இந்திய குடியரசுத் தலைவரின் வருகை: போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டதால்  பெண் ஒருவர் பலி

இந்தியாவின் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பயணத்தின்போது போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டதால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினரிடம் உத்தர பிரதேச காவல்துறையினர் மன்னிப்பு கோரியுள்ளனர்.

இதுதொடர்பாக காவல்துறையை சேர்ந்த மூன்று பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

போக்குவரத்து பாதுகாப்பு காரணமாக தேவைக்கு அதிகமான நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது என்றும், இதற்கு காரணமான காவல்துறையினர் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து காவல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் உயிரிழந்த பெண்ணின் இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்திற்கு சென்று குடியரசுத் தலைவரின் வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூன்று நாள் பயணமாக உத்தர பிரதேசம் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.