இலங்கையை நோக்கி நகரும் இந்தியா-இந்தியாவை நோக்கி நகரும் இலங்கை – ஆய்வாளர் பற்றிமாகரன்

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோத்தபாய இராஜபக்சா பதவியேற்றதுமே இந்தியா இலங்கையை நோக்கி நகர்ந்து தனது வெளிவிவகார அமைச்சரையே வாழ்த்துச் செய்தியுடன் இலங்கைக்கு அனுப்பி இலங்கையின் புதிய ஜனாதிபதியை அரசமுறை விருந்தினராக அழைத்துக் கொண்டது.

இந்த அழைப்புக் கிடைத்தவுடனேயே “நாங்கள் சீனாவுக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடக் குத்தகைக்குக் கொடுத்தது தவறு. இது குறித்து சீனாவுடன் மறுஒப்பந்தம் குறித்துப் பேசவுள்ளோம். இந்தியாவுடைய நலனுக்கு எதிரான எதையுமே நாங்கள் செய்ய மாட்டோம்” என இந்தியப் பத்திரிகைக்கே செவ்வி அளித்து இந்தியாவை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டது இலங்கை.

இலங்கையின் சீனத்தூதுவர் கூட அம்பாந்தோட்டைத் துறைமுகம் இலங்கையின் இறைமைக்குள் உள்ளது என்பதால் அது குறித்து அவர்கள் முடிவு செய்யலாம் எனக் கோத்தபாய அவர்களின் சீன ஒப்பந்தம் குறித்த கருத்துக்குப் பச்சைக்கொடி காட்டினார்.

இந்த மாற்றங்கள் ஏன் எதற்கு இவ்வளவு வேகமாக நடைபெறுகிறதென உலகெங்கும் கூர்மையாக நோக்கப்பட்டுக் கொண்டிருந்த சூழ்நிலையிலே, மூன்று நாள் அரசமுறை விருந்தினராகச் சென்ற இலங்கை அரச அதிபருக்குச் செங்கம்பள வரவேற்பு. முப்படைகளின் மரியாதைஇ நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் கூடிநின்று வரவேற்புஇ அரசமுறைக் கலந்துரையாடல்கள்இ விருந்துபசாரங்கள் என அத்தனை அரசமரியாதைகளும் கொடுத்து மகிழ்ந்தது இந்தியா. இருநாட்டுத் தலைவர்களும் இருநாடுகளுக்கும் இடையிலான வரலாற்று சமுக கலாச்சார பொருளாதாரத் தொடர்புகளின் தொன்மையையும் தொடர்ச்சியையும் மீளவும் மீட்டுப்பேசி மகிழ்ந்து கொண்டனர்.

இந்தியப்பிரதமர் நரேந்திரமோடிக்கும் இலங்கையின் அரச அதிபர் கோட்டபாய ராஜபக்சாவுக்கும் இடையில், இலங்கையிலுள்ள தமிழ்ச் சமுதாயத்தினரின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வது குறித்தும், பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்தும், மீனவர்கள் பிரச்சினைகள் குறித்தும் பேசப்பட்டதாகத் தகவல்கள் வெளியான போதிலும் தமிழர்களின் விருப்புக்களை பூர்த்தி செய்வது குறித்த பேச்சுக்கள் தொடர்பான விடயங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்தியா, இலங்கைக்கு அதன் உட்கட்டுமான வளர்ச்சிகளுக்கு என 400 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், இலங்கையின் பயங்கரவாதத்திற்கு எதிரான ஆற்றல்களைப் பலப்படுத்தவென 50 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் கடனாகக் கொடுத்துதவ முன்வந்துள்ளது என்பதே உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாக வெளிவந்துள்ளது.

இருநாட்டுத் தலைவர்களும் பத்திரிகைகளுக்கு அளித்த தகவல்களின் அடிப்படையிலேயே இவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையை விளங்கிக் கொள்ள வேண்டியதாக உள்ளது.

இந்தியா தான் வெற்றி பெற்றவுடன் உத்தியோக பூர்வ விஜயத்திற்கான விரைவான அழைப்பினை விடுத்தமைக்கு நன்றி தெரிவித்த இலங்கை அரச அதிபர் கோட்டபாய ராஜபக்சா “நானும் பிரதமர் மோடியும் பல முக்கிய விடயங்கள் குறித்து இன்று காலை பேசினோம். அவற்றுள் இரண்டு நாடுகளதும் பாதுகாப்புக் குறித்த விடயமே முன்னுரிமை பெற்றது. இந்தியா எப்பொழுதும் சிறிலங்காவினுடைய புலனாய்வு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு ஆதரவு அளித்து வந்துள்ளது. இதனைத் தொடர வேண்டும்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்கள் சிறிலங்காவை அதன் தேசிய பாதுகாப்புத் தந்திரோபாயங்களை மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளது. இதற்கு இருநாடுகளதும் தொடர்ச்சியான கூட்டுறவு தேவை. இந்தியப் பிரதமரின் உத்தரவாதங்கள் உற்சாகமூட்டுவதாக உள்ளன. இருநாடுகளுமே இந்துமாக்கடல் பகுதியினை அமைதிப்பிரதேசமாக வைத்திருக்கவே விரும்புகின்றன. இலங்கையில் பிடித்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்க கொழும்பு நடவடிக்கைகள் எடுக்கும். ஒருநாடு மற்ற நாட்டை அதன் சுயமரியாதையுடன் மதித்தலும்இ பெறுமானங்களைப் பகிர்ந்து கொள்ளுதலும் இருநாடுகளுக்கும் இடையிலான இருதரப்புக் கூட்டுறவைப் பலப்படுத்தும்” எனப் பத்திரிகைகளுக்குத் தெரிவித்ததாக இந்து ஆங்கிலப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.Rajapaksa Modi இலங்கையை நோக்கி நகரும் இந்தியா-இந்தியாவை நோக்கி நகரும் இலங்கை - ஆய்வாளர் பற்றிமாகரன்

