திலீபனின் தியாகத்தை உலகம் புரிந்து கொள்ளுமா?

மெலிந்த உடல் கொண்ட, இரும்பு மனம்கொண்ட மனிதன் தியாகி திலீபன் அவர்கள். இந்தியாவை நோக்கி ஐந்து அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து தன் உயிரை எம் தேசத்திற்கு ஒப்புக்கொடுத்தார் என்று சொன்னால், அது தியாகி திலீபன் அவர்களது நோக்கத்தைச் சுருக்கியே காட்டும்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் இடம்பெற்ற காலங்களில் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களுடன் கூடவே பயணிக்கின்றார் திலீபன். அங்குவைத்து தமிழர் தாயகத்தில் ஒடுக்கப்பட்ட சிறுபான்மை தமிழ் இனங்கள் தொடர்பாக ஐ. நா.நியமங்களுக்குட்பட்டு ராஜீவ் காந்தியிடம் முன்வைக்கப்பட்ட இனவழிப்பு மற்றும் மனித உரிமைப் பிரச்சனைகளை தீர்த்துவைக்குமாறு விடுதலைப்புலிகளின் தலைமையால் வேண்டப்பட்டபோது, ராஜீவ் காந்தி அவர்கள் வாய்மொழி மூலமாக வழங்கிய வார்த்தைகளை நிறைவேற்றத் தவறியமையால் வேறு வழி இன்றி, சர்வதேச நியமங்களுக்கு அமைவாக தன் இனத்தை திட்டமிடப்பட்ட இனவழிப்புக்களில் இருந்து எமது இனத்தைக் காப்பாற்றுங்கள் இல்லையெனில் எதிர்காலத்தில், இலங்கை தேசத்தில் வாழும் சிறுபான்மைத் தமிழினம் சிங்களப் பெரும்பான்மையால் துடைத்தெறியப்படும் எனும் செய்தியை திலீபன் தனது தற்கொடையால் உணர்த்திச் சென்றுள்ளார்.

இன்று திலீபன் அவர்களின் 33ஆம் வருட நினைவேந்தல் நாட்களை மையப்படுத்தி வழமையாக இடம்பெறும் எழுச்சி நிகழ்வுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களும் இளையோரும் எடுக்கும் முயற்சிகளும்  எப்படியாவது அவரின் நினைவேந்தலை செய்ய வேண்டும் எனும் தவிப்பும் அவர் கோரிய மக்கள் புரட்சிக்கு வித்திடும் களமாக அமையப்போவது மட்டும் உறுதியானது.

33 வருட தொடர் போராட்டங்களின் பின்பும் அவரின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்பட முடியாத சூழலில், பெருகி வரும் அடக்குமுறைகளால் தமிழர்களின் மனவுறுதி மென்மேலும் வலுப்பெறும் என்பது மட்டும் உறுதி.

1945-1951ஆம் ஆண்டுகளில் ஐ.நா சமவாயத்தால் கொண்டுவரப்பட்ட மனித உரிமைகள் இன ஒடுக்குமுறை மற்றும் இனவழிப்புத் தொடர்பான பரிந்துரைகளுக்கு அமைவாக திட்டமிட்ட இன அழிப்புக்கு ஏதுவான முன்னுரிமைப்படுத்த பட்ட விடயங்கள் சார்ந்ததாக அவரது ஐந்து அம்சக்கோரிக்கைகளும் அமைந்தன. அவை தமிழரின் நில அபகரிப்பு நிறுத்தம் இராணுவ பொலீஸ் மற்றும் ஊர்காவல்படைகளின் பயங்கர வாத தடைச்சட்டத்தின் பேரிலான போர்நிறுத்த கால அத்துமீறல்களும் படுகொலைகளும் நிறுத்தப்படல், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பவற்றையே வலியுறுத்தின. அதனை உலகம் செவி சாய்க்காமையாலேயே பிற்பட்ட காலங்களில் தமிழினப் படுகொலைகள் தமிழர் தாயகத்தை பிணக்காடாகவே மாற்றியிருந்தது.

