ஆஸ்திரேலியா காட்டுத்தீ: பிரதமருடன் கைக்குலுக்க மறுத்த மக்கள்

ஆஸ்திரேலிய காட்டுத்தீ விவகாரத்தில் பிரதமர் மோரிசன் உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அந்நாட்டு மக்கள் கோபத்தில் உள்ளனர். காட்டுத்தீ பாதித்த பகுதிகளை அவர் பார்வையிட சென்ற போது பொதுமக்கள், “உங்களுடன் கைக்குலுக்க விரும்பவில்லை. தேர்தலில் இங்கிருந்து நீங்கள் வாக்கு ஏதும் பெறபோவதில்லை” என அவர் முகத்திற்கு நேரே கூறி உள்ளனர்.

டிசம்பர் மாதம் இறுதியில் ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ பற்றி எரியும் போது பிரதமர் ஸ்காட் மோரிசன் குடும்பத்துடன் ஹவாய் தீவு சென்று இருந்தார். மக்கள் இதன் காரணமாக கோபமாக இருப்பதை அறிந்த அவர் உடனே நாடு திரும்பி, மக்களிடம் மன்னிப்பும் கேட்டார். ஆனாலும், அவர் மீதான கோபம் குறையவில்லை என்கிறார் பிபிசி ஆஸ்திரேலியா செய்தியாளர் ஜெய் சவேஜ்.

செப்டம்பரில் பரவ தொடங்கிய காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 20 பேர் பலியாகி உள்ளனர், டஜன் கணக்கான மக்கள் காணாமல் போய் உள்ளனர், 1300 வீடுகள் தீக்கிரையாகி உள்ளது. ஒரு லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.