விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதில்லை- மட்டக்களப்பு விவசாயிகள் தெரிவிப்பு

313 Views

விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதில்லை

சிறுபோக விவசாய நடவடிக்கையின்போது விவசாயிகளுக்கான உள்ளீடுகளை உரிய காலத்தில் வழங்குவதற்கு அரசாங்கம் மிகவும் கரிசனையாகவுள்ளதாகவும் சேதனப்பசளை மூலம் வெற்றிகரமான விவசாய நடவடிக்கையினை முன்னெடுக்கமுடியும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார்.

எனினும் தமக்கான உள்ளீடுகளை உரிய திணைக்களங்களுக்கு வழங்கும் வரைக்கும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதில்லையென விவசாயிகள் தெரிவித்தனர்.

இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விவசாய ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் அக்கூட்டத்தினை புறக்கணித்து வெளிநடப்புசெய்ததுடன் ஊடகவியலாளர் சந்திப்புகளையும் நடாத்தினார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள சிறுபோக விவசாய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையிலான விசேட கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள  குளங்கள்  ஊடாக இம்முறை 33800 ஹெக்ரயரில் சிறுபோக வேளான்மை மேற்கொள்ளப் படவுள்ளதாகவும் சுமார் 32700ஹெக்டயர் உரம் வழங்குவதற்கான காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்  அரசாங்க அதிபரினால் தெரிவிக்கப்பட்டது.

மேலும் பிரதேச செயலக ரீதியான விவசாய கூட்டங்களுக்கு திகதிகள் தீர்மானிக்கப்படும் போது விவசாயத்திற்கான உரிய உள்ளீடுகளை வழங்கும் போதே விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக தெரிவித்து விவசாயிகள் கூட்டத்தில் இருந்து  வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ச்சியாக விவசாயிகளை ஏமாற்றும் வகையிலான நடவடிக்கைகளை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் முன்னெடுத்துவருவதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டினார்கள்.

கடந்த காலத்தில் விவசாய கூட்டங்களில் எடுக்கும் தீர்மானங்கள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தாத காரணத்தினால் விவசாயிகள் பெரும் நெருக்கடிகளை தொடர்ச்சியாக எதிர்கொண்டுவருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பசளை உட்பட உள்ளீடுகளை சரியான காலப்பகுதிகளில் வழங்காமல்விடுவதனால் விவசாயிகள் கடும் பாதிப்புகளை எதிர்கொள்வதாகவும் 2020,2021ஆம்ஆண்டுக்கான இழப்பீடுகள் இதுவரையில் வழங்கப்படாத நிலையில் இந்த ஆண்டுக்கான சிறுபோக விவசாய நடவடிக்கையினை முன்னெடுப்பது விவசாயிகளை மேலும் நெருக்கடிக்குள் மூழ்கடிக்கும் செயற்பாடுகள் எனவும்  விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், விவசாயிகளுக்கு தேவையான உள்ளீடுகளை வழங்குவதற்கு தேவையான  நடவடிக்கைளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் ஓரிரு தினங்களில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்தார்.

Tamil News

Leave a Reply