இலங்கையின் தற்கால அரசியல்: ஓர் பார்வை – பகுதி – 2

2,467 Views

கடந்த 2019 இற்குப் பின்னரான காலப் பகுதியில் இருந்து புதிய நிர்வாக அமைப்பினரால் இலங்கையில் நடைபெற்று வருகின்ற அரசியல் சார்ந்த நகர்வுகள், செயற்பாடுகளை தற்கால அரசியலாக நோக்கலாம். இலங்கை வளர்ந்து வருகின்ற தென்னாசிய, புவியியல் எல்லைக்குள் உள்ள ஒரு நாடாகக் காணப்படுகின்ற அதேவேளை, உலக அரசியலில் அதிகம் பேசப்பட்டு வருகின்ற ஒரு அரசியல் பின்னடைவை எதிர் நோக்கியுள்ள நாடாகவும் கடந்த காலங்களிலிருந்து பார்க்கப்பட்டு வருகின்றது. இலங்கையின் தற்கால அரசியல் நகர்வை பின்வரும் ஐந்து அம்சங்களின் ஊடாக முன்வைக்கலாம். இந்த அடிப்படையில் விரிவாக நோக்குகின்ற பொழுது,

  1. வெளியுறவு கொள்கையின் புதிய போக்கு

தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை புதிய தளத்தில் பயணிக்கின்றதா என்ற சந்தேகம், தற்போதைய அரசியல் நகர்வில் எமக்கு ஏற்படுகிறது. காரணம் அணிசேராமை என்ற பழைய சிந்தனையை முதன்மைப் படுத்துகிறது. அது காலாவதியாகி பல தசாப்தங்கள் நிறைவடைந்து விட்டன. அதுமட்டுமன்றி புதிய உலக தரிசனம் கோவிட்-19 பின்பு ஏற்பட்டுவரும் இரு துருவம் கூட முழுமையை அடையாத போது கொலம்பகே அணிசேராமை எனத் தெரிவிப்பது குழப்பமாக உள்ளது. இதனையே ஜனாதிபதி கேட்டபாய ராஜபக்சவும் தனது பதவியேற்பில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார். அப்படியாயின் அணிசேராமை என்ற சிந்தனைக்கான அணிகள் எவை என்பதுவும் அத்தகைய அணிகளை இனங் காணவும் முடிகிறதா என்பதுவும் பிரதான கேள்வியாகும். அணிசேராமை எனும் சிந்தனையை முன்மொழிந்த இந்தியாவே அமெரிக்கா பக்கம் இருக்கும் போது, அணிசேராமை என்ற சிந்தனைக்குள் இயங்குவதென்பது புரிந்து கொள்ளப்பட முடியாத வெளிநாட்டுக் கொள்கையாகத் தெரிகிறது. உண்மையாகவே இலங்கை பேசும் அணிசேராமை என்பது சீனா பக்கமும் சாயாது, இந்தியா பக்கமும் சாயாது செயல்படுகிறோம் என்று நாடகமாடுவதை அணிசேராமை என அழைப்பது பொருத்தமானதாக அமையாது. அணிசேராமை என்பது இரு துருவ உலக ஒழுங்கு நிலவிய போது ஆசிய ஆபிரிக்க இலத்தீன் அமெரிக்க கண்டத்து நாடுகள் இரு துருவங்களிலிருந்தும் விலகியிருப்பதுடன், எந்த அணியோடு தமது பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமோ அந்த அணியுடன் சேர்ந்து செயற்படுவதனையும் நடைமுறை கொள்கையாகப் பின்பற்றி வந்தன. இது அதன் சிந்தனையில் உயிர் வாழ்ந்ததே அன்றி, செயலில் அநேக அரசுகள் அணிசேர்ந்து செயற்பட்டதை காணமுடிந்தது. அத்தகைய ஒரு வறுமையான சிந்தனையை இருபத்தியோராம் நூற்றாண்டு அரசொன்று பின்பற்றுவதாக கூறுவது அதன் கொள்கையின் வங்ரோத்தினையே காட்டுகிறது. அல்லது உலக நாடுகளை ஏமாற்றவும், கையாளவும் தயாராகின்ற உத்தியைக் காட்டுகிறதாகவே தெரிகிறது.

