ஆர்மீனியாவுக்கும் அஸர்பைஜானுக்குமிடையே மோதல் – நாகொர்ணோ-கரபாக் யுத்தத்தில் அதிகரிக்கும் இழப்புகள்

66
81 Views

சர்ச்சைக்குரிய நாகோர்ணோ-கரபாக் பிரதேசத்தில் ஆர்மீனியன் துருப்புகளுக்கும் அஸர்பைஜான் துருப்புகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இம் மோதலில் அப்பாவிப் பொதுமக்கள் உட்பட 100 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

மலைப்பாங்கான இந்தப் பிரதேசம் உத்தியோகபூர்வமாக அஸர்பைஜானின் ஒரு பகுதியாக இருக்கின்ற பொழுதிலும், 1994ஆம் ஆண்டிலிருந்து இப்பிரதேசம் ஆர்மீனியன் இனத்தவர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை எந்த ஒரு நாட்டினதும் அங்கீகாரத்தையும் பெறாமல் ஆர்மீனியன் போராளிகளால் தன்னிச்சையாகக் குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் இப்பகுதியில் 84 இராணுவ வீரர்கள் உட்பட பொதுமக்களும் கொல்லப்பட்டதாக அக்குடியரசின் அதிகாரிகள் அறிவித்திருக்கிறார்கள்.

இது இப்படியிருக்க, அஸர்பைஜானோ தனது இராணுவ இழப்பை இதுவரை அறிவிக்கவில்லை. ஆனால் பொதுமக்களில் ஏழுபேர் இதுவரை கொல்லப்பட்டிருப்பதாக அந்நாடு அறிவித்திருக்கிறது.

மோதல் ஆரம்பித்து தற்போது ஒரு வாரமாவதுடன் குறிப்பிட்ட பிரதேசத்துக்கு வெளியிலும் மோதல் நகரத் தொடங்கியிருக்கிறது.

ஆர்மீனிய நாட்டின் கிழக்குப்புறத்தில் அமைந்துள்ள வார்டேனிஸ் நகரில் ஒரு பேருந்து அஸர்பைஜான் நாட்டின் ஒரு ஆளில்லா விமானத்தின் தாக்குதலுக்கு உள்ளானதாக ஆர்மீனிய பாதுகாப்பு அமைச்சு செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

அதேவேளையில் ஆர்மீனியா மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் இரண்டு அஸர்பைஜான் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அந்நாடு திங்கட்கிழமை தெரிவித்தது. அதே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் ஆர்மீனியாவின் தாக்குதலில் அதற்கு முதல் நாள் கொல்லப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நீண்ட காலம் தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலைப் பொறுத்தவரையில், 2016ஆம் ஆண்டிற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் மிகக் கடுமையாக தாக்குதல்கள் இவையாகும்.

ஆர்மீனியாவும் அஸர்பைஜானும் மோதல் பிரதேசங்களுக்கு மேலும் அதிக இராணுவத்தை நகர்த்தியிருப்பதுடன் சில பிரதேசங்களில் இராணுவச் சட்டத்தையும் பிரகடனப்படுத்தியிருக்கின்றன. யார் உண்மையில் மோதலைத் தொடங்கியது? என்பது தொடர்பாக இரு நாடுகளுமே ஒன்றையொன்று குற்றஞ்சாட்டிக்கொண்டிருக்கின்றன.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோக்கேசஸ் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள இந்த மோதலில் மற்றைய நாடுகளும் நேரடியாகப் பங்குபற்றக்கூடும் என்ற அச்சம் தற்போது ஏற்பட்டுள்ளது.

துருக்கி வெளிப்படையாகவே அசர்பைஜானை ஆதரிக்கும் அதே வேளை ஆர்மீனியாவில் இராணுவ தளத்தைக் கொண்டிருக்கும் ரஷ்யாவோ உடனடிப் போர்நிறுத்தத்தைக் கோரியிருக்கிறது.

அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டும் காயப்பட்டும் இருப்பது தொடர்பாகவும் பொதுமக்களின் உடைமைகளும் கட்டமைப்புகளும் சேதப்படுத்தப்பட்டிருப்பது தொடர்பாகவும் தாம் அதிக கவலையடைந்திருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரான மிசேல் பச்செலெற் தெரிவித்திருக்கிறார். “மோதல் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

முன்னணி நிலைகளிலிருந்து வரும் பிந்திய தகவல்கள்

கடுமையான சண்டை இரவிரவாகத் தொடர்ந்து நடந்ததாக ஆர்மீனியாவும் அஸர்பைஜானும் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

ஞாயிற்றுக்கிழமை மோதல் தொடங்கியதிலிருந்து தங்களது இராணுவ வீரர்கள் 87 பேர் கொல்லப்பட்டிருப்பதாகவும் 120 பேர் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் நாகொர்ணோ-கரபாக் பிரதேசத்தின் அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஆர்மென்பிரெஸ் செய்திப் பிரிவு (Armenpress News Agency) தகவல் வெளியிட்டிருக்கிறது.

