இந்த உலகமே சீர்குலைந்து கொண்டிருப்பது போலத் தோன்றியது- உலகின் கவனத்தைப் பெற்ற மியான்மர் கன்னியாஸ்திரி

638 Views

“இந்த உலகமே சீர்குலைந்து கொண்டிருப்பது போலத் தோன்றியது, துப்பாக்கிச் சத்தம் மிக அதிகமாக இருந்தது. நான் தேவாலயத்தை நோக்கி ஓட வேண்டி இருந்தது,” என கூறியுள்ளார் கன்னியாஸ்திரி  ஆன் ரோஸ் நு தாங்.

மியான்மரின் வடக்குப் பகுதியில் இருக்கும் மித்கினா நகரத்தில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி  ஆன் ரோஸ் நு தாங்,  கடந்த மார்ச் 9ம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற ஆயுதமேந்திய இராணுவ வீரர்களின் முன் மண்டியிட்டு வன்முறையை தடுக்க முயன்றது மியான்மர் நாட்டில் பலராலும் பரவலாக பாராட்டப்பட்டதோடு   உலகளவில் தலைப்புச்செய்தியாகவும் வெளிவந்தது.

சமீபத்தில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் கூறி, கடந்த பெப்ரவரி 1ம் திகதி மியான்மர் இராணுவம் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. அப்போதிலிருந்து மியான்மரில் தொடர்ந்து மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மியான்மரில் இராணுவ ஆட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டும், ஆங் சாங் சூச்சி உட்பட அந்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்  என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதில் குறைந்தது 54 பேர் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம்  என்று கூறப்படுகின்றது.

மேலும் தொடரும் மக்களின் போராட்டங்களை அடக்க அந்நாட்டு இராணுவம் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில், கடந்த மார்ச் 9ம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காப்பாற்ற, தரையில் மண்டியிட்டு, திறந்த கைகளோடு, இராணுவ அதிகாரிகளிடம் தேவாலயத்தை விட்டுச் செல்லுமாறு வேண்டியுள்ளார் கன்னியாஸ்திரி  ஆன் ரோஸ் நு தாங்.

1 61 இந்த உலகமே சீர்குலைந்து கொண்டிருப்பது போலத் தோன்றியது- உலகின் கவனத்தைப் பெற்ற மியான்மர் கன்னியாஸ்திரி

இதற்கு, கன்னியாஸ்திரியின் முன் ஆயுதமேந்திய இராணுவ வீரர்கள் இருவரும், தரையில் மண்டியிட்டு அவரை வணங்கினர். தங்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமை இருப்பதாகக் கன்னியாஸ்திரியிடம் கூறினர்.

இதையடுத்து “நீங்கள் இங்கிருந்து வெளியேறும் வரை நான் எழுந்திருக்கமாட்டேன்” என இராணுவத்திடம் கூறிய ஆன் ரோஸ் நு தாங், “உங்களுக்கு உண்மையாகவே கொல்ல வேண்டுமென்றால், தயவு செய்து அவர்களுக்கு பதிலாக என்னைக் கொல்லுங்கள், நான் என் உயிரைத் தருகிறேன்” எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “இந்த உலகமே சீர்குலைந்து கொண்டிருப்பது போலத் தோன்றியது, துப்பாக்கிச் சத்தம் மிக அதிகமாக இருந்தது. நான் தேவாலயத்தை நோக்கி ஓட வேண்டி இருந்தது.எல்லோரையும் தரையில் படுக்குமாறு கூறினேன், ஆனால் யாருக்கும் என் குரலைக் கேட்க முடியவில்லை. குழந்தைகள் அழுதுகொண்டு என்னைச்சூழ்ந்து நின்றனர்.” என அவர் மேலும் சர்வதேச ஊடகமான பிபிசிக்கு வழங்கிய  கருத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,   மியான்மரின் காவலர்கள் மற்றும் மக்களுக்கு இடையில் அதிகரித்து வரும் வன்முறை குறித்து ஐ.நாவும் கவலை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply