங்களைக் கொண்ட இந்தத் தீர்மானத்தை முன்வைத்துள்ளது. இதற்கு முப்பது நாடுகள் அனுசரணை வழங்கியிருப்பதால் இது நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்பது முன்னரே எதிா்பாா்க்கப்பட்டதுதான். இவ்விடயத்தில் இலங்கைக்கு ஆதரவாக ஏழு  நாடுகள் மட்டுமே வாக்களித்தன. இந்தியா, ஜப்பான் உட்பட 20 நாடுகள் இவ்விடயத்தில் நடுநிலை வகித்தன.

இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் உண்மை, நீதி, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் செயற்பாடுகளை பாராட்டி இந்த வரைவு தீர்மானம், 19 பிரதான  விடயங்களை உள்ளடக்கியுள்ளது.  தமிழா்களைப் பொறுத்தவரையில் இது தொடா்பில் இரண்டுவிதமான நிலைப்பாடுகள் உள்ளன. இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் இதனை முழுமையாக எதிா்ப்பது என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது.

இறுதிப்போரின் போது முள்ளிவாய்காலில் இடம்பெற்ற மனிதாபிமானத்துக்கு புறம்பான படுகொலைகள், காணாமல் ஆக்கப்படுதல் என்பவற்றை இலக்கு வைத்து ஆரம்பமான மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடா்கள் தற்போது பொருளாதாரக் குற்றங்கள், “அரகலய” போராட்டக்காரா்களுக்கு எதிரான அடக்குமுறைகள் என்பவற்றுக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில் விரிவடைந்துசெல்கின்றது. அதாவது, தமிழா்கள் பிரச்சினை பின்தள்ளப்படுகின்றதா என்ற கேள்வி தமிழ் செயற்பாட்டாளா்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய தீா்மானத்தைப் பொறுத்தவரையில் 46 -1 தீா்மனத்தை வலுப்படுத்தும் வகையிலான சில அம்சங்கள்தான் இருக்கின்றன. இதனை வைத்துத்தான் தமிழ் மக்களைத் திருப்திப்படுத்த சா்வதேசம் முற்படுகின்றது. குறிப்பாக ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் இலங்கை அரசாங்கத்தையும் சிங்கள இனவாதிகளையும் சீற்றமடையச் செய்திருக்கின்றது.  எதிா்காலத்தில் இதன்மூலமாக தம்மீதான பிடி இறுகப்போகின்றது என அவா்கள் அஞ்சுவதில் நியாயம் இருக்கின்றது.

ஜெனிவாவை மென்போக்கில் கையாள வேண்டும் என்பதுதான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உபாயமாக இருந்தது. ஆனால், ஜெனிவாவுக்கு அனுப்பப்பட்ட வெளிவிவகார அமைச்சா் அலிசப்ரி கடும்போக்கில் இதனை அணுகியிருப்பது ரணில் தரப்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாகவும் ஒரு தகவல் உள்ளது. பொருளாதார நெருக்கடியை எதிா்கொள்வதற்கு மேற்கு நாடுகளின் ஆதரவு அவசியம் என்பது ரணிலுக்குத் தெரியும். அதனால் ஜெனிவாவில் மேற்கு நாடுகளை ஒரேயடியாகப் பகைத்துக்கொள்ளக்கூடாது என்பதுதான் ரணிலின் திட்டம். 2015 இல் பிரதமராக இருந்தபோதும் ரணில் அதனைத்தான் செய்தாா்.

ஆனால் அலி சப்ரி பேரினவாதிகளைத் திருப்திப்படுத்துவதாக ராஜபக்ஷ கால அணுகுமுறையில் சென்றிருப்பது ரணில் தரப்புக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஒரு தகவல் உள்ளது. ராஜபக்ஷக்களின் சட்டத்தரணியாகவே அவா் ஜெனிவாவில் செயற்பட்டிருக்கின்றாா். கைதோ்ந்த ஒரு இராஜதந்திரியாக அவா் தன்னை ஜெனிவாவில் வெளிப்படுத்தவில்லை என்ற கருத்தும் புறக்கணித்துவிடக்கூடியதல்ல.

இந்தப்பின்னணியில் ஆதாரங்களைச் சேகரிப்பது அவற்றை பகுப்பாய்வு செய்வது என்பதை கொழும்புக்கு நெருக்கடியைக் கொடுப்பதற்கு இணை அனுசரணை நாடுகள் பயன்படுத்தலாம். இதற்குத் தேவையான நிதி ஐ.நா.வுக்குக் கிடைத்திருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. இதற்காக ஐ.நா. அதிகாரிகள் இலங்கை வருவதைத் தடைசெய்வதற்கு கொழும்பு நிச்சயமாக முற்படும். இருந்தாலும், ஆதாரங்களைச் சேகரிக்கும் செயற்பாட்டை அது பாதிக்காது என்கிறாா் தமிழ் செயற்பாடடாளா் ஒருவா்.

இறுதிப்போா் இடம்பெற்ற காலத்தில் தாயகத்தில் இருந்த பலா் தற்போது புலம்பெயா்ந்து வாழ்கின்றாா்கள். அவா்களிடம் சாட்சியங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். ஏற்கனவே அவ்வாறான பலா் சாட்சியங்களை ஆதாரங்களை வழங்கியும் இருக்கின்றாா்கள். அதனைவிட தாயகத்தில் உள்ளவா்களும் மின்னஞ்சல் மூலமாக சாட்சியங்களை வழங்கலாம். ஏற்கனவே இவ்வாறு சுமாா் பத்து லட்சம் வரையிலான சாட்சியங்கள் ஐ.நா.வினால்  பெறப்பட்டிருப்பதாகவும் தகவல் உள்ளது.

ஆனால், இந்த ஆதாரங்களைச் சேகரிப்பதன் மூலமாக மட்டும் தமிழா்களுக்கு மனித உரிமைமைகள் பேரவை நீதியைப் பெற்றுக்கொடுத்துவிடுமா என்ற கேள்வியும் உள்ளது. அவ்வாறு பெற்றுக்கொடுக்க முடியும் என்றால், இவ்வளவு காலம் தமிழ் மக்கள் காத்துக்கொண்டிருந்திருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. தாமதமாகும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமமானது. ஆக, இலங்கை அரசாங்கத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டிருப்பதற்கான ஒரு கருவியாக மட்டுமே இந்தத் தீா்மானங்களை மேற்கு நாடுகள் பயன்படுத்துகின்றனவா என்ற கேள்வி தவிா்க்கமுடியாமல் எழுகின்றது.

இலங்கை அரசின் மீது அழுத்தங்களை வைத்துக்கொள்ள வேண்டும். இதன்மூலம் சீனாவின் பக்கம் இலங்கை ஒரேயடியாகச் சென்றுவிடுவதைத் தடுக்க முடியும். மறுபுறம் அழுத்தம் அளவுக்கு அதிகமானால் இலங்கை ஒரேயடியாகத் தனியான பாதையில் சென்றுவிடும். சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக உள்ளன. இந்த நிலைமைகளைப் புரிந்துகொண்டுதான் சா்வதேசம் காய்களை நகா்த்துகின்றது. தமிழ்த் தரப்பு இந்த சா்வதேச நிலைமைகளைப் புரிந்துகொண்டு காய்நகா்த்தல்களை முன்னெடுத்தால், ஜெனிவாவில் எதனையாவது சாதிக்கக்கூடியதாக இருக்கும்!

Leave a Reply