அதன் விளைவு 1988-1990 காலப்பகுதியில் தமிழ் இளைஞர்கள் பல்லாயிரக்கணக்கில் அணிதிரண்டு விடுதலைப்போராட்டத்தில் இணைந்துகொண்டனர். தாயம் நோக்கிய பெரும் பயணத்தின் வெற்றி விளிம்பில் சர்வதேச சதியால் இன்று அது முள்ளிவாய்க்கால் முடிவு வரை வந்து நின்றாலும் பதினொரு வருடங்களின் பின்னர் தமிழ் இளையோர் அகிம்சை சார்ந்த அரசியல் போராட்டத்தை திலீபனின் நினைவு நாளில் தடைகள் மத்தியிலும் ஆங்காங்கே தன்னெழுச்சியாக முன்னெடுக்க முயல்வது ஒரு நல்ல தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.

திட்டமிடப்பட்ட பேரணிகள் அரச படைகளால் தடை செய்யப்பட்டாலும் அவர்கள் முன்வைக்கின்ற ஐந்து அம்சக் கோரிக்கைகளும் திலீபன் அவர்கள் 33 வருடங்களுக்கு முன்னர் முன்வைத்து ஆகுதியாகிய அதே ஐந்தம்சக்கோரிக்கைகளும் தற்கால இனவாத சர்வாதிகாரப்போக்குடைய அரசின் தமிழ் மக்கள் தொடர்பான நிலைப்பாடுகளுக்கேற்ப சிறுமாற்றம் செய்யப்பட்டவையாகவே காணப்படுகின்றன.

மனித உரிமைகள் அலட்சியப்படுத்தப்பட்டு அவமதிக்கப்பட்டதன் காரணமாக மனித குலத்தின் மனச்சாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செயல்கள் நிகழ்ந்ததாக உலகம் தழுவிய மனித உரிமைகள் அமைப்பின் முகவுரை குறிப்பிடுகின்றது.

இன்று மனித உரிமைகள் பற்றி உலக மக்கள் எல்லோரும் பேசுகின்றார்கள். இப்போது அது உலகெங்கும் மீறப்படுகின்ற ஓர் விடயமாகவும் தினசரி பேசுபொருளாகவும் விளங்குகிறது.

குறிப்பாக இலங்கை தொடர்பில் ஏகப்பட்ட கேள்விகள் எழுப்பப்பட்டே வருகின்றன. அதற்குக் காரணம் கடந்த கால சிங்கள அரசுகள் திட்டமிட்டு நடாத்திய இனப்படுகொலைகள் 2009 இல் உச்சம் தொட்டமையும் அதற்கான பொறுப்பு கூற மறுத்தலும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் இனப்படுகொலை தமிழர் வாழ் நிலங்களின் மீதான நில ஆக்கிரமிப்பு மற்றும் தமிழ் சமுதாயத்தின் அறவழிப் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி வருகின்றமை என பட்டியலிட்டு கொண்டே போகலாம்.

மனித உரிமைகள் வரையறைவுகளின் கீழ் பெரும்பான்மையானவர்கள் பேசுவதும் விவாதிப்பதும் அடிப்படை உரிமை மீறல்கள் மற்றும் பரிகார நீதி பற்றியதாகவே இருக்கின்றது.

இதற்காக அந்த மக்கள் செய்கின்ற அறவழிப் போராட்டங்களை ஒடுக்கு முறைகளுக்கூடாக அடக்கி விட்டு அதற்கு நியாயம் கற்பிக்கும் விதத்தில் ஐ.நா சபையில் அங்கம் வகிக்கின்ற முதலாளித்துவ நாடுகளால் கூட்டுச் சேர்ந்துவரையப்பட்டதே 1966ஆம் ஆண்டின் அனைத்துதேச குடிமைகள் மற்றும் அரசியல் உரிமைகள் ஒப்பந்தம் (international convention of civil and political rights  ICCPR) ஆகும்.  ICCPR இன் மூலாதார அறிக்கையில் சுதந்திரமான கருத்துரிமைகளை வரம்பிற்குட்படுத்தும் இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவைகள் பிரிவு19-3டி மற்றும் 20 ஆகியனவாகும். இவைகள் தேசிய பாதுகாப்பின் பெயரால் மக்களின் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் வாய்ப்பை பயன்படுத்த ஒடுக்குமுறை அரசுகளுக்கு வாய்ப்பளிக்கின்றது.

