அவுஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதிகளை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் நியூசிலாந்து

139 Views

அவுஸ்திரேலி தடுப்பு முகாம் அகதிகளில் ஆண்டுதோறும் 150 பேரை ஏற்றுக்கொள்ள இன்றும் தயாராக இருப்பதாக நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா- அமெரிக்கா இடையேயான அகதிகள் ஒப்பந்தத்தின் கீழான மீள்குடியேற்றம் நிறைவடைந்த பின்னர், நியூசிலாந்தின் சலுகையை அவுஸ்திரேலிய அரசு பரிசீலிக்கக்கூடும் எனக் கருதப்படுகின்றது.

அதே சமயம், அவுஸ்திரேலிய பிரதமர் Scott Morrison மற்றும் நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern இடையேயான சந்திப்பில் இதுகுறித்த விவாதிக்கப்படுமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா ஆட்சியின் இறுதிக்காலக்கட்டத்தில் கையெழுத்தான அகதிகள் ஒப்பந்தம்,அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உள்ள 1,250 அகதிகளை அமெரிக்காவில் நிரந்தரமாக குடியமர்த்த வழிவகை செய்துள்ளது. அதே போல், அமெரிக்காவின் தடுப்பில் உள்ள மத்திய அமெரிக்க அகதிகளை அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தவும் வழிவகைச் செய்கின்றது. இது ஒரே முறை நடைமுறைப்படுத்தப்படும் ஒப்பந்தமாக கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் இதுவரை 936 அகதிகளை மீள்குடியேற்றியுள்ள அமெரிக்கா, மேலும் 258 அகதிகளை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் 1,194 அகதிகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டதாகக் கருதப்படும் நிலையில், ஒப்பந்தத்தின் படி ஏற்றுக்கொண்ட 1,250 எனும் எண்ணிக்கைக்கு நெருங்கிய எண்ணிக்கையை இது எட்டியுள்ளது.

கடந்த அக்டோபர் 2020ல், நியூசிலாந்தின் அகதிகள் மீள்குடியேற்ற சலுகையை அவுஸ்திரேலியா கருத்தில் கொள்ளும் என அவுஸ்திரேலிய செனட்டிடம் உறுதிப்படுத்திய அவுஸ்திரேலிய உள்துறைச் செயலாளர்  Mike Pezzullo, “நியூசிலாந்தின் சலுகையை அவுஸ்திரேலிய அரசு நன்றியுடன் எண்ணிப்பார்க்கிறது. இந்த சலுகை அவுஸ்திரேலிய அரசின் பரிசீலணையில் உள்ளது,” எனக் கூறியிருக்கிறார்.

கடந்த 2001 முதல் 2007 வரை நடத்தப்பட்ட அவுஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பிலிருந்த நூற்றுக்கணக்கான அகதிகளை நியூசிலாந்து ஏற்கனவே மீள்குடியேற்றியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply