இந்திய- சீன எல்லைப் பிரச்சினையை இரு நாடுகளுமே தீர்க்க வேண்டும்- பிரிட்டன் பிரதமர்

இந்திய – சீன எல்லைப் பிரச்சினையை இரு நாடுகளும் சுமுகமாக பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என பிரிட்டன் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கிளிக் டிமாண்ட் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

லடாக் பகுதியில் நிலவும் பதற்றம் மிகவும் வருத்தத்திற்குரியது எனக் கூறிய பொறிஸ், இந்திய – சீன எல்லையில் நடக்கும் போர் பதற்றத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகத் தெரிவித்தார். இந்திய வெளியுறவுத்துறை சார்பில் முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்திய – சீன எல்லைப் போர்ப் பதற்றத்தைத் தவிர்க்க இந்தியா முறையான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜூ ன் 15 அன்று கல்வான் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். 40இற்கும் மேற்பட்ட சீன வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். முன்னதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்திய – சீன எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு பற்றி கருத்துக் கூறியிருந்தார். அதில் அவர் சீனாவை கடுமையாக சாடியிருந்தார்.  தற்போது இந்தியாவிற்கு எதிராக பிரிட்டனும் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்துமாறு கூறியிருக்கிறது.