தற்காலிக இடர் முகாம்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : ஐ.நா

டித்வா சூறாவளியைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களில் நிலவும் சூழல், கடுமையான பாதுகாப்புக் கவலைகளை எழுப்பியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
கூட்ட நெரிசல் மற்றும் தனியுரிமை இல்லாமை ஆகியவை இளம் பெண்கள், முதிய பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிப் பெண்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு எதிரான வன்முறை அபாயத்தை அதிகரிப்பதாக சுட்டிக்காட்டுகின்றன.

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் கூற்றுப்படி, அனர்த்தங்களின் போது சாதாரண பாதுகாப்பு அமைப்புகள் சீர்குலைவது, பெண்கள் மற்றும் சிறுமிகளை அதிக பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
சுகாதார சேவைகளுக்கான அணுகல் தடைபடுவது, மட்டுப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் நீண்டகால இடம்பெயர்வு ஆகியவை அபாயங்களை மேலும் அதிகரித்துள்ளன.

வெளியேற்ற மையங்களுக்குள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துவதன் அவசரத் தேவையையும், அத்தியாவசிய சேவைகளுக்கான அணுகலை உறுதிப்படுத்துவதன் அவசியத்தையும் அந்த நிதியம் மேலும் எடுத்துரைத்துள்ளது.

இந்த அனர்த்தத்தால் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான இனப்பெருக்க வயதுடைய பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு மதிப்பிட்டுள்ளது.  இதில், 22,500 இற்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களும் அடங்குவர்.

இவர்களில் பலர் சரியான நேரத்தில் மருத்துவ உதவியைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் உளவியல் சமூக ஆதரவு சேவைகளை மேம்படுத்த அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாக ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், நிதியுதவிப் பற்றாக்குறையானது அதன் பதிலளிப்பின் அளவைக் கட்டுப்படுத்த அச்சுறுத்துவதாக ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் எச்சரித்துள்ளது.

தேவையான நிதியில் ஒரு பகுதி மட்டுமே தற்போது கிடைத்துள்ளதால், சர்வதேச சமூகம் உடனடியாகச் செயல்பட்டு, டிட்வா சூறாவளியால் இடம்பெயர்ந்த பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பையும் கௌரவத்தையும் உறுதி செய்யுமாறு ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் அழைப்பு விடுத்துள்ளது.

இதேவேளை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு சிறப்புக் கவனம் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளது என்றும், எந்தப் பெண்ணும் பின்தங்கவில்லை என்பதை உறுதிப்படுத்த அமைச்சு பிற நிறுவனங்களுடன் இணைந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.