சமர்களத்தின் சரித்திர நாயகி ஈழத்து மாலதி-பா.அரியநேத்திரன்-முன்னாள் பா.உ

மாலதி என்ற பெயரில் பல பிரபலங்களை அறியமுடியும். அவை,

* மாலதி கிருஷ்ணமூர்த்தி ஹோலா, இந்திய தடகள வீரர்
* மாலதி டி அல்விஸ், செயற்பாட்டாளர்
* மாலதி ராவ், இந்திய எழுத்தாளர்
* மாலதி செந்தூர், இந்திய எழுத்தாளர்
* மாலதி பசப்பா, இந்திய வடிவழகி
* மாலதி லட்சுமணன், இந்திய பாடகர்
* மாலதியோன், ஆர்கனோபாஸ்பேட் பாராசிம்பத்தோமிமடிக்
* மாலத்தினி, தென்னாப்பிரிக்க பாடகி
* மாலதி, 1970 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் திரைப்படம்
* மாலதி தாசி அகில உலக கிருஷ்ண பக்திக் கழகத்தின் மூத்த ஆன்மீகத் தலைவர்
* மாஸ்டர் மாலதி, ஒரு ஆர்த்தடாக்ஸ் துறவி
* மாலதி சவுத்ரி இந்திய குடிமை உரிமைகள் மற்றும் சுதந்திர ஆர்வலர்
* மாலதி கோஷல் இந்திய ரவீந்திர சங்கீத பாடகி
ஆனால் இப்படி பல பிரபலங்கள் மாலதி என்ற பெயரில் அறியமுடிந்தாலும் ஈழவிடுதலைப்போராட்டத்தில் ஆயுதம் ஏந்தி இந்தியப்படையுடன் சண்டை செய்து வீரச்சாவை தழுவிய தமிழிச்சி மாலதி ஆவார். இவர் முதல் தமிழீழ பெண் மாவீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண் விடுதலைபற்றி சுப்பிரமணிய பாரதியார் தொடக்கம் பல அறிஞர்கள் ஏட்டில் எழுதிவைத்தாலும் அதை செயலில் காட்டிய பெருமை ஈழவிடுதலைப்போராட்டத்தில் பெண் போராளிகளுக்கு மட்டுமே உண்டு.

1976, மே,14, ம் திகதி தந்தை செல்வா தமிழர் விடுதலைக்கூட்டணி மூலம் வட்டுக்கோட்டை தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னாளில் 36, விடுதலை இயக்கங்கள் தோற்றம் பெற்றன.

அவை அந்தனை இயக்கங்களும் ஆரம்பத்தில் ஆண் போராளிகள் மட்டுமே கரந்தடி தாக்குதல்களில் ஈடுபட்டனர்.

பெயரளவில் 36, விடுதலை இயக்கங்கள் முகவரி காட்டினாலும் இலங்கை இந்திய ஒப்பந்தம் இடம்பெற்ற 1987, யூலை 29, ம் திகதிக்கு பின்னர் செயல் வடிவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மாத்திரமே செயலாக்கம்பெற்றதும் 2009, மே,18,ம் திகதி முள்ளிவாய்காலில் மௌனிக்கப்பட்டதும் வரலாறாகும்.

கரந்தடி தாக்குதலகளை நடத்திய விடுதலைப்புலிகள் விடுதலைப் போராட்டத்தில் பெண்களையும் அணி சேர்ப்பதினூடாகப் படிப்படியாக சமூகமாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலையையும், தேசவிடுதலையையும் சாத்தியமாக்கலாம் என்ற நோக்கில் , பெண்களும் உள்வாங்கப்பட்டனர். ஆணும், பெண்ணும் சமமான ஆற்றல்களுடனேயே படைக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற உடற் கூற்றியல் நிபுணர்களது, கூற்றுக்கு பெண் புலிகளே உலகுக்கு உதாரணமாக இருப்பார்கள் என்ற நோக்குடன் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் முதன் முதலாக 1985, ஒகஷ்ட், 17, ம் திகதி மகளீர் படையணியை ஆரம்பித்து இருந்தார்கள்.

அப்போதய காலத்தில் இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகி 1987, யூலை,30, ம் திகதி இந்திய அமைதிப்படை இலங்கைக்கு வருகை தந்தது.

1987, அக்டோபர்,10, ம் திகதி இந்தியப்படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் போர் ஆரம்பமானது இந்த போரை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் முதலாம்  கட்ட ஈழப்போர் என பெயர் குறிப்பிட்டு அழைத்தனர்.

இந்த முதலாம்கட்ட ஈழப்போர் இந்தியப்படைகளுக்கு எதிரான மரபு வழிப்போராட்டத்தில்தான் முதன்முதலாக பெண்போராளிகள் பங்குபற்றினர். இந்தப்போர் யாழ்ப்பாணம் கோப்பாயில் ஆரம்பமாகி முதல் நாள் சண்டையில் அன்றே 1987, ஒக்டோபர்,10,ம் திகதி மாலதி வீரச்சாவை தழுவினார்.

