அணுக்கதிர்வீச்சு நீரை கடலில் கலக்க ஐ.நா அனுமதி

யப்பானில் சேமிக்கப்பட்டுள்ள அணுக் கதிர்வீச்சுக் கொண்ட நீரை பசுபிக் சமுத்திரத்தில் கலப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக அணுசக்தி அமைப்பு கடந்த செவ்வாய்க்கிழமை (4) அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் யப்பானின் கடல் பகுதியில் ஏற்பட்ட 9 புள்ளி அளவுள்ள பூமி அதிர்வினால் ஏற்பட்ட ஆழிப்பேரலையினால் பக்குசீமா பகுதியில் அமைந்திருந்த அணுசக்தியில் இயங்கும் மின்னிலையம் சேதமடைந்திருந்தது. அந்த மின்னிலையத்தில் இருந்து வெளியேறிய கதிரியக்க நீரை யப்பான் அரசு கடந்த 12 ஆண்டுகளாக சேமித்து வைத்திருந்தது.

சீனா, தென்னாபிரிக்கா உட்பட பல மனித உரிமை, சுற்றுச்சூழல் அமைப்புக்கள் தமது எதிர்ப்புக்களை தெரிவித்துவருகின்றபோதும், நீரை கடலில் கலப்பதால் சூழலுக்கும், மனிதர்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்படாது என ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

பக்குசீமா அணுசக்தி நிலையத்தில் இருந்து ஒரு நாளைக்கு 100 சதுரகன மீற்றர் கதிர்வீச்சுக் கொண்ட கழிவு நீர் வெளியேறுகின்றது. ஆனால் அங்குள்ள சேமிப்பு தாங்கியில் 1.3 மில்லியன் சதுரகன மீற்றர் நீரையே சேமிக்க முடியும். நீரை கடலில் கலப்பதற்கு 30 தொடக்கம் 40 வருடங்கள் எடுக்கும்.

கழிவுநீரில் உள்ள றிற்ரியம் மற்றும் கார்பன்-14 ஆகியவை அனைத்துலக தரத்திற்கு அமைவாக உள்ளதாக யப்பான் தெரிவித்துள்ளது. ஆனால் அது சூழலுக்கு ஆபத்தானது என யப்பானின் மீனவர் அமைப்புக்களும், சீனாவும் தெரிவித்து வருகின்றன. ஐ.நாவின் நடவடிக்கை பொறுப்பற்ற செயல் என சீனா மேலும் தெரிவித்துள்ளது. றிற்ரியம் என்ற கதிரியக்க இரசாயணம் மனிதர்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.