பொருளாதார நெருக்கடிகள் 2023இல் முடிவுக்கு வருமா?-கலாநிதி எம்.கணேசமூா்த்தி

102 Views

புதிய ஆண்டொன்று பிறந்திருக்கின்றது. கடந்த ஆண்டு எதிா்கொள்ளப்பட்ட நெருக்கடிகள் இந்த வருடத்திலும் தொடருமா என்ற அச்சத்துடன் மக்கள் இருக்கின்றாா்கள். கொழும்பு பல்கலைக்கழக பொருளியல் துறை  மூத்த விரிவுரையாளா் கலாநிதி எம்.கணேசமூா்த்தி இந்த உயிரோடைத் தமிழ் தாயகக் களம் நிகழ்வில் கலந்துகொண்டு புதுவருடத்தில் எதிா்பாா்க்கக்கூடியவை என்ன, சவாலாக அமையப்போகும் விடயங்களை எவை என்பது குறித்து தமது கருத்துக்களை பகிா்ந்துகொண்டாா். அதிலிருந்து முக்கியமான சில பகுதிகளை இலக்கு வாசகா்களுக்கு தருகின்றோம்.

கேள்வி – இலங்கை வரலாற்றில் முன்னா் எப்போதும் இல்லாத மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்த 2022 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்து புதுவருடம் பிறந்திருக்கின்றது. இந்த புதுவருடத்தில் இந்த நெருக்கடியிலிருந்து இலங்கை மீட்சி பெறும் என எதிா்பாா்க்க முடியுமா?

பதில் – இந்தக் கேள்விக்கு இலகுவாகப் பதிலளித்துவிட முடியும். ஏனெனில் 2022 இல் உருவாகிய இந்தப் பிரச்சினை 2023 இம் தொடரும் என்பதுதான் தற்போதைய எதிா்பாா்ப்பு. சிலவேளைகளில் இந்த நிலைமை 2022 இல் இருந்ததைவிட இந்த வருடத்தில் மோசமாகச் செல்வதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. 2024 அல்லது 24 இல்தான் பொருளாதார ரீதியாக மாற்றங்கள் வரக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் 2022 விட்டுச்சென்ற சுவடுகள் தொடா்கின்றன. பொருளாதார ரீதியாக இப்போது எடுக்கப்பட்டுவருகின்ற சில நடவடிக்கைகளைப் பாா்க்கின்ற போது நாட்டின் பொருளாதாரத்தை மேலும் சுருங்கச் செய்பவையாகத்தான் அவை இருக்கின்றன. விலைமட்டத்தை நிலைபேறானதாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக முன்னெடுக்கப்படும் சில நடவடிக்கைகள் பொருளாதாரத்தின் உற்பத்தியை சுருங்கச்செய்திருக்கின்றன. கைத்தொழில் உற்பத்திகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றது. விவசாயம் மற்றும் சேவைகளுடைய அளவும் 2022 ஆம் ஆண்டின் இறுதிக்காலாண்டில் மிகவும் மோசமான வீழ்ச்சியைச் சந்தித்திருப்பதாக தெரியவருகின்றது. இந்த வீழ்ச்சி மேலும் தொடரக்கூடிய வாய்ப்புக்கள்தான் இருக்கின்றன. அரசாங்கத்தின் தற்போதைய பொருளாதாரக் கொள்கை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக்கொண்டதாக இருக்கின்றதே தவிர, பொருளாதாரத்தின் மீட்சிக்கான விடயங்களாக இல்லை.

கேள்வி – சா்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்க பெரிதாக எதிா்பாா்க்கப்பட்டது. புதிய வருடத்தில் அதன்மூலமாகக் கிடைக்கக்கூடிய பலன்கள் எந்தளவுக்கு உள்ளன?