ஈழவிடுதலைப்போராட்டத்தில் விடுதலைப்புலிகளால் இந்தியப்படைகளுக்கு எதிராக ஆரம்பித்த முதலாம் கட்ட ஈழப்போரில் சாவைத்தழுவிய மாலதி என்ற பெண் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த  சகாயசீலி பேதுருப்பிள்ளை என்ற இயற்பெயரைக்கொண்டவர். இயக்கத்தின் பெயராக மாலதி என அழைக்கப்பட்டார். இவரை 2ம் லெப்டினட் தரத்துக்கு விடுதலைப்புலிகள் கௌரவம் வழங்கி இருந்தனர்.

ஈழவிடுதலைப்போராட்ட வரலாற்றில் நேரடி சண்டையில் முதலாவது வீ்ரமரணம் அடைந்த பெண்போராளியாக மாலதி கருதப்படுகிறார்.

எமது சமூகத்தில் வேரூன்றியிருந்த கருத்து பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். பெண்ணானவள் இப்படித்தான் இருப்பாள். இதற்கு மேல் அவளால் இயங்க முடியாது. ஆணைவிட பெண்ணுக்கு ஆற்றல் குறைவு என்ற கருத்துக்களைஎல்லாம் தவிடு பொடியாக்கிய பெருமை 2ஆம் லெப்டினட் மாலதியையே சாரும். கடந்த 35, ஆண்டுகளுக்கு முன் பெண்ணினால் எல்லாம் முடியும் என்று செய்து காட்டினாள்.

அதுவும் அந்நிய ஆக்கிரமிப்பில் எமது தேசம் துவண்டிருந்த போது வீறு கொண்டெழுந்தாள். பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாவதைப் பார்த்துக் கொதித்தாள்.நாட்டின் விடுதலையோடு பெண்ணினத்தின் விடுதலையையும் கருத்தில் கொண்டு ஆயுதம் தூக்கியவள், அந்த இலட்சியக் கனவோடே வீரச்சாவை தழுவிக் கொண்டாள்.

வரலாற்றில் எழுந்த இலக்கியம், இதிகாசம், புராணம் என எதுவானாலும் பெண்ணின் புற அழகிற்கே முக்கியத்துவத்தை கொடுத்து பெண்ணின் பலத்தை வெளிக்கொணராமல் போயுள்ளன என்பதே உண்மை. பெண் எனப்பட்டவள் இயலாமையின் வடிவம் என்ற பிம்பத்தை தோற்றுவிப்பதில் சமூகத்தின் பிற்போக்குவாதிகள் வெற்றி கண்டிருந்தனர்.

வீட்டில் ஆண் குழந்தை பிறந்துவிட்டால் மகிழ்ச்சி பெருமிதம். பெண் குழந்தை பிறந்துவிட்டால் கவலை. ஏக்கப் பெருமூச்சு. இதுதான் இன்றுள்ள நிலை. இந்த அவலம் ஏன் நமக்கு ஏற்பட்டது? ஏன் எங்கள் மனங்களில் மாற்றம் வரவில்லை. ஒரு ஆணுக்குரிய ஆற்றல் அவ்வளவும் பெண்ணுக்குள்ளும் இருக்கிறதுதானே. அப்படியிருந்தும் சமூகத்தில் ஏன் இந்தப் பாகுபாடு இந்தக் கேள்விகள் எல்லோர் மனங்களிலும் எழவேண்டும். இதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்கும் திறன் புதிய தலைமுறைக்கு உண்டு.

முன்பெல்லாம்  எமது சமூகத்தில் பெண்களுக்கெதிரான சமூக அநீதிகள் அதிகரித்திருந்தன. பெண் அடக்குமுறைக் கருத்துகள் பலமாக நிலவின. எமது சமூகமே சாதி சமய வேறுபாடுகளால் ஆழமாகப் பிளவுபட்டு நின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக நிலச்சுவாந்தர் முறைமையையும், சாதியக் கட்டமைப்புக்களையும் இறுக்கமாகப் பின்னிப்பிணைத்து அமைந்த பொருளாதார உற்பத்தி முறையில் எமது சமூகக் கட்டமைப்பு எழுதப்பட்டிருந்தது. அது சுய சிந்தனைக்கு வரம்புகளை விதித்தது. பெண்கள் தாம் அடக்கு முறைக்குள் வாழ்கிறோம் என்பதை உணரவிடாது தடுத்தது. அத்தோடு எதிரியின் இன அழிப்புப் போர் என்றுமில்லாதவாறு எம்மண்ணில் தீவிரமடைந்திருந்தது. அந்நிலையில் அடிப்படையான சமூக மாற்றத்தை ஏற்படுத்தி பெண் விடுதலைக்கு வழிசமைப்பது பற்றி நாம் சிந்திக்க முடியாதிருந்தது.

