உலக ஆசிரியர் தினம் இன்று. இத்தினத்தை முன்னிட்டு அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கான தீர்வை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா உள்ளிட்ட குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வடக்கு வலயம் சார்பாக காலை 9 மணிக்கு புதுக்குளம் பகுதியில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள், நீண்ட நாட்களாக நிலவி வரும் அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை வழங்குமாறு வலியுறுத்தி எம்மால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் நீண்ட நாட்களாக தொடர்கிறது. எனினும் அரசாங்கம் இதுவரையிலும் எமக்கான நிரந்தர தீர்வினை வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே எமது உழைப்பினை சுரண்டாமல் எமது பிரச்சனைகளை உடனடியாக தீர்ப்பதுடன் சுபோதினி அறிக்கையை நடைமுறைப்படுத்துமாறு தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இலவச கலவிக்கு 6 வீதம் நிதி ஒதுக்கு, இலவசக்கல்வியை தனியார் மயப்படுத்தாதே, தொழில் கௌரவத்தை உதாசீனப்படுத்தாதே, ஐந்தாயிரம் ரூபாய்க்காக அடிபணிய மாட்டோம், போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம், ஆசிரியர் சேவைகள் சங்கம் மற்றும் அதிபர்கள் கலந்து கொண்டனர். இதேவேளை காலை 10 மணியளிவில் வவுனியா தெற்கு வலயத்தின் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதே நேரம் கிளிநொச்சியில் சர்வதேச ஆசிரியர் தினமான இன்று (06-10-2021) பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஆசிரியர் நாளான இன்று நாடளாவிய ரீதியில் ஆசிரிய தொழிற்சங்கங்ககூட்டணி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளன.
அந்த வகையில் இன்றைய தினம் கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தின் போது உலக ஆசிரியர் தினத்தில் அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை நீக்கு….
பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதி செய்….
இலவசக் கல்வியை வியாபாரம் செய்யாதே……
கொத்தலாவல சட்டமூலத்தை உடனடியாக இரத்து செய் ….போன்ற கோஷங்களை எழுப்பியவாறு குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
இதில் கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களத்தினை சேர்ந்த அதிபர்கள் ஆசிரியர்கள் கல்விசாரா ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அதிபர் ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வை வழங்கும் படியும், பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதி செய்யுமாறு வேண்டியும் யாழ்ப்பாணத்திலும் போராட்டம் இடம்பெற்றது.
திருகோணமலை, கிண்ணியா வலய கல்வி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது சம்பள முரண்பாட்டை நீக்கக் கோரி, வலய கல்வி அலுவலகத்துக்கு முன்னால் இன்று (06) கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.