அஸர்பைஜான் பக்கத்தில் ஏறத்தாழ 400 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு விமானம், நான்கு உலங்கு வானூர்திகள் என்பவற்றுடன் பல டாங்கிகளும் அழிக்கப்பட்டிருப்பதாக அச்செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்திருக்கிறது.

இது இப்படியிருக்க, புஸ_லி-ஜப்ரேயில் (Fuzuli – Jabrayil) அக்டேரே-ரேட்டர் (Aghdere – Terter) ஆகிய பிரதேசங்களில் தாம் இழந்த பகுதிகளை மீளக்கைப்பற்றுவதற்கு ஆர்மீனியன் துருப்புகள் பல தடவைகள் தொடர்ச்சியாக மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்திருக்கின்றன என்று அசர்பைஜான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்ததாக செய்தியாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

கவச வாகனங்களையும் ஏனைய இராணுவ வாகனங்களையும் உள்ளடக்கிய ஆர்மீனிய இராணுவ வாகனங்களின் ஒரு தொகுதி முற்றாக அழிக்கப்பட்டிருப்பதாகவும் ஆர்மீனியர்கள் பலத்த இழப்பைச் சந்தித்திருப்பதாகவும் அஸர்பைஜான் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

மோதலில் ஏற்படுத்தப்பட்டுள்ள இழப்புகள் தொடர்பாக ஆர்மீனியா மற்றும் அஸர்பைஜான் ஆகிய இருநாடுகளும் வெளிப்படுத்தியுள்ள தரவுகள் சுதந்திர ஊடகங்களால் உறுதிப்படுத்தப்படவில்லை.

இம் மோதல் தொடர்பாக இப்பிரதேசத்தில் உள்ள மற்றைய நாடுகளின் நிலைப்பாடு என்ன?

“இப்பிரதேசத்தில் ஆர்மீனியா தான் மேற்கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பை உடனடியாக முடிவுக்கொண்டு வந்து அப்பிரதேசத்திலிருந்து வாபஸ் பெற வேண்டும் என்றும் அப்படிச் செய்வதே அப்பிரதேசத்தில் மீண்டும் அமைதியை ஏற்படுத்தும்” என்றும் துருக்கிய அதிபரான றிசெப் ரெய்யிப் ஏர்டோகன் (Recep Taayip Erdogan) அறைகூவல் விடுத்திருக்கிறார்.

“தாம் எவ்வளவு தூரம் செல்ல விரும்புகிறார்களோ அவ்வளவு தூரத்துக்கு தமது அஸர்பைஜான் நண்பர்கள் செல்லவேண்டும்” என்று ஏர்டோகானின் முதன்மை ஆலோசகரான இல்நூர் சேவிக் (Ilnur Cevik) கூறியிருக்கிறார்.

இப்பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு அஸர்பைஜானுக்கு துருக்கி நேரடியாகவே இராணுவ உதவியை வழங்குவதாக ஆர்மீனியா குற்றஞ்சாட்டியிருக்கிறது. அசர்பைஜான் இக்குற்றச்சாட்டை மறுத்திருக்கிறது.

ஆர்மீனியா – அஸர்பைஜான் நாடுகளைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களுடன் அவசர பேச்சுவார்த்தைகளை நடத்திய ரஷ்ய வெளியுறவு அமைச்சர், உடனடி போர்நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

ரஷ்யா தலைமை தாங்கும் ‘கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பில்’ ஆர்மீனியா அங்கம் வகிக்கும் காரணத்தால் ஆறு அங்கத்தவர்களைக் கொண்ட இந்த அமைப்பிடம் ஆர்மீனியா உத்தியோகபூர்வமாகவே உதவியைக் கோரலாம். ஆனால் அப்படியாக எந்தவிதமான கோரிக்கையும் ஆர்மீனியா இதுவரை விடுக்கவில்லை.

“குறிப்பிட்ட பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்றுவரும் நிகழ்வுகளை தாம் மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும்” என்றும் இப்பிரதேசத்தின் மற்றொரு முக்கிய நாடான ஈரான் கூறியிருக்கிறது.

இம்மோதலின் பின்னணி என்ன?

சோவியத்தின் ஆட்சி ஒரு முடிவை அண்மித்துக்கொண்டிருந்த வேளை, (1988இல்) அசர்பைஜான் இராணுவமும் ஆர்மீனிய பிரிவினைவாதிகளும் ஒரு மிக மோசமான யுத்தத்தில் ஈடுபட்டார்கள். அமைதி ஒப்பந்தம் ஒன்று அந்த நேரத்தில் கைச்சாத்திடப்பட, நாகொர்ணோ-கரபாக் பிரதேசம் ஆர்மீனியர்களின் கைகளுக்கு வந்தது.

