அம்பாந்தோட்டை துறைமுகம் – மகிந்தாவின் தயவை நாடுகின்றது பிரான்ஸ்

அம்பாந்தோட்டை துறைமுகப்பகுதியில் முதலீடுகளை மேற்கொள்ள தாம் விரும்புவதாக சிறீலங்காவுக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவற்று சிறீலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சாவிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மகிந்த ராஜபக்சாவின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மகிந்தாவை அவரது அலுவலகத்தில் சந்தித்த பிரான்ஸ் தூதுவர் பிரான்ஸ் இன் தேசிய தின கொண்டட்டங்களில் கலந்துகொண்டதற்கு நன்றியை தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் அரசியல் மற்றும் பொருளாதார நிலமைகள் உறுதியாகக் காணப்படுமானால் பல முதலீட்டாளர்கள் முதலீடுகளை மேற்கொள்ள முன்வருவார்கள். அம்பாந்தோட்டை துறைமுகம் உலகின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கடற்போக்குவரத்து பாதையில் உள்ளது. அது முதலீட்டுக்கு சிறந்த இடமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் தமது அரசு அமையும்போது முதலீட்டுக்கான வழிகளை தான் ஏற்படுத்துவதாக மகிந்தா தெரிவித்துள்ளார்.