‘அழைத்தார் பிரபாகரன்’ நூலை எழுதிய அப்துல் ஜபார் காலமானார்.

395 Views

‘அழைத்தார் பிரபாகரன்’ நூலை எழுதிய சாத்தான் குளம் திரு அப்துல் ஜபார் அவர்கள் இன்று (22.12.2020) காலை மாரடைப்பால் காலமானார். தமிழ் நாட்டில் பிறந்து இலங்கை வானொலி வாயிலாக பிரபலமடைந்த அப்துல் ஜபார், இலங்கை இந்திய மற்றும் தமிழ் நாடு அரசின் விருதுகளையும் பெற்றவர்.

கடந்த நாற்பதுகளிலே தமிழகத்தில் இருந்து வாணிபம் செய்யும் நோக்கில் அப்துல் ஜபார் அவர்களின் தந்தையார் இலங்கைக்கு சென்றிருந்தார். சிறுவனாக இருந்த அப்துல் ஜபார் வீட்டில் ஒரே மகன் என்பதால் அவரையும் தன்னுடனேயே அழைத்துச் சென்றிருந்தார். கொழும்பில் தங்கிப் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சிறுவர் மலர் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அப்துல் ஜபாருக்குக் கிடைத்தது.

இவரது ஊடகப் பயணத்தில் முதல் பகுதி இலங்கை வானொலியில் தொடங்கியது. 14 ஆண்டுகள் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சிகள், நாடகங்கள் வழியாக திறன் வாய்ந்த ஊடகராக இயங்கும் வேளை, சிறீமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் விளைவாக மீண்டும் இந்தியா திரும்பினார். அங்கே பல்வேறு நிகழ்ச்சித் தயாரிப்புடன், நாடக நடிப்பிலும் ஈடுபட்டார். பின்னர் இந்திய வானொலி வழியாக தமிழ் கிரிக்கெட் வர்ணனையில் தனி முத்திரையை பதித்திருந்தார்

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் அழைப்பின் நிமித்தம் ஈழத்திற்கு சென்று தேசியத் தலைவரை நேரில் சந்தித்தார்.

 

 

153282e8 b7f4 411f a9d6 fc475e8c41cf ‘அழைத்தார் பிரபாகரன்’ நூலை எழுதிய அப்துல் ஜபார் காலமானார்.

தேசியத் தலைவர் வே . பிரபாகரன் அவர்கள் மீது அதீத பற்றுக் கொண்டவர் . தமிழர்களுக்கு ஈழ தேசம் மிக விரைவில் கிடைக்க வேண்டும் என தன் குரலால் ஊடகம் மூலம் உலகிற்கு எடுத்துக் கூறியவர். வாராந்தம் இந்தியக் கண்ணோட்டம் என்ற தொகுப்பை இரு தசாப்தங்களைக் கடந்து புலம்பெயர் வானொலிகளுக்காக ஆரம்பத்தில் இருந்த அதே துடிப்போடு வழங்கியவர் .

இஸ்லாமியப் பெருமக்களின் புனித நோன்பு காலச் சிறப்புப் பகிர்வு, அரசியல் கருத்தாடல், தமிழக மற்றும் இந்தியத் தேர்தல் காலத்தில் நேரடிப் பகிர்வுகள் என்று புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் இயங்கும் வானொலிகளுக்கான அவரின் பங்களிப்பை நீண்ட காலம் வழங்கி வந்தார். ஐரோப்பியத் தமிழ்ச் சமூகம் IBC தொலைக் காட்சியின் அங்குரார்ப்பண வைபவத்தில் இவருக்கு ‘வாழ் நாள் சாதனையாளர்’ விருது வழங்கிக் கெளரவித்தது.

இறுதியாக நிதர்சனம் ஊடகத்திற்கு 2020 மாவீரர் நாள் சிறப்பு நிகழ்ச்சிக்காக மாவீரர்களின் அர்ப்பணிப்பு, தமிழீழத் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் வீர வரலாறு பற்றியும் நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். இதுவே அவரின் இறுதி நேர்காணலாகவும் அமைந்தது. அந்த நேர்காணலில் தலைவரை தான் சந்தித்தது பற்றி உணர்வுபூர்வமாக கூறியிருந்தார்.

அவரது மறைவு தமிழ்ச் சமூகத்துக்கு பேரிழப்பாகும்.

Leave a Reply