”தமிழர்கள் முட்டாள்கள்,அரசியல் சாணக்கியம் அற்றவர்கள்”அதாவுல்லாவின் கருத்துக்கு கண்டனம்

486 Views

சாணக்கியமான நாகரிகமான பண்பாட்டு அரசியலை அதாவுல்லா தமிழ் தலைமைகளிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து வாய்க்கும் மூளைக்கும் சம்மந்தமில்லாமல் பேசுவதை தவிர்க்க வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அம்பாரை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான  கவீந்திரன் கோடீஸ்வரன் காட்டமாக கூறினார்.

தமிழர்கள் முட்டாள்கள் என தேசிய காங்கிரசின் தலைவர் அதாவுல்லா தெரிவித்த கருத்து தொடர்பில் அக்கரைப்பற்று பிரதேசத்தில் 24ம்திகதி  இடம்பெற்ற மக்கள் ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போது தமிழர்கள் முட்டாள்கள், அவர்களின் தலைவர்கள் அரசியல் சாணக்கியம் அற்றவர்கள். அவ்வாறு சாணக்கிய அரசியல் கற்றுக்கொள்வதானால் தமிழ் தலைமைகள் தன் பின்னால் சில காலம் பைல்களை சுமக்க வேண்டும் என அதாவுல்லா தெரிவித்திருந்தார். இது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்   இந்த நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்து இந்த நாட்டில் அரசியலை கற்றுக்கொடுத்தவர்கள் சேர் பொன் இராமநாதன் மற்றும் சேர் பொன் அருணாச்சலம் போன்றவர்கள். அதன் பின் சிறந்த அரசியல் தலைமைத்துவ பண்பாட்டை கொண்டிருந்தவர் தமிழரசுக்கட்சியின் தலைவர் தந்தை செல்வா அவர்கள்.

தந்தை செல்வாவின் பாசறையில் வளர்ந்தவர் தலைவர் அஷ்றப் அவர்கள். அவ்வாறன அஷ்றப் அவர்கள் கூட தனக்கு அரசியலை கற்றுக்கொடுத்தவர்கள் தமிழ் தலைவர்கள் என பல இடங்களில் சிறப்பாக கூறியுள்ளார். அவ்வாறு சாணக்கிய அரசியலை முன்னெடுக்கின்றவர்கள் தமிழ் தலைவர்கள் என பல சிறந்த முஸ்லிம் தலைவர்களும்  கூறியுள்ளனர்.

அவ்வாறு இருக்கையில் தமிழர்கள் அரசியல் தெரியாத முட்டாள்கள். அவர்களின் தலைவர்கள் அரசியல் சாணக்கியம் அற்றவர்கள் என அதாவுல்லா கூறுகின்றார். அவரது கருத்து தமிழ் மக்களிடையே கவலையையும் விசனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சாணக்கியமான நாகரிகமான பண்பாடுடைய தமிழ் தலைமைகளை இவ்வாறு இழிவுபடுத்தி பேசுவதற்கு அதாவுல்லா அருகதையற்றவர். தனது இனத்தையே காட்டிக்கொடுத்து முஸ்லிம் சமூகத்தின் அழிவிலே அரசியல் நடத்துகின்றவர் அவர்.

அவர் வந்ததும் குதிரை, அவர் கேட்டதும் குதிரை, இருப்பதும் குதிரை, அவ்வாறு குதிரையோடி அரசியலுக்கு வந்தவர் இவ்வாறு அரசியல் ஞானமற்ற கீழ்தரமான கருத்துக்களையே வெளியிடுவார்.

அவர் அடிக்கடி இவ்வாறான கருத்துக்களையே வெளியிடுவார். கொரோனா என்பது சாதாரண தடிமல் என சொன்னதும் அவரே. இவ்வாறு கருத்துக்களை தெரிவிக்கும் அவரே மாபெரும் முட்டாள் என காட்டமாக கருத்துரை அவர் இந்த நிலையில் அவரது கருத்தை வன்மையாக நாம் கண்டிப்பதாகவும் அவரால் கூறப்பட்ட கருத்தை அவரே வாபஸ் பெறவேண்டும் எனவும் குறிப்பிட்டார்

Leave a Reply