எனக்கும் என் குடும்பத்திற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது- அசேல சம்பத்

தனக்கும் தனது குடும்பத்தவர்களுக்கும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதுடன் அரசியல் தஞ்சம் கோரவுள்ளதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவரும் சமூக ஆர்வலருமான அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

கடந்த 25ம் திகதி இரவு 8.30 மணியளவில் வெள்ளை வானில்  (NE 0833) கடத்தப்பட்டதாக காவல்துறையில் முறைப்பாடு  செய்யப்பட்டதோடு, அவரின் மகள் இது தொடர்பில் சமூகவலைத்தளங்களில் தகவல்களைப் பதிவு செய்திருந்தார்.

இதனால் நெருக்கடிக்குள்ளான இலங்கை அரசு தாமே கைது செய்துள்ளதாக மறுநாள் (26) ஒப்புக் கொண்டிருந்ததுடன், அவரைப் பிணையிலும் விடுதலை செய்துள்ளது.

இந்நிலையில்,  வீட்டிலிருந்து வெளியே வருவதற்கே அச்சமடைந்துள்ளதாக அசேல சம்பத்  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பொதுமக்கள் தொடர்பான விவகாரங்களில் எனது பங்களிப்பு காரணமாக அமைச்சர்கள் என்னையும் எனது குடும்பத்தவர்களையும் தாக்குவார்கள் என அச்சமடைந்துள்ளேன்.

பொதுமக்கள் தொடர்பான விபரங்களை பேசுவதற்கு நான் ஒருபோதும் அஞ்சுவதில்லை. தற்போது ஆள்கடத்தல்கள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன.

எனது மற்றும் எனது குடும்பத்தவர்களினது பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்காவிட்டால் வெளிநாட்டு தூதரகங்களின் முன்னாள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டுள்ளேன்.

ஜனாதிபதி கோட்டாபய  ராஜபக்சவிற்கு இது தொடர்பில் கடிதமொன்றை எழுதவுள்ளேன்.  முன்னாள் முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கதலைவருக்கு நடந்தது எனக்கும் நடப்பதற்கு அனுமதிக்கவேண்டாம்  என ஜனாதிபதி பிரதமர் உட்பட சம்பந்தப்பட்ட அனைவரையும் கோரவுள்ளேன்.

25ம் திகதி இரவு நான் வீட்டிலிருந்தேன்,ஜனாதிபதியின் உரையை அவதானிப்பதற்காக தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன். அவ்வேளை 20 பேருடன் வெள்ளை வான் எனது வீட்டிற்கு வந்தது,சிலர் சிஐடி அடையாள அட்டையை காண்பித்தனர், பின்னர் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை முற்றாக மீறி என்னை தாக்கி வானிற்குள் இழுத்துச்சென்றனர்- அவர்கள் அதற்கான காரணங்களை தெரிவிக்கவில்லை. அவர்களிடம் பிடியாணையும் இருக்கவில்லை.

சிஐடி உத்தியோகத்தர்கள் என்னை மோசமாக நடத்தினார்கள்,எனது வீட்டிற்கு வந்த சிஐடியினர் எவரும் முகக்கவசங்களை அணிந்திருக்கவில்லை, எனக்கு கொரோனா பரவினால் யார் பொறுப்பு ஏன் சிஐடியினர் இரவில் வருகின்றனர்” என அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.