ஆப்கானிஸ்தான் வான்வழித் தாக்குதலில் 25 தலிபான்கள் பலி

ஆப்கானிஸ்தான் இராணுவத்தினர் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 25 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் வடக்கு பால்க் மாகாணத்தில் உள்ள தவ்லத் அபாத் கிராமத்தில் தலிபான்களைக் குறிவைத்து ஆப்கானிஸ்தான் இராணுவம் நேற்று(24) நடத்திய வான் தாக்குதலில் 25 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் முனீர் அகமது ஃபர்ஹாத் தெரிவித்தார்.

மேலும் இந்தத் தாக்குதலின் போது அருகிலிருந்த ஒரு விவசாயி வீட்டில் தாக்குதல் நடத்தப்பட்டு ஒரு பெண், குழந்தை உட்பட 4பேர் பலியானதாக ஆப்கானிஸ்தான் செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  ஆனால் இந்த தகவலை இராணுவத்தினர் நிராகரித்துள்ளனர்.

25 தலிபான்கள் கொல்லப்பட்டது தொடர்பாக தலிபான்கள் எந்தவித அறிக்கையையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.