இலங்கை அரசும் இதனுள் ஒளிந்து கொண்டு ஒடுக்கப்படும் சிறுபான்மைத் தமிழரின்உரிமைகளின் குரல்வளையை அறுத்தெறிய முனைகின்றது.
ஆனால் இவற்றுக்கு எதிராக நாமும் எதிர்வினைகளை ஆற்றமுடியும். அது ஒடுக்கு முறைகளுக்கு உட்பட்ட ஒரு இனம் ஒட்டு மொத்தமுமாக ஓரணியில் இணைந்து போராடும் போது அல்லது பேரினவாத அரசிற்கு எதிராக எதிர்வினையாற்றும் சூழ்நிலைகளை எமது மக்கள் துணிந்து தங்களுக்குள் ஏற்படுத்திக்கொள்ளும் போது  ICCPRஇன் 19ஆம் 20ஆம் பிரிவுகள் வலுவற்றதாகி அது ஒடுக்கப்படும் ஒரு இனத்தின் தற்காக்கும் உரிமை  எனும் தார்மீக உரிமையாக ஐக்கிய நாடுகளின் 2005 ம் ஆண்டு உலக கூட்டொருமை மாநாட்டு தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. .

தமிழ் மக்கள் மேலும் மேலும் வலுவிழந்து தாங்கள் அரசியல் பலம் அரசியல் தலைமை அற்றவர்களாக சென்றுள்ளோம் என ஆத்திரமடைகின்றர்.

அரசியல்வாதிகள் மக்களின் உரிமைகள் பற்றிச் சிந்திக்கும் நேரங்களைவிட தங்களின் அடுத்த அரசியல் இருப்பும் அரசியல் எதிர்காலமும் பற்றியே சிந்திக்கின்றனர். இதனால் வெறுப்பும் கொதிப்பும் அடைந்துள்ள தமிழ் இளையோர் தங்கள் தலைவிதியை தாங்களே தீர்மானிக்கலாம் எனமுன்வந்துள்ளனர் என்றே திலீபனின் நினைவுநாள் நிகழ்ச்சி நிரல்கள் உணர்த்துகின்றது.

இலங்கை அரசின் இவ்வாறான திட்டமிட்ட ஒடுக்குமுறைகள் இன்னும் இறுக்கமாக இருக்கப்போகின்றது. அது தாயகத்தில் தமிழ் மக்கள் அமைப்புரீதியாக மேற்கொள்ள முனையும் அனைத்து நிகழ்வுகளையும் ‘மக்களாட்சிச்சட்டம்’ எனும் போர்வையில் அடக்கு முறைகளை கடினப்படுத்தவே செய்யும்.

இவ்வாறான சூழலில் தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக உலகின்பார்வைக்குத் தங்கள் நிலைப்பாட்டை எடுத்துச் செல்ல வேண்டும். அது எவ்வாறெனின் தாயகத்தில் இடம்பெறும் மாவீரர் நினைவு நாள் உட்பட அனைத்து நிகழ்வுகளிலும் இந்த இளைஞர்களுடன் மக்கள் அனைவரும் ஒன்றுதிரளவேண்டும். அதே சம நேரங்களில் ஒவ்வொரு ஈழக்குடிமகனின் வீட்டுமுற்றத்திலும் நினைவுத் தீபங்கள் நினைவு அலங்காரங்கள் பதாகைகள் போன்றவற்றை அடையாளப்படுத்தி நினைவேந்தல் நினைவுகளை துணிந்து செய்ய வேண்டும்.

