ஆயுத வலிமையை வெளிக்காட்டும் சீனாவின் தேசிய தின பேரணி

643 Views

சீனப் புரட்சியின் 70ஆவது ஆண்டு விழாவை ஒட்டி ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் அறிவுத் திறன் மிக்க ஆயுதங்கள், கட்டளை வலைப்பின்னல் ஆகியவை கொண்டு செல்லப்பட்டன.

நாட்டின் டிஜிற்றல் புரட்சியில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் பங்கை எடுத்துக் காட்டும் வகையில் அது அமைந்திருந்தது. மக்கள் விடுதலை இராணுவத்தை சீரமைத்து மறு கட்டுமானம் செய்து உலகத் தரமான இராணுவமாக ஆக்குவதற்கு 2015இல் அதிபர் ஷிஜின்பிங் எடுத்துள்ள முயற்சி நிறைவேறுவது என்பது 2049வரை நீடிக்கப் போகும் நீண்ட கால நடைமுறை என்கிறார் இன்டநஷனல் இன்ஸ்டிடியுட் ஒப் ஸ்ட்ரேடஜிக் ஸ்ரடியை சேர்ந்த அலெக்ஸான்டர் நெல்.

சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வரும் சீனாவின் கதை 20ஆம் நூற்றாண்டின் அளப்பரிய வெற்றிக் கதைகளில் ஒன்று.

பல தலைமுறைகளாக இருந்த மன்னராட்சி மற்றும் பல்லாண்டுகள் நிகழ்ந்த உள்நாட்டுப் போர் ஆகியவற்றிற்குப் பின்னர் சீனப் புரட்சியை நிகழ்த்திய அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சி ஒப்பீட்டளவில் மிகவும் குறுகிய காலத்தில் சீனாவை உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக ஆக்கியதுள்ளதுடன், அனைத்து துறைகளிலும் அமெரிக்காவிற்கு போட்டியாக விளங்கும் நாடாக மாற்றியுள்ளது.

china2019 0 ஆயுத வலிமையை வெளிக்காட்டும் சீனாவின் தேசிய தின பேரணி
Soldiers of People’s Liberation Army (PLA) stand on military vehicles travelling past Tiananmen Square during the military parade marking the 70th founding anniversary of People’s Republic of China, on its National Day in Beijing, China October 1, 2019. REUTERS/Jason Lee

இன்று சீன மக்கள் குடியரசு பிறப்பதாக மாவோ சே துங், பெய்ஜிங்கின் தியானன்மென் சதுக்கத்தில் நடந்த நிகழ்வில் அறிவித்த 70ஆம் ஆண்டு விழா. 1949அக்டோபர் 01அன்று சமகால வரலாற்றில் மிகவும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் அந்த நிகழ்வு நடந்தது.

மாவோ சே துங் தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அப்போது ஆட்சியில் இருந்த குவோமிண்டாங் (தேசியவாத) கட்சி இடையே இரண்டாம் உலகப் போர் சமயத்தில் அமைதி உடன்படிக்கை ஏற்பட்டிருந்தாலும், போர் முடிந்த பின் மீண்டும் மோதல் வெடித்தது.

பின்னர் அங்கு நடந்த உள்நாட்டுப் போரில் சியாங் கை-ஷேக் தலைமையிலான குவோமிண்டாங் தரப்பு தைவான் தீவில் தஞ்சமடைந்தது. அங்கு சீனக் குடியரசை நிறுவிய சியாங் கை-ஷேக் தனது தரப்புத் தான் உண்மையான சீன அரசு என்று கூறினார். இன்றும் தைவானின் அலுவல்புர்வ பெயர் ‘சீனக் குடியரசு’ என்பது தான். சீனாவின் அலுவல்புர்வ பெயர் ‘மக்கள் சீனக் குடியரசு’. இதை மாவோ நிறுவிய நாள்தான் சீனாவில் தேசிய தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது.

இன்றைய கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பெய்ஜிங்கில் நடக்கும் அணிவகுப்பில் தனது இராணுவ வல்லமையை சீனா பறைசாற்றி வருகின்றது. வியக்க வைக்கும் அளவிற்கு வெற்றி கண்டுள்ள சீனா பற்றிய விமர்சனப் பார்வைகளும் உள்ளன.

china 70 years 1001 ஆயுத வலிமையை வெளிக்காட்டும் சீனாவின் தேசிய தின பேரணிஎழுபது ஆண்டுகளாக ஒரு கட்சி ஆட்சி நீடிக்கும் சீனா, உலகிலேயே மனித உரிமை மீறல்கள் அதிகமாக நடக்கும் நாடுகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.