இந்தியப் பிரதமர் மோடி “ இவ்வாண்டு ஈஸ்டர் தினத்தன்று சிறிலங்காவில் மனிதகுலத்தின் பன்முகத்தன்மைக்கும் பாரம்பரியமான கூட்டு வாழ்வுக்கும் மேல் கொடூரமான தாக்குதல்களைப் பயங்கரவாதிகள் நடாத்தினர். இந்தியத் தேர்தலை அடுத்து நான் இலங்கைக்குச் சென்று பயங்கரவாதிகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் எதிரான சிறிலங்காவின் போராட்டத்திற்கு இந்தியாவின் அசைக்கமுடியாத ஆதரவை வெளிப்படுத்தினேன். இந்தியாவின் முக்கிய நிறுவனங்களில் உள்ள சிறிலங்காவின் பொலிசார் ஏற்கனவே பயங்கரவாதத்திற்கு எதிரான பதில் நடவடிக்கைப் பயிற்சிகளின் பலன்களைப் பெற்றுள்ளனர். இலங்கையில் பலமான அரசு அமைவது இந்தியாவுக்கும் முக்கியம்.

வடக்கு கிழக்கில் உள்ளக இடப்பெயர்வு அடைந்தவர்களுக்கு இந்தியா 46,000 வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் திட்டத்தைச் செயற்படுத்தி உள்ளது. அதே போல இந்திய வம்சாவழியினருக்கு மலையகத்தில் 14,000 வீடுகளை இந்தியா கட்டுவதிலும் வெற்றிகரமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முடிக்கப்பட்டுள்ளன.” எனத் தெரிவித்தாகவும் இந்து ஆங்கிலப் பத்திரிகை செய்தி அளித்துள்ளது.

பலமான அரசு என்பது அந்த அரசுக்கான மக்களின் பலமான ஆதரவிலும், அந்த அரசின் படைகளின் பலத்திலும் நோக்கப்படுகிற ஒன்று. சிங்களப் பௌத்த பேரினவாதம் தனது பலத்தை கோத்தபாயா அவர்களுக்கு முற்று முழுதாக வாக்களித்தது மூலம் வெளிப்படுத்திக் கொண்டது. தமிழ்பேசும் மக்கள் முற்று முழுதாக கோத்தபாயாவை எதிர்த்து வாக்களித்தமை என்பதை கோத்தபாயா உள்நாட்டில் தீர்க்க வேண்டும் என்னும் இந்தியா உட்பட்ட எல்லா வெளிநாடுகளும் வாக்குப் பலம் பெற்று பதவிக்கு வந்துள்ள புதிய அரச அதிபருக்கு படைபல மேம்பாட்டுக்குரியனவற்றைச் செய்து தங்கள் தங்கள் சந்தை நலன்களுக்கும் இராணுவ நலன்களுக்கும் புதிய அரச அதிபரை வளைத்துக் கொள்ள வேண்டும் என்பதே இன்றைய உலகின் வெளிவிவகாரக் கொள்கையாக உள்ளது. இதனாலேயே முதல் தூண்டிலாக 3150 கோடி இந்திய ரூபாக்கள் இலங்கைக்கு இந்தியா உடனே கொடுத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக நாளை பாக்கிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் மக்தூம்  மஹ்மூத் குரோசி வருகிறார். அவரும் பல கோடி உதவிகளை வழங்குவார் என எதிர்பார்க்கலாம். இதனை அடுத்து உலக நாடுகள் பலவும் வரிசையாக இலங்கைக்கு உதவுவர். இலங்கை அரச அதிபரும் இலங்கை பல்லின பல்கலாச்சார நாடு என்பதை எடுத்துரைக்கக் கூடிய பலவிதமான நம்பிக்கை மொழிகளைப் பேசுவார்.

ஆனால் அவரால் இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாதத்தை வெல்ல முடியாது என்று அவருக்குத் தெளிவாகத் தெரியும் என்பதால் “ நான் பௌத்த சிங்கள வாக்குகளாலேயே வென்றேன்” எனவும் “ துட்டகைமுனு சமாதி” யிலேயே பதவிப்பிரமாணம் செய்தேன் எனவும் அடித்துப் பேசாமல் இருக்க முடியாது.

அதே வேளை சிங்கள பௌத்த பேரினவாதிகளின. செயல்களின் மனித உரிமை மீறல்கள் இனஅழிப்புக்கள் கலாச்சார இன அழிப்புக்கள் என்பனவற்றில் இருந்து அவர்களையும் தன்னையும் உலகத்திடம் இருந்து காப்பாற்றும் கவசமாக ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டலை மறுத்தல் புதிய அதிபரின் நோக்காகவும் போக்காகவும் தொடரும். இதனால் உலகநாடுகள் மேற்கொள்ள கூடிய அழுத்தங்களைத் தடுப்பதற்கான கேடயமாகவே இன்றைய அரச அதிபர் கோத்தபாயாவுக்கு இந்தியா தேவையாகிறது. 2020 ஜெனிவா மனித உரிமைகள் அமர்வில் இதனைத் தெளிவாகக் காணலாம்.