“நான் இறந்தால், என் உடலை வாங்காதே… அப்படி வாங்கினால், நீ அழுவாய்… அதனால், புரட்சிக் கனலும் தாக்கமும் குறைந்துவிடும். எனவே, என் உடலை வாங்காதே” என்று தன் தாயிடமே கூறியவர் இந்திய விடுதலையின் புரட்சி நாயகன் பகத்சிங்!
“சாகும்போது முட்டாளாகச் சாக எனக்கு விருப்பமில்லை. எதையோ கற்றுக்கொண்டோம் என்ற திருப்தி இருக்க வேண்டும்” என்று கூறிய புத்தகப்பிரியர் அவர். தூக்கு மேடைக்குப் போவதற்கு முன் படிப்பதற்காக பத்து நிமிடம் தாருங்கள் என்று வேண்டிக்கொண்டார்.
இந்த புரட்சியின் நாயகனை இந்திய வரலாறு மறப்பதற்கில்லை….
இந்தியாவின் விடுதலைப் போராட்டம் வெளிப்படையாகப் பார்க்கின்ற போது அது அகிம்சை வழி ஏற்பட்டதென்பது உண்மை தான். ஆனால் வெள்ளையர்களுக்கு அச்சத்தை தந்தது அகிம்சை போராட்டத்தைக்கண்டு அல்ல, ஆயுதப் போராட்டத்தைக் கண்டு தான். அந்தளவிற்கு இந்தியாவின் பல பகுதிகளிலும் ஆங்காங்கே மக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலைமை காணப்பட்டன. அதில் ஒரு புள்ளி தான் பகத்சிங்.
பகத்சிங் சுதந்திரப் போராட்ட வீரராக மிளிர்ந்தார் என்பது மட்டுமல்ல, சோசலிசவாதியாகவும் திகழ்ந்தார்.
இந்தியாவின் விடுதலையை வேண்டி குடும்பமாக போராடியவர்களில் பகத்சிங்கின் குடும்பம் மிகவும் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது. 1907ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி பகத்சிங் பிறக்கும் போது அவரது தந்தை கஹன்சிங் வெள்ளையர்களின் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்திய விடுதலைக்கான போராட்டங்கள் பரவலாக எழுச்சி கொண்ட போது, மகாத்மா காந்தியின் அகிம்சை வழிப் போராட்டங்களில் ஒன்றான ஒத்துழையாமை இயக்கத்தில் இந்தியா முழுதும் பலர் பங்குபெற்றனர். அதில் 14 வயது சிறுவனாக இருந்த பகத்சிங்கும் இணைந்து கொண்டார். ஆனால் சௌரிசௌரா நிகழ்வுக்குப் பிறகு, அகிம்சை வழியில் போராடினால் சுதந்திரம் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்தார் பகத்சிங்.
ஒடுக்கு முறையை வன்முறையால் தீர்க்க வேண்டும் என்ற நம்பிக்கை கொண்ட ஒரு அணியும் ஒடுக்கு முறைகளை அஹிம்சையினால் எதிர்கொண்டு விடுதலை அடைய வேண்டும் என்று மற்றொரு அணியும் என இரு அணிகளின் சுதந்திர இந்தியாவிற்காக தோற்றம் பெற்றன.
இந்த இரு அணிகளும் ஒன்றுக்கொன்று ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல் இந்திய சுதந்திர பாதையில் பயன்பட்டன என்பது தான் உண்மையே தவிர தனித்து ஒன்று மட்டும் செயற்பட்டது என்று கூறுவதற்கில்லை. மார்க்சீசிய, கம்யூனிசக் கொள்கைகளை தனக்குள் வரித்துக்கொண்ட பகத் சிங், 1926-ம்ஆண்டு தன் நண்பர்களாகிய ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோரோடு எழுச்சிப் பெற்று புரட்சி நாயகராக உயர்ந்து நின்றார்.
1928, சைமன் கமிஷனில் சட்டவரையரைகள் கொண்டு வரப்பட்டபோது, அதனை எதிர்த்து நாடுமுழுவதும் காங்கிரஸ் தலைவர்கள் போராடிய போது பிரிட்டிஷ் போலீஸார் நடத்திய தாக்குதலில் காங்கிரஸ் மூத்த தலைவர் லாலா லஜபதிராய் உயிரிழந்தார்.இந்த சம்பவத்தால் சாண்டர்ஸ் என்னும் ஆங்கிலேயரைச் சுட்டுக்கொன்றுவிட்டு பகத் சிங் தன் தோழர்களுடன் தலைமறைவானார். ஆனால் அதே வருடம், ஏப்ரல் 8-ம் தேதி தொழிலாளர்களுக்கு எதிராகப் பல சட்டத்திட்டங்களை அமல்படுத்தியது பிரிட்டிஷ் அரசாங்கம்.
