ரஸ்யாவுக்கு இந்த வாரம் பயணம் மேற்கொண்ட வடகொரிய அதிபர் கிம் ஜொங் யுன் ரஸ்ய அதிபர் விளமிடீர் பூட்டீனுடன் மேற்கொண்ட பேச்சுக்களை தொடர்ந்து இரு நாடுகளும் ஆயுத மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக ரஜ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரஸ்யாவுக்கு தனது இரும்பு கவசம் பொருத்திய தொடரூந்தில் வருகைதந்த கிம் கடந்த புதன்கிழமை (13) ரஸ்யாவின் விண்வெளி ஏவுதள உந்துகணைகளை தயாரிக்கும் நிறுவனத்திற்கு (cosmonaut’s space suit) பூட்டீனுடன் சென்றிருந்தார்.
ஏவுதளத்தை பார்வையிட்ட அவர் செய்மதிகளை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்திற்கு ரஸ்யாவின் தொழில்நுட்ப உதவிகளை கோரியிருந்தார். அதற்கு சம்மதம் தெரிவித்த ரஸ்ய அதிபர் வடகொரியாவுக்கு வருமாறு கிம் விடுத்த வேண்டுகோளையும் ஏற்றுக்கொண்டுள்ளார். ரஸ்ய அதிபரின் பயண எற்பாடுகளை கவனிப்பதற்காக ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சர் லாரோவ் எதிர்வரும் மாதம் வடகொரியா செல்லவுள்ளார்.
செய்மதிகளை ஏவுவதற்கு வடகொரியா அண்மையில் மேற்கொண்ட இரண்டு முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் ரஸ்யாவின் நவீன தாக்குதல் விமானங்களான எஸ்.யூ 35 மற்றும் எஸ்.யூ 57 என்பன உற்பத்தி செய்யப்படும் நிலையத்தையும் கிம் பார்வையிட்டுள்ளார்.
ரஸ்யாவுக்கு தேவையான போர் ஆயுதங்களை வழங்குவதற்கும் வடகொரியா இணக்கம் தெரிவித்துள்ளதுடன், ரஸ்யாவின் சிறப்பு படை நடவடிக்கைக்கு ஆதரவளிப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.