தற்போது இந்தியாவுக்கு வெளியுறவுக் கொள்கையில் முதலிடம் எனக் கூறும் வெளிவிவகாரச் செயலாளர், மறுபக்கத்தில் கொழும்பு கிழக்குமுனை கொள்கலன் இறங்குதுறையை வழங்க மறுத்தது. இத்தகைய முரணியம் இந்தியாவுக்கு மட்டுமானதா அல்லது ஆசிய நாடுகளுக்கானதா என்ற குழப்பம் ஏற்படுகிறது. அல்லது அமெரிக்க நட்பு நாடுகளுக்கானதா என்ற சந்தேகத்தினை தருகிறது. இலங்கையின் பொருளாதாரத்திலும், சமாதான உரையாடலிலும் ஜப்பானின் பங்களிப்பு மிக வலுவானதாக அமைந்திருந்தது. ஆனால் தற்போதைய அரசாங்கம் ஆசியா நோக்கிய வெளியுறவுக் கொள்கையை வகுக்கப் போவதாகக் கூறிக் கொண்டு, ஜப்பானையும் விலக்கிக் கொள்ள முனைகிறது. ஜப்பானை மட்டுமல்ல, இந்தியாவை மட்டுமல்ல மேற்குக்கு ஆதரவான நாடுகளை விலக்கிக் கொள்ள இலங்கை முனைகிறதா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அவ்வாறே அமெரிக்கா உட்பட்ட மேற்குலகத்திற்கு மாறான ஒரு வெளியுறவுக் கொள்கையை உருவாக்கப் போவதாக கெலம்பகே தெரிவித்திருந்தது நினைவு கொள்ளத்தக்கது. இத்தகைய நிலையினைப் பார்க்கும் போது இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் மூன்று விடயங்களை அவதானிக்க முடிகிறது.

ஒன்று இலங்கை கோவிட்-19 பின்பான உலகத்தினை சரிவரக் கண்டறிந்து தெளிவான வெளியுறவுக் கொள்கையினை வகுக்க முடியாது திண்டாடுகிறது. அதனால் தான் முன் பின்னான முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் விதத்தில் வெளியுறவுச் செயலாளரது கருத்துக்கள் அமைகின்றன. வெளிப்படையாக சீனாவை நோக்கிய வெளியுறவை வகுக்கிறதா? அல்லது மேற்குலகத்திற்கு எதிரானதாக அமைகிறதா? அல்லது ஆசியாவை மட்டும் முதன்மைப்படுத்தப் போகிறதா? அல்லது இந்தியாவுக்கு முதலிடம் எனக் கூறுவது சாதகமானதாக அமையுமா?  அமெரிக்க உறவை எப்படி இந்தியா சாத்தியப்படுத்தும் என்ற கேள்விகள் எழுகின்றன.

இரண்டாவது இந்தியாவை இலங்கை வெளியுறவுக் கொள்கை கையாள ஆரம்பித்துள்ளது என்பதைக் காட்டும் அணுகுமுறைகளை கொண்டிருகிறது என்பது தெளிவாக புலப்படுகிறது. அதாவது இந்தியாவுக்கு வெளியுறவில் முதலிடம் என்று கூறும் வெளியுறவு அமைச்சு கொழும்பின் கிழக்குக் கொள்கலன் இடமாற்று துறைமுகத்தை வழங்க மறுத்தது. அதற்கு இலங்கை கூறும் காரணம் தொழில் சங்க நடவடிக்கைகள். ஆனால் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தினையும், மாத்தள விமான நிலையத்தையும் சீனாவுக்கு வழங்க முயன்ற போது தொழில்சங்க நடவடிக்கை நிகழ்ந்தது. அவ்வாறே நுரைச்சோலை மின் நிலையம் தொடர்பிலும் தொழில்சங்க நடைமுறை நிகழ்ந்தது. எனவே இது இந்தியாவை கையாளும் உத்தியாகவே தெரிகிறது.

