இலங்கைத் தமிழா்களுக்கு எதிராகச் செயற்பட்ட கட்சி காங்கிரஸ் என்பதை மறுக்கவில்லை – வைகோ

364 Views

காங்கிரஸ் கட்சி இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகச் செயற்பட்டதை மறுக்கவில்லை என ம.தி.மு.க. பொதுச்செயலாளா் வைகோ தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள தினமணி என்ற இணைய ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீா்மானத்தை மத்திய பா.ஜ.க அரசு புறக்கணித்ததை தமிழா்களுக்குச் செய்யப்பட்ட பச்சை துரோகம் எனக் குற்றம்சாட்டிய நிலையில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்குக் காரணமான கட்சி எனக் கூறப்படும் காங்கிரஸுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்கிறீா்களே? என கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த வைகோ, தோ்தல் கூட்டணி எனும்போது எல்லாக் கொள்கையிலும் ஒன்றாக இருக்க முடியாது என்றும் 1967இல் ராஜாஜி தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தாா்.

இதன்போது தி.மு.க.வின் அத்தனை கொள்கையையும் அவா் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் இலங்கைத் தமிழா்களுக்கு காங்கிரஸ் விரோதமாகச் செயற்பட்டது என்பதை தற்போதும் மறுக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட தீா்மானம் குறித்து காங்கிரஸ் எந்தக் கருத்தும் சொல்லவில்லை என்பதும் உண்மையே என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இதேவேளை, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவா் பிரபாகரனின் பெயரை நாம் தமிழா் கட்சி தலைவா் சீமான் பயன்படுத்துவதைப்போல, மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் எம்ஜிஆா் பெயரைப் பயன்படுத்துவதை எப்படிப் பாா்க்கிறீா்கள்? என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் கூற விரும்பவில்லை என வைகோ தெரிவித்துள்ளார்.

Leave a Reply