அரசை கடுமையாக எதிர்ப்பவர்கள் மற்றும் விமர்சிப்பவர்களை சிறையில் அடைப்பதைப் பற்றி சீன அரசு கவலை கொள்வதில்லை. ஷிங்ஜியாங் மாகாணத்தில் வசிக்கும் பல்லாயிரம் வீகர் இன முஸ்லிம்களை தடுப்பு முகாம்களில் அந்நாட்டு அரசு அடைப்பது சமீபத்தில் சர்வதேச விமர்சனங்களை ஈர்த்தது. அது தீவிரவாதம் பரவாமல் தடுக்கும் முயற்சி என்கிறது சீன அரசு.

ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ளக்கூடாது என்று சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சீன அரசு தடை விதித்தது.

மக்கள் தொகையில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வேலை செய்யும் வயதினர் குறைவதால், 2015இல் அந்த விதியைத் தளர்த்தியது.

சீனப் புரட்சியின் 70ஆவது ஆண்டு விழாவை எதிர்மறையாக எதுவும் நடக்காமல் கொண்டாட சீனா நினைத்தது.

ஆனால், ஹொங்கொங் அரசு சமீபத்தில் நிறைவேற்ற முயன்ற குற்றப் பின்னணி உடையவர்களை சீனாவிற்கு நாடு கடத்தும் சட்ட மசோதா, ஹொங்கொங் அரசு மற்றும் சீனாவிற்கு எதிரான போராட்டங்களைத் தூண்டியது. அதனால் ஹொங்கொங் அரசு அந்தச் சட்ட வரைவை விலக்கிக் கொண்டது.

china33 ஆயுத வலிமையை வெளிக்காட்டும் சீனாவின் தேசிய தின பேரணிஇன்று காலை பெய்ஜிங்கில் சீன அரசு கொண்டாடிக்கொண்டிருந்த சமயத்தில் ஹொங்கொங்கில் சீன எதிர்ப்பு போராட்டங்கள் நடந்தன.

1898 முதல் பிரிட்டனால் 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுக்கப்பட்டிருந்த ஹொங்கொங், 1997இல் சீனாவுடன் இணைந்தது. எனினும், ஒரு நாடு இரு அமைப்பு மறை என்னும் கொள்கையின்படி, சட்டம் இயற்றல், நிர்வாகம் உள்ளிட்டவற்றில் ஹொங்கொங் தன்னாட்சி அதிகாரங்களைப் பெற்றுள்ளது.

இந்தத் தன்னாட்சி உரிமை 2047இல் முடிவிற்கு வரவுள்ளது. எனினும், இது எப்போதும் தொடர வேண்டும் என்றும், ஹொங்கொங் இன்னொரு சீன நகரத்தைப் போல் ஆகிவிடக் கூடாது என்றும் அந்த நகர மக்கள் விரும்புகின்றனர்.

இன்றைய அணிவகுப்பில் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் உடைய ஏவுகணைகள் மற்றும் உபகரணங்களை சீனா காட்சிப்படுத்தியது.

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தென்சீனக் கடல் உள்ளிட்ட பகுதிகளில் அமெரிக்காவின் ஆதிக்கத்தைத் தடுக்கும் நோக்கில், அணு ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடிய DF26 போன்ற ஏவுகணைகள் இன்று அணிவகுப்பில் பங்கேற்றன.

இத்தகைய ஆயுதங்கள் அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் இடையே நடந்த பனிப்போர் கால மனநிலையை இப்போது அமெரிக்கா மற்றும் சீனா இடையே உருவாக்கின்றன.

பசுபிக் பெருங்கடலின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கப் பிராந்தியமான குவாம் தீவின் பாதுகாப்பு இப்போது சீனாவின் கூடுதல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்காவுடனான வர்த்தக போரால் சீனா அமெரிக்காவிற்கு மேற்கொண்ட ஏற்றுமதிகள் குறைந்துள்ளன.

பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் பல கோடி மக்களை, குறுகிய காலத்தில் வறுமையில் இருந்து மீட்ட சீனாவின் உள்நாட்டு பொருளாதாரமும் முன்பு அளவிற்கு வலிமையாக இல்லை.

சீன உற்பத்திகளுக்கான சர்வதேச சந்தைத் தேவை குறைந்து வருவதால், பொருளாதார வளர்ச்சி விகிதமும் சரிந்து வருகின்றது.

தாய்லாந்து, லாவோஸ், கம்போடியா, மியான்மார் போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் முதலீடு செய்வதில் சீனா கவனம் செலுத்தி வருகின்றது.

மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய முக்கிய தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா உள்ளது.

இத்தனை சிக்கல்கள் மற்றும் விமர்சனங்களுக்கு நடுவிலும், சில ஆண்டுகளுக்கு முன் வளரும் நாடாக இருந்த சீனா இன்று அமெரிக்காவின் சர்வதேச வல்லாண்மைக்கு சவால் விடும் திறன் உடைய ஒரே உலக நாடாக இருப்பது இப்போதைக்கு சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது.

 

 

 

Leave a Reply