மூன்றாவது ஆசியாவை நோக்கிய வெளியுறவுக் கொள்கை என்பது, கடந்த 2005 -2015 வரையான காலத்தை நினைவு கொள்வதாக தெரிகிறது. அதாவது சீனாவை நோக்கிய வெளியுறவுக் கொள்கைக்கான அணுகுமுறைகளை தற்போதைய புதிய அரசாங்கம் மீண்டும் ஆரம்பித்துள்ளதாகவே தற்போது வரையும் தெரிகிறது. அதனை வெளிப்படையாக இல்லாது விட்டாலும் உள்ளார்ந்த ரீதியில் அரசாங்கம் தற்போது அதனை நோக்கியே நகர்கிறது. இதில் இந்தியாவின் அணுகுமுறையே காலம் தாழ்த்திய அல்லது பிந்திய கருத்தாடலாக அமைந்துள்ளது. அதாவது இந்தியாவின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர் தெரிவித்துள்ள (21.08.2020) கருத்துக்களும், அண்மையில் இந்து பத்திரிகை(22.08.2020) எழுதிய ஆசிரியர் தலைப்பும் காலம் தாழ்த்தியதும் வலிமையற்றதுமாகவே தெரிந்தது. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் தோல்விக்கு பின்பு இந்திய உயர் ஸ்தானிகரைச் சந்தித்தமை எப்படிக் காலவதியான அணுகுமுறையோ அவ்வாறே இந்தியாவின்; அணுகுமுறையும் காணப்படுகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் இந்தியாவின் 13 பாதுகாப்பதோ 19 ஐ பேணுவதற்கான விண்ணப்பம் இலங்கை அரசாங்கத்தினால் அனுசரிக்கப்படுமா என்பது சந்தேகமானதே. அது தனித்து இந்தியாவுக்கு மட்டும் உரிய நெருக்கடியல்ல, ஒட்டுமொத்தத் தமிழ் மக்களுக்குமான நெருக்கடியாகவே அமைய வாய்ப்புள்ளது. இலங்கை ஜனநாயகத்தினயும், அதிகாரப் பரவலையும் முதன்மைப்படுத்தும் நிலையைக் கடந்து பயணிக்க ஆரம்பித்து விட்டது. எனவே இந்தியாவை கையாளும் உபாயத்தை இலங்கை பின்பற்ற ஆரம்பித்துள்ளதையே வெளியுறவுச் செயலாளரது வெளிப்படுத்துகைகள், தற்போதைய அரசியல் வெளியுறவுக் கொள்கைகள் காட்டுகின்றன. அதேநேரம் சீன சார்ப்பு வெளியுறவுச் கொள்கையை நோக்கி செயற்படுகின்றமையும் தெரிகிறது

