அரச புலனாய்வாளர்களால் தொடர்ந்து அச்சுறுத்தப்படும் முன்னாள் போராளிகள் ; சார்ள்ஸ்

கோட்டாபய ராஜபக்‌ஷவின் ஆட்சியில், அரச புலனாய்வாளர்களால் முன்னாள் பேராளிகள் அச்சுறுத்தப்படுவதாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றஞ்சாட்டினார்.

முல்லைத்தீவு – குமுழமுனைப் பகுதியில், இடம்பெற்ற தேர்தல் கூட்டமொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்பு, அரச புலனாய்வாளர்கள் முன்னாள் போராளிகளின் வீடுகளுக்கு அடிக்கடி செல்வதாகவும் முன்னாள் போராளிகள் வெளி மாவட்டங்களுக்குச் செல்வதானால், புலனாய்வாளர்களிடம் தெரிவித்துவிட்டுச் செல்லவேண்டுமெனக் கூறுவதாகவும் இது தொடர்பில், முன்னாள் போராளிகள் பலர் தன்னிடம் முறையிட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 26ஆம் திகதியன்று, அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு பிரதமர் பதவியை வழங்கியிருந்தாரெனவும் ஆனாலும், மஹிந்தவால் நாடாளுமன்றத்தில் 113ஆசனங்களைப் பெற முடியாமல் போனதெனவும் தெரிவித்தார்.

இருப்பினும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, நாடாளுமன்ற குழப்ப நிலைகள், தமிழ் மக்களுடைய அபிப்பிராயம் என்பவைக்கு அமைவாக, 33 நாள்களுக்குப் பின்பே ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்கியிருந்தாகவும் தமிழ் மக்கள், மஹிந்தவை விரும்பாத காரணத்தாலேயே மைத்திரிக்கு வாக்களித்தனர் என்பதை அவரிடத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெளிவாக எடுத்துக்கூறியிருந்ததெனவும் தெரிவித்தார்.

தேர்தலுக்குப் பின்பு, புலனாய்வாளர்கள் முன்னாள் போராளிகளின் வீடுகளுக்கு அடிக்கடி செல்வதாகவும் முன்னாள் போராளிகள் வெளிமாவட்டங்களுக்குச் செல்வதானால், புலனாயவாளர்களிடம் தெரிவித்துவிட்டுச் செல்லவேண்டுமெனக் கூறுவதாகவும் முன்னாள் போராளிகள் பலர் முறையிட்டுள்ளனர் எனவும், அதனால் தாங்கள் இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருவதாக கூறியிருந்தனர் என்றும் தெரிவித்தார்.