மாணவர்களின் தற்போதைய கல்வி நிலையும்,வறுமையும்- க.குவேந்திரா (கிழக்குப் பல்கலைக்கழகம்)

287
16 Views

இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையானது Covid-19 வைரசின் தாக்கத்தின் உச்சமாகும். சமூக ஒன்று கூடல்களின் மூலமாக அதிகரிக்கின்ற இந்த வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கத்தினால் கடந்த 13.03.2020 அன்று பாடசாலைகளினது கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இன்றுவரை நீடிக்கின்றது. இவ்வாறான செயற்பாடுகள் வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாக்கும் நல்லெண்ணத்திலே அமுல்படுத்தப்பட்டுள்ளன. இந்த சூழ்நிலையானது அரசியல்,பொருளாதார துறைகளிலும் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இதனடிப்படையில் கல்வித்துறையானது எதிர்காலத்தில் பாரிய சவாலை எதிர்நோக்க நேரிடும். இவ்வாறான கல்வித்துறைசார் பின்னடைவுகளை தவிர்க்க இலங்கை அரசானது இணையவழி கல்விச்செயற்பாடுகளை பாடசாலை மாணவர்களுக்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கும் நடைமுறைப்படுத்த முன்னெடுக்கும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கதாகும். ஆதனடிப்படையில் மாணவர்களுக்கு வானொலி, தொலைக்காட்சி, சமூகவலைத்தளங்கள் மூலமாக பல கல்விசார் செயற்பாடுகள் நடைபெற்ற வண்ணமே உள்ளன.

இவ்வாறான நிலையில் இலங்கை போன்ற வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் இந்த இணையவழி (online) கல்விச்சேவைகள் வினைத்திறனாக மாணவர்களிடம் சென்றடைகின்றதா என்பது கேள்விக்குறியே. பாடசாலை நடைபெறுகின்ற காலங்களிலும் கூட வறுமையின் கோரப்பிடியிலுள்ள மாணவர்களினால் தமது கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பல அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். இதில் தற்போதைய நிலை மிக கடினமானதாகும்.

இந்தவகையில் ஆப்ரகாம் மாஸ்லோவின் கொள்கையினை நாம் மனதில் கொள்ள வேண்டும். ஒருவனுக்கு முதலும் அடிப்படையுமாக அமைவது தனது உடலியல் தேவைகளாகும். அந்தவகையில் ஒருவனுடைய வயிறு நிறைந்தால்தான் அவன் அடுத்த கட்டத்திற்கு தனது செயற்பாடுகளை முன்னெடுக்க முனைகிறான்.

எனினும் ஒருவேளை உணவிற்கே கஷ்டப்படுமளவிற்கு இந்த வைரஸ் தாக்கம் அநேகமானோரை வறுமையில் வாட வைத்துள்ளது. இதில் அவ்வாறான குடும்ப பின்னணியிலுள்ள மாணவர்களினால் எவ்வாறு தனது இணையவழி கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமென்பது கவலைக்குரிய விடயமே.

இதிலும் முக்கியமானது கிராமப்புரங்களிலுள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாரியளவில் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. தற்போதைய நிலையில் வலையமைப்பு வேகம் (Network Speed) வெகுவாக குறைந்துள்ளது. இதனால் அநேகமான கிராமப்புரங்களில் வலையமைப்புக்களுக்கான உந்துதல் (Coverage)கிடைப்பதேயில்லை. மேலும் மீள்நிரப்பு (Recharge)செய்வதற்கான சூழ்நிலைகளும் காணப்படவில்லை. இவ்வாறான நிலையில் இணையவழி கல்வி வறுமையிலுள்ள மாணவர்களுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது.

அன்றாடம் தினக்கூலியினை பெறுகின்ற மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர் குடும்பத்தினுடைய தற்போதைய நிலையானது ஒரு நேர உணவிற்கே போராட வேண்டியுள்ளது.

அநேகமான தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,சமூகபற்றாளர்கள் போன்றோர் அவ்வப்போது உதவிகளை மேற்கொண்டாலும் இந்த ஊரடங்கு நிலை பிரகடனப்படுத்தப்பட்ட நாட்களுக்கு, இவ்வாறான உதவிகள் முழுமையாக ஈடுகொடுக்க முடியாது. மேலும் அரசாங்கமானது சமூர்த்தி பயனாளிகளுக்கு 5000 ரூபாய் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

எனினும் இந்த சலுகையினை பெற்றுக் கொள்வதில் மக்கள் பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதையும், அநேகமான குடுபம்பங்களுக்கு அவ்வாறான சலுகைகள் கிடைக்கப் பெறுவதே இல்லையென ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் மாணவர்கள் தமது கல்விச் செயற்பாடுகளை முன்னெடுத்தல் என்பது ‘நீருக்குள்ளால் நெருப்பை கடத்துவது’ போலாகும்.

எனவே தற்போதைய அசாதாரண சூழ்நிலையானது பொருளாதாரத்திலும் பாரிய சரிவை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். ஆகையால் அதற்கோற்றால் போல் கல்விச் செயற்பாடுகளையும் அமைக்கவேண்டும். எதிர்வரும் 11.05.2020 அன்று பாடசாலைகள் மீளஆரம்பமாகும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் கிட்டத்தட்ட 2 மாத கால விடுமுறைக்கு ஆளாக நேரிட்டுள்ளது. எனவே இதனை கருத்திற் கொண்டு ஆசிரியர்கள் கற்றல்- கற்பித்தல் செயற்பாடுகளை ஒழுங்கமைத்து, முன்னெடுத்தல் அவசியமாகும். மேலும் அரசியல்வாதிகள் தாம் பிரதிநிதித்தவப்படுத்தும் பிரதேசங்களின் கல்விச் செயற்பாடுகளை பூரண கரிசனை கொண்டு,செயலாற்றி சரிவடைந்த கல்விச் செயற்பாடுகளை உயர்த்தி நிலைநாட்ட வேண்டும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here