  1. 01 சீன சார்புக் கொள்கை

சீன சார்புக் கொள்கை தற்போதைய இலங்கை அரசியலில் காணப்படுகின்ற முக்கியமான அம்சம். இதுவரை இல்லாத வகையில் இலங்கையின் சமகால அரசியலில் சீனத் தலையீடு அதிகம் காணப்படுகின்றது. மேலும் இலங்கை, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையில் பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான உடன்படிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இவையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக சீன காலனித்துவத்திற்குள் போவதான போக்கினை காட்டுகிறது. மேலும் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் படியான இந்திய உறவிற்கு விரிசலை ஏற்படுத்தும் வகையில் இச் சீன சார்புக் கொள்கை அமைந்துள்ளதாகவும் விமர்சனம் செய்யப்படுகிறது. சீனா உலகளவில் சிறிய நாடுகளை வசப்படுத்தி ஆதாயம் காணும் ஒரு போக்கினை கொண்டு நாளடைவில் அந்நாடுகளை ஆளும் தந்திரத்திலேயே இவ்வாறான அபிவிருத்தி வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இந்த அடிப்படையில்தான் இலங்கையின் மீதான ஆதாயப் போக்கும் உள்ளது. இதற்கு தற்போதைய அரசியல் தலைமைகள் கை கொடுத்துள்ளனர். அந்த வகையில் இலங்கையில் சீனாவினால் முன்னெடுக்கப்படும் நலத் திட்டங்களில் பெரும்பாலான இடங்களில் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் அதேவேளை, சீன மொழிக்கும் அதே அளவிலான முன்னுரிமை வழங்கப்பட்டு, தமிழ்மொழி முழுமையாகவே புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. இந்த வகையில் சீனாவின் நிதியுதவியின் கீழ் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற கொழும்புத் துறைமுக நகர் திட்டத்திலுள்ள பெயர்ப் பலகைகளில் சிங்களம், ஆங்கிலம், சீன மொழிகள் காணப்படுகிறது. தமிழ் மொழி அங்கு புறக்கணிக்கப்பட்டுள்ளது.

சென்ட்ரல் பார்க் என கொழும்புத் துறைமுக நகரில் வைக்கப்பட்டுள்ள பெயர்ப் பலகையில், முதலில் சிங்களம், இரண்டாவதாக ஆங்கிலம், மூன்றாவதாக சீன மொழியில் எழுதப்பட்டுள்ளமை மிக முக்கியமான சார்பு போக்கு எனலாம்.

எடுத்துக்காட்டாக

இவ்வகையில் இலங்கையில் தற்போதைய அரசியலில் அம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் கொழும்புத் துறைமுகம் மற்றும் வடக்கு கிழக்கு மின் அபிவிருத்தி உள்ளிட்ட பெரும்பாலான திட்டங்கள் சீனாவிற்குச் சொந்தமானவையாகக் காணப்படுவதுடன், யாழ்ப்பாணத்தின் 03 தீவுகளை 05 வருடங்களுக்கு ஒப்படைக்கும் உடன்படிக்கை மற்றும் இந்தியாவிற்கு செய்யப்பட்ட இந்த டிரான்ஸ் ஷிப்மென்ட் திட்டம் கிழக்கு கொள்கலன் முனையம் (East container terminal) என்று அழைக்கப்படுகிற திட்டம் நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் 2019 மே மாதம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன – பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் போது செய்யப்பட்டது. இதை இந்தியாவும், ஜப்பானும் இணைந்து செய்யவிருந்தன. ஆயினும் இவ் ஒப்பந்தங்கள் மீறப்பட்டு 2020 செப்டம்பர் சீனாவிற்கென ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இவ்வகையில் தற்போதைய அரசியல் நகர்வில் சீனசார்புக் கொள்கை ஆதிக்கம் செலுத்தி வருவதனைக் காணலாம்.

