இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் ‘இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்’ என்ற மகுடத்தில் நிதி சேகரிப்புத்தளமொன்றை ஆரம்பித்திருக்கும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச்செயற்திட்டம், அத்தளத்திற்குத் தம்மால் இயன்ற நிதியை வழங்குவதன் ஊடாக இலங்கை மக்களுக்கு உதவமுன்வருமாறு உலக மக்களிடம் கோரிக்கைவிடுத்திருக்கின்றது.
இதுகுறித்துத் தெளிவுபடுத்தி ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச்செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
இந்து சமுத்திரத்தின் முத்தாக அறியப்படும் இலங்கை இப்போது மிகமோசமான பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்றது. கடந்த 1948 ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் இலங்கை முகங்கொடுத்திருக்கும் மிகப்பாரிய நெருக்கடி இதுவாகும்.
இதன்விளைவாக பல மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதுடன், மொத்த சனத்தொகையில் சுமார் 5.7 மில்லியன் மக்கள் உடனடி மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்ற துரதிஷ்டவசமான நிலையில் இருக்கின்றனர். அதுமாத்திரமன்றி சுமார் 6.3 மில்லியன் மக்கள் அவர்களின் அடுத்தவேளை உணவு எங்கிருந்து கிடைக்கப்பெறும் என்று தெரியாத நிலையில் உள்ளனர்.
எனவே இந்நிலைவரம் தொடர்ச்சியாக மோசமடைந்துவரும் பின்னணியில், நாம் இலங்கை மக்களுக்கு உதவுவதற்கான ஏனைய முயற்சிகளில் ஒன்றாக நிதி சேகரிப்பு பிரசாரமொன்றை ஆரம்பித்திருக்கின்றோம். இதனூடாக தற்போது இலங்கை மக்கள் முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியின் தீவிரத்தன்மையைக் குறைப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.
உணவு மற்றும் சுகாதாரம் ஆகிய இரண்டும் இப்பொருளாதார நெருக்கடியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட இரு துறைகளாகக் காணப்படுகின்றன. நிரம்பல் சங்கிலி சீர்குலைந்திருப்பதுடன் குறிப்பிட்ட சில அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற மருந்துப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
அதன்விளைவாக நாடளாவிய ரீதியில் வழமையான சில சத்திரசிகிச்சைகளைத் தாமதப்படுத்தவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இவை மக்களை வெகுவாகப் பாதித்திருக்கும் பின்னணியில், இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு சர்வதேச உதவிகள் அவசியமாகின்றன. அதன்படி இலங்கையர்களுக்கு உதவுவதற்கு எமக்கு உங்களுடைய உதவி தேவைப்படுகின்றது.
இலங்கையில் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பின்தங்கிய தரப்பினருக்கு அவசியமான உதவிகளை வழங்குவதில் நீங்களும் பங்களிப்புச்செய்யமுடியும். அதன்படி ‘இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்’ என்ற மகுடத்தில் எம்மால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிதி சேகரிப்புத் தளத்திற்கு உங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கலாம்.
வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு அவசியமான உதவிகளை உலகின் பலதரப்பட்ட நாடுகளைச்சேர்ந்த மக்களிடமிருந்து திரட்டிக்கொள்ளும் நோக்கிலேயே இந்நிதி சேகரிப்புத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதனூடாகத் திரட்டப்படும் நிதியானது இலங்கையில் தட்டுப்பாடு நிலவும் அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கும், விவசாயிகளுக்கு அவசியமான விதைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கும், குடும்பங்களிடையே வீட்டுத்தோட்ட செயன்முறையை ஊக்குவிப்பதற்கு அவசியமான உபகரணங்களை வழங்குவதற்கும் பயன்படுத்தப்படும் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.