கடற்படை முன்னாள் தளபதி வசந்த கரண்ணாகொடவிற்கு ”அட்மிரல் ஆஃப் த ஃப்லீட்” எனும் கௌரவ பட்டமும், விமானப் படை முன்னாள் தளபதி ரொஷான் குணதிலக-வுக்கு ”மார்ஷல் ஆஃப் த ஸ்ரீலங்கா ஏர்போர்ஸ்” எனும் கௌரவ பட்டமும் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த கௌரவப் பட்டங்களை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கிறது.
அட்மிரல் ஆஃப் த ஃப்லீட் வசந்த கரண்ணாகொட, இலங்கை கடற்படையின் தளபதியாக 2005ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதி முதல் 2009ஆம் ஆண்டு ஜுலை 14ம் தேதி வரை பணியாற்றியுள்ளார்.
இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வசந்த கரண்ணாகொட கடற்படை சார்பில் பாரிய பங்களிப்பை வழங்கியிருந்ததாக அரசாங்கம் தெரிவிக்கிறது.
இலங்கை விமானப் படை தளபதியாக, மார்ஷல் ஆஃப் த ஸ்ரீலங்கா ஏர்போஸ் ரொஷான் குணதிலக 2006ம் ஆண்டு ஜுன் 12ம் தேதி முதல் 2011 பிப்ரவரி 27 வரை கடமையாற்றியிருந்தார்.
ரொஷான் குணதிலகவும் இலங்கை உள்நாட்டு யுத்தம் நிறைவு பெறுவதற்கு பாரிய பங்களிப்பை வழங்கியிருந்ததாக அரசாங்கம் கூறுகிறது.
இலங்கையில் 30 ஆண்டுகள் நடந்த உள்நாட்டு யுத்தத்தை நிறைவு செய்வதற்கு வழங்கிய அர்ப்பணிப்பை கௌரவிக்கும் வகையிலேயே இந்த இருவருக்கும் ஜனாதிபதி இன்று கௌரவ பட்டங்களை வழங்கியுள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவிற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஃபீல்ட் மார்ஷல் கௌரவ பட்டத்தை 2015 மார்ச் 22ம் தேதி வழங்கினார்.
தமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரம்
2008 மற்றும் 2009ஆம் ஆண்டு காலப் பகுதியில் கொழும்பு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தமிழர்கள் உள்ளிட்ட இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துடன் அதி உயர் கௌரவம் வழங்கப்பட்டுள்ள கடற்படை முன்னாள் தளபதி வசந்த கரண்ணாகொட-வுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தமிழ் இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வசந்த கரண்ணாகொடவிடம், குற்றப் புலனாய்வு திணைக்களம் பல்வேறு சந்தர்ப்பங்களில் விசாரணையும் நடத்தியிருந்தது.
கொழும்பு – கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தை, தெஹிவளை உள்ளிட்ட பகுதிகளில் இந்த இளைஞர்கள் கடத்தப்பட்டிருந்ததாக அவர்களது உறவினர்கள் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியிலேயே முறைப்பாடுகளை பதிவு செய்திருந்தனர்.
அன்று முதல் தொடர்ச்சியாக குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை நடத்திவருகிற போதிலும், இந்த கடத்தல் விவகாரம் தொடர்பில் இதுவரை விசாரணைகளை நிறைவு செய்துக் கொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பின்னணியில், இராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவிற்கு இராணுவத்தின் அதிவுயர் பதவியான பீல்ட் மார்ஷல் பதவியை வழங்கி கௌரவித்திருந்தார்.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கியிருந்த நிலையிலேயே இந்த கௌரவம் வழங்கப்பட்டிருந்தது.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு கௌரவம் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்திலேயே கடற்படை முன்னாள் தளபதி வசந்த கரண்ணாகொட மற்றும் விமானப்படை முன்னாள் தளபதி ரொஷான் குணதிலக ஆகியோருக்கும் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கவேண்டும் என கூறப்படுகிறது.
இதேவேளை, இலங்கை உள்நாட்டு யுத்தத்தின்போது, யுத்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி இலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக நியமித்தது குறிப்பிடத்தக்கது.
தமிழர் எதிர்ப்பு
தமிழர்களுக்கு எதிராக கொடூரமான செயற்பாடுகளை செய்தமை வெளிச்சத்திற்கு வந்த நிலையில், வசந்த கரண்ணாகொடவிற்கு இந்த பதவி வழங்கப்பட்டதன் பின்னணியில் தமிழர்களுக்கு எதிரான செயற்பாடுகள் காணப்படுவதாக காணாமல் போனோரை தேடி அறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் தெரிவிக்கிறார்.