  1. நல்லிணக்கப் பிளவு

நல்லிணக்கப் பிளவு இலங்கையின் சமகால அரசியல் போக்கில் மிக முக்கியமான விடயம். கடந்த ஆட்சியின் போது பெயரளவிலாவது நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் நகர்வுகள் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கின்ற முயற்சியாகவே காணப்படுகின்றது. இவை பெரும்பாலும் ஊடகங்களின் நச்சுப் பிரச்சாரங்களின் மூலமாகவும் ஏற்படுத்தப் படுகினவாகவும் உள்ளன. இவ்வகையில் தற்போதைய அரசாங்கத்தில் இன, மத வெறுப்புணர்வை கையாளாமல் விட்டுவிடுவதால் ஏற்படக் கூடிய பிரதி விளைவுகளை இலங்கையின் தற்போதைய அரசாங்கம் போதுமான அளவுக்கு அனுபவித்து விட்டது. குறிப்பாக இன மத முற்சாய்வுகளைக் கொண்டு சிறுபான்மை இன மதங்களை புறமொதுக்கல்கள் செய்கின்ற செயற்பாடுகளாக தொடராக முன்னெடுக்கப்படுகின்றன. இந்த அடிப்படையில் பெரமுன கட்சி பதவியேற்பு மற்றும் கட்சி சார்ந்த எந்தவொரு அரசியல் நிகழ்வுகளும் பெளத்தமத அனுசரணையுடனேயே முன்னெடுக்கப்படுகிறது. அத்துடன் பெளத்த மதவாதிகள் அரசியல் நிர்வாகத்தில் பலவந்தமாக தலையீடு செய்கின்ற போக்கு உள்ளது. அண்மையில் முஸ்லிம் அமைச்சர்களை பதவி விலக்க பிக்குகள் உண்ணாவிரதம் செய்தமை இதன்படி, சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியூதீன், அமீர் அலி,  அப்துல்லா மஹரூப், அலிசாஹிர் மௌலானா, எச்.எம்.எம்.ஹரிஷ்,  பைசர் காசீம்  ஆகியோர் பதவி விலக்கப்பட்டமை, மற்றும் பெளத்த மதம் தவிர்ந்த ஏனைய மதங்கள் அபிவிருத்தி திட்டங்களின் போது பெருமளவிலாக கவனிக்கப்படாமை போன்றன மதங்களுக்கிடையிலான முற்சாய்வை – வெறுப்புணர்வை மேலும் வளர்ப்பதாகவும், அதேவேளை நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயற்பாடாகவும் காணப்படுகின்றது.

மேலும் தற்போதைய அரசாங்கம் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டு செயற்படவில்லை. தமது இன மத நலன் காக்கும் வகையில் பக்கச் சார்புடனேயே ஒருவித பாசிசப் போக்கில் நகர்கின்றது. இந்த நிலையில் நியாயமான உறவு நிலைகள் கட்டியெழுப்பப்படாமல், இன மதங்களுக்கிடையில் வெறுப்புணர்வு அதிகளவில் உருவாகி பிரச்சினைகள் பலவும் தற்போதைய அரசாங்கத்தில் ஏற்பட்டு வருகின்றன .

ஒட்டுமொத்தமாக இலங்கையின் தற்கால அரசியல் ஒருவித சர்வாதிகாரப் போக்கில் நகர்வதனை மேற்கூறப்பட்ட அம்சங்கள் மூலமாக உணர முடிகிறது. என்ன தான் பல்லின நாடாக இருந்தாலும் 2/3 பெரும்பான்மை இருந்தால் தான் எல்லாம் நிறைவேறும் என்ற அடிப்படையில் சிறுபான்மையினர் நல்வாழ்வு தொடர்பாக அரசாங்கம் அசட்டையாக இருத்தல் போன்ற செயற்பாடுகள் இனங்களுக்கிடையில் சமரசமில்லாத முரண் நிலைகளைத் தொடர்ந்தும் ஏற்படுத்தி வருவதுடன், சிறுபான்மையினருக்கு திருப்திகரமற்ற அரசியல் நிர்வாகத்தினரால் பலவந்தமாக ஆட்சி முன்னெடுக்கப் படுவதனையும், அதேசமயம் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதையும் தற்போதைய அரசியல் நிர்வாகம் ஒருபோதும் கவனம் எடுக்கவில்லை என்பதனையும் இலங்கையின் தற்போதைய அரசியல் நகர்வுகள் காட்டுகின்றன.

இந்த நிலைமை மாற்றப்படல் வேண்டும். நாம் இலங்கையர் என்ற உணர்வு எல்லோர் மனதிலும் வரவேண்டும். அத்துடன் இலங்கையின் அரசியல் நிர்வாகத்தினர் சர்வாதிகார இராணுவப் போர்வையைக் கழற்றிவிட்டு ஜனநாயக யதார்த்தத்தை கைக்கொண்டு, இனங்கள், மதங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பாடுகள், நகர்வுகளை முன்னெடுக்க வேண்டியது இன்றைய தேவையாகும்.

யே.மேரி வினு

4ம் வருடம்

சமூகவியல் துறை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

 

Leave a Reply