காணாமல்போனோர் தொடர்பான அனைத்து விசாரணைகளும் அடுத்த வருடம் நிறைவடையும் – நீதியமைச்சு

காணாமல்போனோர் தொடர்பான அனைத்து விசாரணைகளும் அடுத்த வருட இறுதியில் முடிக்கப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலை விவகாரங்கள்  அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குடன் நேற்று (வியாழக்கிழமை) நீதியமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது, இலங்கையில் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக 21 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதையும் சட்ட முறைமையை புதுப்பிப்பதற்கு பல புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டமை குறித்தும் தூதுவர் பாராட்டினார்.

அத்தோடு, வடக்கு – கிழக்கு மாகாண மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்ட நடமாடும் சேவைகள் உள்ளிட்ட நலன்புரி திட்டங்களுக்கும் தூதுவர் தமது பாராட்டுகளை தெரிவித்தார்.

இந்த நிலையிலேயே, காணாமல் போனவர்கள் தொடர்பான அனைத்து விசாரணைகளும் அடுத்த வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் முடிக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.