வெலிசறை முகாமிலுள்ள கடற்படையினர் வேறு முகாம்களுக்கு மாற்றப்படுவர்: ஊடகப் பேச்சாளர்

வெலிசர கடற்படை முகாமிலுள்ள கடற்படை சிப்பாய்களை வேறு முகாம்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவிக்கின்றார்.

இதன்படி, வெலிசர கடற்படை முகாமில் சேவையாற்றும் படையினர் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் படையினரை வேறு முகாம்களில் சேவையில் ஈடுபடுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற இராணுவ விழாவில் பங்கு பற்றிய நிலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதியான இரண்டு சிப்பாய்களின் இரண்டாவது பீ.சி.ஆர் பரிசோதனை அறிவிக்கை இதுவரை கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

குறித்த இரண்டு கடற்படை சிப்பாய்களும் ஏப்ரல் மாதத்தில் விடுமுறை நிமிர்த்தம் சென்றுள்ளதாகவும், அவர்கள் மீள அழைக்கப்பட்டு மருதானை பகுதியிலுள்ள இடமொன்றில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் என அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களும் 11ஆவது இராணுவ வெற்றி விழாவில் பங்குப்பற்றுவதற்கு முன்னர் பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு கொரோனா எவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றியிருக்கும் என்பது தொடர்பிலான அறிக்கை விரைவில் கிடைக்கும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.