நாடாளுமன்றத்தில் திலீபன் நினைவேந்தல் குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு நாளை அனுஷ்டிப்பதற்கு அரசாங்கம் பொலீசார் ஊடாக தடைசெய்துள்ளமையானது, ஒட்டுமொத்த தமிழ் மக்களதும் நினைவு கூறும் உரிமையை மறுக்கும் செயல் என்பதனை சுட்டிக்காட்டி, குறித்த நினைவேந்தலை அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தும்  கோரிக்கை ஒன்றை இன்று நாடாளுமன்றில் வாசிக்கப்படுவதற்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தால் நேற்றய தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற நிலையியல், கட்டளைச்சட்டம் 27 (2) இன் கீழ் அவசர முக்கியத்துவம் மிக்க பொது விடயங்கள் தொடர்பில் கட்சித் தலைவர்கள் உரையாற்ற முடியும். அந்த வகையில் தியாக தீபம் திலீபன் அவர்களை நினைவு கூர அனுமதி மறுத்திருப்பது ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும் உணர்வுகளை புண்படுத்தும் செயலும் உரிமைகளை முற்றாக மீறும் செயலும் என்ற அடிப்படையில் மேற்படி கட்டளையின் பிரகாரம் உரையாற்றுவதற்கு முன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அனுமதி கோரியிருந்தார்.

ஆனால் அவர் சமர்ப்பித்திருந்த கோரிக்கையை உண்மைக்குப் புறம்பான காரணம் என்றும் குறித்த விடயமானது நீதி மன்றில் நிலுவையில் உள்ள வழக்கு விடயம் எனவும் கூறி அவர் உரையாற்ற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.