இதற்கு எதிராக பாராளுமன்றத்தில் தனது தோழர்களுடன் பகத் சிங்கும் குண்டு வீசி தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். இந்த குண்டு வீச்சு சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் எற்படவில்லை. காரணம், புரட்சி என்பது மக்களைக் கொல்வதிலோ, துன்புறுத்துவதிலோ இல்லை என்ற நிலைப்பாட்டை அவர்கள் கொண்டிருந்தனர்.
இந்தக் குண்டுவீச்சு நடந்து முடிந்தபிறகு, மூவரும் சரணடைந்தனர். சாண்டர்ஸை கொலை செய்ததற்கும் குண்டுவீச்சில் ஈடுபட்டதற்கும் 1931, மார்ச் 23ம் தேதி அன்று பகத்சிங், சுக்தேவ், ராஜகுரு ஆகிய மூவரையும் தூக்கிலிட்டது பிரிட்டிஷ் அரசு. பகத்சிங்கும் அவரது தோழர்களும் மேற்கொண்டு வந்த பல்வேறு இயக்கங்கள் காரணமாக மக்கள் மத்தியில் அவர்களது புகழ் காந்திக்கு இணையாக இருந்ததை வரலாறுகள் மூலம் காணலாம்.
மகாத்மா காந்தி தலைமையில் அகிம்சையும் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் ஆயுதப்போராட்டமும் என இரு பெரும் சக்திகள் இந்தியாவின் சுதந்திரத்திற்காக வெள்ளையர்களை எதிர்த்து நின்றது.
வெள்ளைய ஆதிக்கத்தைப் பொறுத்தவரையில் சுபாஷ் சந்திரபோஸ் அதாவது புரடசி எண்ணம் கொண்டவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், பல பகுதிகளிலும் தீயாக மூண்டு எழுச்சி பெற்றது. இந்தப் போராட்டக்காரர்களை ஒருங்கிணைத்த சுபாஷ் சந்திரபோஸ், அவர்களை இந்திய தேசிய இராணுவமாக வழிநடத்தினார். இந்த ஆயுதப் போராட்டத்தில் பகத் சிங்கின் பெயரும் ஒரு குறியாகும்.
ஆனால் வெள்ளையர்களைப் பொறுத்த வரையில் அவர்கள் அகிம்சைப் போராட்டத்துக்கு இசைவாக நடந்து கொள்வதன் மூலமே ஆயுதப் போராட்டங்கள் தோன்றாமல் தடுக்கலாம் என்ற முடிவை கொண்டிருந்தனர்.
ஆயுதப் போராட்டத்தைக் கண்டு அஞ்சியே அகிம்சைப் போராட்டத்திற்கு சாதகமாக நடக்க வெள்ளையர்கள் முற்பட்டார்கள். எனவே ஆயுதப்போராட்டத்தின் எழுச்சியே அகிம்சைப் போராட்டத்தை வெள்ளையர்கள் ஆதரிக்கவும் ஒரு காரணம். இந்த வகையில் பகத்சிங் ஒரு முன்னுதாரணமாக இருந்தார் என்பதை வரலாற்று ரீதியாக மறைக்க முடியாது.
இந்திய வரலாற்றில் அகிம்சைப் போராட்ட வீரர்களையும் ஆயுதப்போராட்ட வீரர்களையும் தேசிய தலைவர்களாக மதிப்பளித்து வருகின்றார்கள் மக்கள்.
இந்திய மக்களின் அரசியல் அகராதியில் தொடர்வண்டி பாதை போல ஒரு பகுதி அகிம்சைப்போராட்ட வீரர்களை ஒரு நீளமாகவும் மற்றெரு பகுதி ஆயுதப்போராட்ட வீரர்களை இன்னொரு பகுதி நீளமாகவும் சமாந்தரமாக மதிப்பதைக் காணலாம். அகிம்சைப் போராட்டத்தில் மகாத்மா காந்தி மற்றும் பாரதி போன்றவர்களையும் ஆயுதப் போராட்டத்தில் சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் பகத் சிங் போன்றவர்களை காண முடியும். இந்த வகையில் இந்தியவின் சுதந்திரப்போராட்ட தேசியத்தலைவர்கள் என்ற அந்தஸ்து பகத்சிங்குக்கு உண்டு.
பகத் சிங்கை துாக்கு கயிற்றில் தொங்க விட்டதன் மூலம் வெள்ளையர்கள் சாதித்து எதுவும் இல்லை. மாறாக அவர்களின் தியாகங்கள் இந்தியாவிற்கு விடுதலை தேடிக்கொடுத்த அத்திவாரக்கற்களில் ஒன்றாகவே அமைந்தது.