அவ்வாறு செய்வதன் மூலம் அரசிற்கு தங்களின் எதிர்ப்பையும் விடுதலைக்காய் உயிர் நீத்த தியாகிகளுக்கு எமது வணக்கத்தையும் செலுத்தமுடியும்.
இதனால் அடக்குமுறை சட்டத்தால் தனி நபரையோ குழுக்களையோ நோக்கி பிரயோகித்து தடுக்கப்பட்ட செயலை ஒரு இனமே செய்தது என்று ஒடுக்குமுறை சிங்கள அரசு கைது செய்யவோ தண்டிக்கவோ வாதாடவோ முடியாமல் போகின்றது. அதே நேரத்தில் எமது சாத்வீகமான அரசியல் போராட்டம் சர்வதேசத் தீர்வொன்றை நோக்கி நகர்த்தப்படும்.

உண்மையில் ஐ.நா என்பது கூட்டுச்சூத்திரமாக சில மனிதநேயமானவார்த்தைகளைப் பிரயோகிக்கின்றது. அவைகள் வறிய நாடுகளை தங்களுக்குள் பிரித்து பங்கு போட்டுக்கொள்கின்றன. அவைகளின் தேவைகள் வேறு வேறாக இருக்கலாம் ஆனால் நோக்கம் ஒன்றாகவே எப்போதும் இருக்கும்.

2 திலீபனின் தியாகத்தை உலகம் புரிந்து கொள்ளுமா?

ஒரு சிலர் தங்களுக்குள்ள பலத்தால் பங்கை கொஞ்சம் பெரிதாக எடுத்துக் கொள்கின்றனர். இதனால் அதிருப்தியடைந்த ஏனையோர் பெரும்பங்கை அனுபவிப்பவருக்கு எதிராக ஒன்று சேர்கின்றனர். இதனால் ஒடுக்குமுறைக்குள்ளாகும் நாடுகளுக்கு சிலவேளை அனுகூலமாகக்கூட அமைந்து விடுகின்றது. இந்த சூட்சுமத்தின் அடிப்படையிலேயே எமது இனப் பிரச்சனைகளையும் இப்போது பார்க்கப்படவேண்டும்.

ஈழப்போராட்டம் உக்கிரமடைந்திருந்த காலத்தில் தமிழ் மக்களும் அவர்களது தலைமைகளும் இலங்கை அரசின் மனித உரிமைகள்பற்றிப் பேசியபோதெல்லாம் அவர்களுக்கு அது செவிடன் காதில் ஊதியசங்காகவே இருந்தது. அதே நேரத்தில் தங்கள் காதுகளை இறுக்கப் பொத்திக்கொண்டு அந்த நாடுகள் குண்டுகளை அள்ளிக் கொடுத்துக் கொல்லும்படி கட்டளையிட்டன.

கொல்லப்படுபவர்களை பயங்கரவாதிகளென கூட்டுச்சேர்ந்து முத்திரை குத்தினர். காரணம் இலங்கை மீது யார் காலணியாதிக்கத்தை தக்க வைப்பது என்பதில் கொண்ட சுயநலமும் அதனால் இலங்கைக்குத் தங்களை ஆபத்பாண்டவர்களாகப் போட்டி போட்டுக் கொண்டு காட்ட முனையும் நிலையுமாகும்.

தற்போது இலங்கை சீனாவின் காலணியாதிக்கத்துக்குள் கொண்டுவரப்பட்டு அதன் பின்னணியில் சீனாகட்டியெழுப்பியுள்ள அம்பாந்தோட்டைத் துறைமுக இராசதானியின் பின்னர். இந்தப் பங்குதாரர்களுக்கெல்லாம் சீனாவின் மீதான வெறுப்பு இலங்கையின் உச்சந்தலையில் கொள்ளி வைப்பதுவரை வந்து நிற்கின்றது.

அதனால் இப்போது அவர்கள் எமது இனப்பிரச்சனையில் கூடிய கவனம்செலுத்தவும் ஒடுக்கு முறைகளுக்குள்ளான தமிழ் மக்களின் சார்பாக குரல் கொடுத்து உள்நுழைய முயற்சிக்கின்றனர்.

