அமெரிக்காவில் கலவரம் -ட்ரம்ப்-ன் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்கள் முடக்கம்

388 Views

அமெரிக்காவில் நடைபெற்று முடிந்த  அதிபர் தேர்தல் முடிவுகள் தொடர்பான விவகாரத்தில், தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்து வரும் அதிபர் ட்ரம்ப், வன்முறையை தூண்டும் வகையில் கருத்து பதிவிட்டதாக அடுத்த 24 மணிநேரத்திற்கு  அவரின் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர், ஃபேஸ்புக் நிறுவனங்கள்  அறிவித்துள்ளன.

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் தாம் தோல்வி அடைந்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றதை ஏற்றுக்கொள்ள மறுத்துவரும் அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்த வெற்றியை ஏற்று சான்றிதழ் தராமல் தேர்தல் முடிவுகளை நிராகரிக்கும்படி துணை அதிபர் மைக் பென்சை வலியுறுத்தி வருகிறார்.

கலவரக் காரர்கள் சிலரை அடிபணிய வைத்த பாதுகாப்புப் படையினர்.

இந் நிலையில், அதிபர் தேர்தல் முடிவுகளை உறுதி செய்வதற்காக நாடாளுமன்றக் கூட்டம் நடந்துகொண்டிருந்த போது ட்ரம்ப் ஆதரவு கலவரக் கும்பல் நாடாளுமன்றத்தில் புகுந்து கலவரத்தில் ஈடு பட்டதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து வாஷிங்டன் டிசி-யில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கலவரத்தை தொடர்ந்து தனது ஆதரவாளர்களைத் திரும்பிப் போகும்படி ட்ரம்ப் வேண்டுகோள் விடுக்கும் வீடியோவை ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் அகற்றியுள்ளன. அந்த வீடியோவில் ஆதரவாளர்களை திரும்பிப் போகச் சொல்லும் அதே நேரம், அவர் தேர்தலில் முறைகேடு நடந்துவிட்டதாக ஆதாரமில்லாமல் மீண்டும் குற்றம்சாட்டினார்.

முன்னாள் அதிபரும் டிரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்தவருமான ஜார்ஜ் புஷ் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளார்.

இந்நிலையில், ட்ரம்புக்கு எதிராக பல நாட்டுத்தலைவர்கள் தமது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்திய பிரதமர் மோடி வெளியிட்டுள்ள கண்டனத்தில் “வாஷிங்டன்னில் நடந்த வன்முறை மற்றும் கலவரம் குறித்த செய்திகள் வேதனை அளிக்கிறது. அமைதியான முறையில் அதிகாரம் மாற்றப்படும் நடவடிக்கைகள் தொடர வேண்டும். ஜனநாயக நடைமுறைகளை, சட்டவிரோத போராட்டங்கள் மாற்றுவதை அனுமதிக்கக்கூடாது” என்று கூறியுள்ளார்.

 கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

“நமது அண்டை நாடும், நட்பு நாடான அமெரிக்காவில் ஜனநாயகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தால், கனடா மக்கள் ஆழ்ந்த வேதனையும், கவலையும் அடைந்துள்ளனர். மக்களின் விருப்பத்தை வன்முறை மாற்றிவிடாது. அமெரிக்காவில் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அவையில் புகுந்த ஒரு கலவரக்காரர் கையில் அவைத் தலைவரின் உரை மேடையை தூக்கிக் காட்டுகிறார்.

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன்

“வன்முறை சம்பவங்கள் கவலையை ஏற்படுத்தியுள்ளது . கண்டனம் தெரிவிக்கிறேன்”

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன்

“நடந்த சம்பவங்கள் தவறு. ஜனநாயகத்தில், மக்கள் அளித்த ஓட்டு, அவர்களின் எண்ணங்கள் கேட்கப்பட்டு அவை, அமைதியான முறையில் நிறைவேற்றப்பட வேண்டும்”.

நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க்

“அமெரிக்காவில் ஜனநாயகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஏற்று கொள்ள முடியாதது. இதனை தடுத்து நிறுத்த வேண்டியது டிரம்ப்பின் கடமை”

ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோவென்

“நடந்த சம்பவத்திற்கு, அதிபர் டிரம்ப்பும் மற்றும் சில உறுப்பினர்களே காரணம். ஜனநாயக முறையில் நடந்த தேர்தல் முடிவுகள் மதிக்கப்பட வேண்டும்”

அயர்லாந்து வெளியுறவு அமைச்சர் சைமன் கோவேனி

“வாஷிங்டன்னில் நடந்தது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. தற்போதைய அதிபர் மற்றும் ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலாகவும், சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடந்த தேர்தல் முடிவுகளை மாற்றும் முயற்சியாகவும் இதனை பார்க்க வேண்டியுள்ளது. உலகம் இதனை கவனித்து வருகிறது. அமைதி நிலைநாட்டப்படும் என நம்புகிறேன்”

நெதர்லாந்து பிரதமர மார்க் ரூட்டே

“வாஷிங்டன்னில் அதிர்ச்சியளிக்கும் காட்சிகளை பார்க்க முடிகிறது. ஜோபிடன் வெற்றியை, அதிபர் டிரம்ப் இன்றே அங்கீகரிக்க வேண்டும்” இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

உலகம் முழுவதும், ஜனநாயகத்திற்கான எடுத்து காட்டாக அமெரிக்க பார்லிமென்ட் உள்ளது. ஜனநாயகத்தின் கோவிலாக அமெரிக்க காங்கிரஸ் உள்ளளது. இன்று நடந்த சம்பவங்கள் அதிர்ச்சியை அளிக்கிறது.

Leave a Reply