இந்த யுத்தத்தில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட அதேவேளை அஸர்பைஜானி இனத்தைச் சேர்ந்த மக்கள் பலர் தமது வீடுகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.

இப்பிரதேசம் ஆர்மீனியா நாட்டின் ஆதரவில் முற்றுமுழுதாகத் தங்கியிருக்கும் ஒரு தன்னிச்சையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு சுதந்திர நாடு. ஆனால் இந்தப் பிரதேசம் ஆர்மீனியா உள்ளடங்கலாக ஐக்கிய நாடுகளில் அங்கம் வகிக்கும் எந்தவொரு நாட்டாலும் அங்கீகரிக்கப்படவில்லை.

இப்பிரதேசத்தைச் சுற்றியிருக்கும் சில அசேரி மக்கள் வாழும் பகுதிகளும் ஆர்மீனியர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன.

இப்பிரச்சினை தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள் எந்தவித நிரந்தர அமைதி உடன்படிக்கைக்கும் வழிவகுக்கவில்லை. சோவியத்துக்குப் பிற்பட்ட காலத்தின் உறைநிலைப் பிரச்சினைகளில் ஒன்றாக இப்பிரதேசத்தின் தகராறு விளங்குகிறது.

‘கறுப்புத் தோட்டம்’ என்ற அசேரிச் சொல்லின் ரஷ்ய மொழிப்பதமே ‘கரபாக்’ என்ற சொல்லாகும். அதே வேளையில் ‘நாகொர்ணோ’ என்ற ரஷ்ய மொழிச்சொல்லின் பொருள் ‘மலைப்பாங்கானது’ என்பதாகும். ஆனால் ஆர்மீனிய இனத்தைச் சேர்ந்தவர்களோ ‘ஆட்சாக்’ என்ற புராதன ஆர்மீனியச் சொல்லால் இப்பிரதேசத்தை அழைப்பதையே விரும்புகிறார்கள்.

அவ்வப்போது போர் நிறுத்தம் மீறப்படும் போது இரண்டு பக்கங்களையும் சேர்ந்த இராணுவ வீரர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

துருக்கியுடனும் அசர்பைஜானுடனும் இருக்கும் எல்லைகள் மூடப்பட்டிருப்பதால் முற்றுமுழுதாகத் தரையால் சூழப்பட்டிருக்கும் ஆர்மீனியா பொருண்மியப் பிரச்சினைகளால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.

மேற்படி தகராறுக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை இதுகாறும் மேற்கொண்டுவரும் ‘பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான ஐரோப்பிய அமைப்பில்’ ரஷ்யா, பிரான்சு, அமெரிக்கா போன்ற நாடுகள் இணை அனுசரணை வழங்குகின்றன.

நாகொர்ணோ-கரபாக் – முக்கிய தகவல்கள்

  • 4400 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட ஒரு மலைப்பாங்கான பிரதேசம் (1700 சதுர மைல்கள்)
  • கிறீஸ்தவ ஆர்மீனியர்களும் முஸ்லிம் துருக்கியர்களும் பாரம்பரியமாக வாழ்ந்த பிரதேசம்
  • சோவியத்தின் ஆட்சிக்காலத்தில் அஸர்பைஜான் குடியரசுக்குள் தன்னாட்சியைக் கொண்ட பிரதேசமாக மாற்றம் பெற்றது.
  • பன்னாட்டு ரீதியில் அஸர்பைஜானின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் அங்கு வாழும் மக்களில் பெரும்பான்மையானோர் ஆர்மீனியன் இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  • இந்த பிரதேசத்தின் ஆட்சியாளர்கள் ஆர்மீனியா உட்பட எந்தவொரு ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாட்டாலும் அங்கீகரிக்கப்படவில்லை.
  • 1988-94 காலப்பகுதியில் நடைபெற்ற போரில் ஒரு மில்லியன் மக்கள் தமது இல்லிடங்களை விட்டு இடம்பெயர்ந்தார்கள், ஏறத்தாழ 30,000 பேர் கொல்லப்பட்டார்கள்.
  • இப்பிரதேசத்தைச் சுற்றியுள்ள அஸர்பைஜானின் பகுதிகள் சிலவற்றை பிரிவினைப் போராளிகள் தம்வசப்படுத்தியிருக்கிறார்கள்
  • 1994ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்தத்தின் பின்னர் எந்தவொரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.
  • துருக்கி வெளிப்படையாகவே அஸர்பைஜானை ஆதரிக்கிறது.
  • ரஷ்யா ஆர்மீனியாவில் ஒரு இராணுவ தளத்தைக் கொண்டிருக்கிறது.

-தமிழில் ஜெயந்திரன்-

நன்றி: பிபிசி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here