எமது மக்களால் கடந்த காலங்களில் நடாத்தப்பட்ட போராட்டங்கள் அல்லது எழுச்சி நிகழ்வுகள் யாவும் சிங்கள அரசால் எவ்வாறு திட்டமிட்டு தடுக்கப்பட்டு வந்திருக்கின்றது. இது பற்றிய கடந்தகால அனுபவங்களை கருத்திலெடுக்காது இப்போது உள்ள சூழ்நிலைகளில் வெற்றிகரமாக ஒரு நிகழ்வை நடாத்துவது கடினமாகவே இருக்கும்.

ஏனெனில் எமது சுதந்திர விடுதலைப் போராட்ட உணர்வுகளை மக்களிடம் இருந்து இல்லாமல் செய்வதே எதிரியின் திட்டமாகும். இதற்கு ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் அரசியல் வாதிகளும் இளைஞர்களோடு கைகோர்த்து நிற்பதுடன் ஒவ்வொரு தமிழ் குடிமகனதும் தலையாய கடமையாக உணரவேண்டும்.

திலீபனின் போராட்டம் தடுக்கப்பட்டாலும் வெற்றியடைந்தாலும் இப்போதைய சூழலில் வெற்றி நமக்கே. ஆனால் ஒவ்வொரு போராட்டமும் சர்வதேசத்தின் கவனத்தைப்பெறவேண்டும்.

சுதந்திரமாக ஒரு போராட்டத்தைத் தொடர்வது என்பது பேரினவாத சிங்கள அரசிடம் எடுபடாது. போராட்டத்தை அடக்குவதற்கு சவுக்கடி வைத்தியமே சிறந்தது என கோத்தபாயவும் அவரது முப்படைகளும் பலமாக நம்புகின்றனர்.

இது தற்போதய உலக ஒழுங்கின் மாற்றத்தில் எமக்கு சாதகமானது. ஒருநாட்டின் நிலைமையை அந்த அரசு தனது மக்களை எவ்வாறு பார்க்கிறது என்பதையே சர்வதேசம் உற்றுப்பார்க்கும்.

‘சம்யக்சம்போதி’ பரிபூரண போதி நிலை அடைந்தவர் என கூறப்படும். கெளதமரின் உண்மையான வாழ்வுநெறி மனம், ஆசை, பகைமை நெறி என்பவற்றுக்கு அப்பாற்பட்டது. இப்போது அந்த மதத்தை பின்பற்றும் சிங்கள ஆட்சி பீடங்களும் தேரர்களும் மேற்கொள்ளும் இனப்பாகுபாடு மற்றும் தீவிர இனத்துவேசம் என்பது அப்பட்டமாக வெளிப்படுகின்றது. இதனைதொங்கிக்கொண்டிருக்கும் புத்த தர்மக்கோட்பாடுகளில் இருந்து வெளியேறி புறம்போக்குத்தனமான தேரவாத பெளத்த சர்வாதிகாரத்தை தூக்கிப்பிடித்துக்கொண்டிருக்கின்றனர் பெரும்பான்மை சிங்களவர்.

இதன் விளைவு இலங்கையில் இரு தேசங்கள் உருவாவதற்கே வழிவகைசெய்யும். யுத்தத்தால் சாதிக்க முடியாததை இலங்கை அரசின் இவ்வாறானநிலைப்பாடுகள் பன்னாட்டு ஆதரவுடன் கூடிய ஒரு தேசத்தை உருவாக்கும். இதற்கான தொடக்கத்தினையே 33 வருடங்களுக்கு முன்னர் தியாகி திலீபன் அவர்களும் மாவீரர்களும் தங்களது உயிர்களை ஈகம் செய்து எமது மக்களிடம் பொறுப்புக்களை ஒப்படைத்ததன் மூலம் செய்துள்ளனர்.

இதனை சரியாக உணர்ந்து கொண்டு எமது இளையோர்களுடன் அனைத்து மக்களும் அரசியல்வாதிகளும் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஒன்றிணைந்து போராட முன்வரவேண்டும்.

அழ.இனியவன்