சிறுமி மீது வன்முறைப் பிரயோகம்- குற்றவாளிகளின் சார்பாக வாதாடும் தமிழ் அரசியல்வாதி

நான்காம் தரத்தில் கல்வி பயிலும் 9 வயதுடைய மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வல்வெட்டித்துறை அம்மன் கோயிலில் வேலை செய்யும் 71 வயதான ஆலய மடப்பள்ளி அர்ச்சகர் மற்றும் சிறுமியின் சித்தப்பா உள்ளிட்ட இருவரது விளக்கமறியலையும் வரும் 20ஆம் திகதிவரை நீடித்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

சிறுமி பொலிசாரின் முன்னிலையில் ஆஜரான பொழுது அர்ச்சகர் தன்னை ஆலய மடப்பள்ளியில் வைத்து துன்புறுத்தலுக்குள்ளாகியதாகவும் தனக்கு அதிகளவான பணத்தை அவர் தந்ததாகவும் சிறுமி விசாரணையில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் தனது சித்தப்பா ஒருவரும் இவ்வாறு தன்னை துன்புறுத்துவதாகவும் சிறுமி தெரிவித்திருந்தார்.
அத்துடன் அர்ச்சகரால் வழங்கப்பட்டஒருதொகை பணத்தையும், சிறுமியிடம் கொடுத்திருந்த அர்ச்சகரின் பெயரில் இருந்த சிம் அட்டையைக் கொண்ட கையடக்கத் தொலைபேசியையும் சிறுமி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக பருத்தித்துறை நீதி மன்றில் டிசம்பர் 12 ஆம் திகதி நடைபெற்ற வழக்கில் குற்றவாளியாகச் சந்தேகிக்கப்பட்ட அர்ச்சகரின் சார்பில் முன்னிலையான ரெலோவின் முன்னாள் சிரேஸ்ட தலைவரும் மூத்த சட்டத்தரணியுமான என். சிறிகாந்தா அர்ச்சகரை விடுதலை செய்ய வேண்டுமென்று பிணை விண்ணப்பம் செய்த போதும் பாதிக்கப்பட்ட சிறுமியின் நலன் சார்பில் முன்னிலையான பிரபல சமுக சேவையாளரும், சட்டத்தரணியுமான கனகரட்னம் சுகாஸ் குறிப்பிட்ட இரு சந்தேக நபர்களின் விடுதலை தொடர்பாகக் கடுமையான ஆட்சேபனையை முன்வைத்து “சிறுமி ஆலய அர்ச்சகரால் 2 வருடங்களாக வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார்.

மக்கள் வழிபடும் ஆலயத்துக்குள் இவ்வாறான சமூகப்பிறழ்வு இடம்பெற்றுள்ளமை பாரதூரமான விடயம். இதனை சமூகத்தில் அனுமதிக்கவே முடியாது. சிறுமி பராயமடையாதவர். அவருக்கு அர்ச்சகரால் தனக்கு இழைக்கப் பட்ட பாதிப்பை விவரிக்க முடியாது. அதனால்தான் சட்ட மருத்துவ அறிக்கையைக் கோருகின்றோம். பராயமடையாத சிறுவர்களின் காப்பகமாக நீதிமன்றமே உள்ளதால்,முதலாவது சந்தேகநபரான அர்ச்சகரும் அவருக்கு உடந்தையாகவிருந்த சிறுமியின் சித்தப்பாவையும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கவேண்டும்” என்று சட்டத்தரணி சுகாஸ் மன்றுரைத்தார்.

அவரது மன்றுரைப்பை அடுத்து இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதிவான் சந்தேகநபர்களின் பிணை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு அவர்களது விளக்கமறியலை நீதிமன்றம் மேலும் 20 ஆம் திகதி வரை நீடித்துள்ளதுடன் சிறுமியின் சட்ட மருத்துவ அறிக்கையையும் அவரது வாக்குமூலத்தையும் எதிர்வரும் 20ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்க நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டது.

அதேவேளை ஆலய வளாகத்தினுள் நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை மக்கள் அதிர்ச்சியும், கவலையும் கொண்டிருந்ததுடன் குறித்த குற்றவாளிககள் மீது தமது கண்டனத்தையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.