எனவே விடுதலைப் போராட்டத்தில் பெண்களையும் அணி சேர்ப்பதினூடாகப் படிப்படியாக சமூகமாற்றத்தை ஏற்படுத்தி பெண்விடுதலையையும், தேசவிடுதலையையும் சாத்தியமாக்கலாம். இவ்வாறுதான் ஈழவிடுதலைப்போராட்டத்தில் பெண் புலிகள் தோற்றம் பெற்று எதிரியின் படைப்பலத்தைச் சிதைத்து யுத்தத்தின் போக்கையே நிர்ணயிக்கின்ற பெரும் படையணிகளாக எழுந்து நின்றார்கள்.

ஒரு நூற்றாண்டுக்கு மேலாக மேற்குலகப் பெண்கள் பெரும் போராட்டங்களை நிகழ்த்தி, புரட்சிகளை நடத்தி விவாதங்களை புரிந்து கருத்தமர்வுகளை மேற்கொண்டு பெற்றெடுத்தவற்றைவிட எமது பெண் புலிகள் மிக்க குறுகிய காலத்துக்குள் எமது பெண்களுக்குப் பெற்றுக் கொடுத்த உரிமைகளும், சுதந்திரங்களும் அளப்பரியவை. அத்தோடு சமூகத்திலே பெரும் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறார்கள்.

சமூகக் கருத்துலகில் புதிய பார்வையை வளர்த்து வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஆணும், பெண்ணும் சமமான ஆற்றல்களுடனேயே படைக்கப் பட்டிருக்கிறார்கள் என்ற உடற் கூற்றியல் நிபுணர்களது, கூற்றுக்கு பெண் புலிகளே உலகுக்கு உதாரணமாக வாழ்ந்தார்கள்  என அப்போது பல அறிஞர்களால் கூறப்பட்டது.

மாலதி தரைப்படை சமர்களத்தில் உயிர்நீத்தாலும் பல பெண்போராளிகளின் திறைமை மாலதி உயிர் நீத்து ஐந்து  வருடங்களால் ஆண் போராளிகளுக்கு நிகராக 1992,மார்ச்,01,ம் திகதி விடுதலைப்புலிகளால் கடல்புலிகள் மகளீர் அணி ஆரம்பிக்கப்படது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலதி என்ற பெண்போராளி சமர்களத்தில் நேருக்கு நேர் மோதலில் உயிர் நீத்து 35, வருடங்கள் கடந்தன அவருடைய வீரத்தின்வெளிப்பாடாக அவரின் பாதையில் உத்வேகத்துடன் துணிந்து இந்தியப்படையுடனும், இலங்கைப்படையுடனும் 1987, தொடக்கம் 2009, மே, 18, வரை ஆயிரக்கணக்கான பெண்போராளிகள் போராடியதும் மாவீரர்களாக இந்த மண்ணில் உயிர்நீத்த வரலாறுகளும் உண்டு.

தற்போது போர் மௌனிக்கப்பட்டு 13, வருடங்கள் கடந்தாலும் தமிழ்மக்களுக்கான இணைந்த வடக்கு கிழக்கில் இதுவரை அரசியல் தீர்வுகள் வழங்கப்படவில்லை. தொடர்ந்தும் பயங்கரவாத தடைச்சட்டம் அகற்றப்படாமல் தொடர் கைதுகளும் துன்புறுத்தல்களும் இடம்பெற்ற வண்ணமே உள்ளன.

2009,மே,18, முள்ளிவாய்க்கால் மௌனத்திற்கு முன்னர் வடக்கு கிழக்கில் எந்த கிராமத்திலும் பெண்கள் சுதந்திரமாக நடமாடக்கூடிய சூழல்  இருந்தன, ஒழுக்கம் நிறைந்த இளைஞர்களும் கட்டுப்பாடான நிலைமையும் காணப்பட்டது.

ஆனால் இன்று பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளும், பாலியல் துஷ்பிரயோகங்களும், மாணவர் இளைஞர் மத்தியில் போதைவஷ்துக்கள் பாவனை, மதுபானம், புகைத்தல் என தமிழ் மக்கள் மத்தியில் பல சமூக சீர்கேடுகளை திட்டமிட்டு கட்டவிழ்த்து உள்ளனர்.

மாலதி என்ற பெண்போராளி இன்று உயிருடன் இருந்திருந்தால்  அவரும் ஒரு நல்ல தொழில் வாய்புகளுடன் திருமணம் முடித்து மற்றவர்களைப்போல் பிள்ளை குட்டிகளுடன் வாழ்ந்திருப்பார். அவர் வாழ்வைவிட தனது இனமும், தனது நிலமும் விடுதலை பெறவேண்டும் என்ற உயரிய சிந்தனையால் 35, வருடங்களுக்கு முன் எமை விட்டு மறைந்தார். உயிர் நீத்தோரை நினைவு கூருவது எல்லோரினதும் கடமையும் உரிமையும் ஆனால் அது கூட இலங்கையில் இல்லை என்பதே உண்மை.