இலங்கையில் கஸ்டப்படுவதனை விட இந்தியாவிற்கு செல்லலாம் – சார்ள்ஸ் நிர்மலநாதன்

207 Views

இந்தியாவிற்கு செல்லலாம்

இலங்கையில் கஸ்டப்படுவதனை விட இந்தியாவிற்கு செல்லலாம் என்ற கதை மக்கள் மத்தியில் புதிதாக ஆரம்பித்திருக்கின்றது என  பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வாழ முடியாதெனக் கூறி இந்தியாவிற்கு மக்கள் படகில் செல்கின்றார்கள். இது  தொடர்பில் இலக்கு ஊடகத்திற்கு  கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடி நிலைமை காரணமாக இந்தியாவிற்கு ஒருசில குடும்பங்கள் பயணித்திருக்கின்றன.

தற்போது இலங்கையில் நெருக்கடியான நிலை உருவாகியிருப்பது உண்மை தான். ஏனென்றால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வடைந்துள்ளது. இதனால் சாதாரண வருமானம் உடைய குடும்பங்கள் அல்லது வருமானம் மிக குறைவான குடும்பங்கள் வாழ முடியாத சூழ்நிலை இருக்கின்றது. அதனைவிட ஒரு பொருளை பெற்று கொள்வதற்கு வரிசையில் நிற்க வேண்டிய நிலையும் உள்ளது.

சாதாரணமாக நாட்டு அரிசி 200 ரூபாவிற்கு வாங்குவது என்பது மிகச்  சிக்கலாக இருக்கின்றது.    பயறு 900 ரூபாய்க்கு மேல்  விற்கப்படுகின்றது. சாதாரண மக்கள் அச்சப்படுகின்றார்கள். இப்போதே இந்த நிலை எனில் எதிர்காலத்தில் வாழ்வாதாரத்தை, குடும்பங்களை, பிள்ளைகளுடைய கல்வியை, பசியை எப்படிப் போக்க முடியும் என்ற அச்சம் மக்களுக்கு தொடர்ச்சியாக உருவாகி இருக்கின்றது.

இந்தியாவிற்கு சென்ற குடும்பங்கள் இந்தியாவில் தொடர்பு இருக்கின்ற குடும்பங்களாக இருக்கும் என நினைக்கிறேன். உடனடியாக முடிவெடுத்து சென்றிருப்பார்கள். குறிப்பாக  மக்கள்  இங்கு இவ்வளவு கஸ்டப்படுவதனை விட  இந்தியாவிற்குச் செல்லலாம் என்ற கதை பேச்சு வழக்கில் புதிதாக ஆரம்பித்திருக்கின்றது.

ஆகவே இங்கு நெருக்கடி நிலை என்பது உண்மை. இதற்குரிய தீர்வு எப்படி அமையப் போகின்றது என்பது  கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது என மேலும் தெரிவித்தார்.

Leave a Reply