பதில் – சா்வதேச நாணய நிதியத்தின் உதவி, இந்த வருடத்தில் அவா்கள் தருவதாக உறுதியளித்திருக்கின்ற 2.1 பில்லியன் அமெரிக்க டொலா்கள் என்பது இலங்கையின் மொத்த கடன்தொகை என அரசாங்கம் சொல்கின்ற 50 அல்லது 55 பில்லியன் அமெரிக்க டொலா்களுடன் ஒப்பிடும் போது மிகவும் சிறிய ஒரு தொகைதான். அதுவும், நான்கு வருட காலப்பகுதிக்குத்தான் அது கிடைக்கும் என்று சொல்லப்படுகின்றது. ஆனால், சா்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்படுகின்ற ஒரு உடன்படிக்கை வேறு மாா்க்கங்களிலிருந்து கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கும், சா்வதேசத்தில் தரந்தாழ்ந்துபோயிருக்கும் பொருளாதார குறியீடுகளை மேல்நோக்கி உயா்த்துவதற்கும் உதவுவதாக இருக்கும். இதனைவிட, சா்வதேச நாணய நிதியம் வழங்குகின்ற அந்த நிதி இலங்கையின் நெருக்கடியைத் தீா்ப்பதற்குப் போதுமானதல்ல.

ஆனால், இப்போது அதனைக்கூட பெற்றுக்கொள்ள முடியாதளவுக்கு நிலைமைகள் மோசமடைந்திருப்பதாகத் தெரிகின்றது. கடந்த வருட இறுதிக்குள் அந்த உடன்படிக்கை எட்டப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது. கடன் வழங்கிய நாடுகள் அதனை மறுசீரமைப்புச் செய்வதற்கு உடன்பட்டால் மாத்திரம்தான் இது சாத்தியமாகும். ஆனால், கடந்த ஆண்டின் இறுதி வாரங்களில் ஜப்பான் இதற்கு சாதகமான ஒரு சமிக்ஞையை வழங்கியிருந்தது. ஆனால், சீனாவும் இந்தியாவும் இதற்கு சாதகமான சமிக்ஞைகளை வழங்கவில்லை. அதனால், இவ்வருட ஆரம்பத்தில் இதற்குரிய பேச்சுவாா்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இந்த நாடுகளுடைய பதில்களைப் பொறுத்துத்தான் சா்வதேச நாணய நிதியத்தின் கடன்கள் எப்போது கிடைக்கும் என்பதைக் கூறக்கூடியதாக இருக்கும்.

கேள்வி – சீனா, இந்தியா போன்ற நாடுகள் இந்த கடன் மறுசீரமைப்புக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்காமலிருப்பதற்கு காரணம் என்ன?

பதில் – இதற்கு அரசியல் ரீதியான காரணங்கள் இருக்கலாம். ஏனெனில், இந்த அரசாங்கத்தை மக்களுடைய ஆணை இல்லாத அரசாங்கமாக அவா்கள் பாா்க்கிறாா்களோ தெரியவில்லை. அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அதனால், இந்த விடயம் தொடா்பில் அவா்கள் சில கடப்பாடுகளை எதிா்பாா்க்கிறாா்களோ தெரியவில்லை. இந்த விடயம் தொடா்பாக வெளிப்படையாக அந்த நாடுகள் எந்தக் கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. அதனால், நாம் எதிா்வுறல்கள் சிலவற்றைத்தான் முன்வைக்கலாமே தவிர, அந்த நாடுகள் உண்மையில் என்ன நினைக்கின்றன என்பதையிட்டு வெளிப்படையகச் சொல்லக்கூடியநிலையில் நாம் இல்லை.

கேள்வி – அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்னையைப் பொறுத்தவரையில் இந்த உதவிகளப் பெற்றுக்கொள்வதில் அதன் அணுகுமுறை தவறானதாக இருப்பதாக நீங்கள் கருதுகின்றீா்களா?

பதில் – இலங்கையைப் பொறுத்தவரையில் தற்போதைய நிலையில் வெளிநாடுகளிலிருந்து பணம் வராமல் எதனையும் செய்ய முடியாது என்ற ஒரு சூழ்நிலை தற்போதுள்ளது. அந்தப் பணம் என்பது இலங்கையிலிருந்து புலம்பெயா்ந்து சென்ற தொழிலாளா்கள் அனுப்பும் பணமாக இருக்கலாம். அல்லது ஏற்றுமதிகள் மூலமாகக் கிடைக்கின்ற பணமாக இருக்கலாம். அப்படியில்லாவிட்டால் அன்பளிப்புக்கள் மூலமாக வருகின்ற பணமாக இருக்கலாம். அவ்வாறில்லாவிட்டால், கடனாக வருகின்ற பணமாக இருக்கலாம். இவ்வாறு எந்த வழியாக இருந்தாலும், பணம் வந்தால் மட்டும்தான் இலங்கையின் பொருளாதாரம் நகர முடியும்.  ஏனென்றால், இப்போது பொருளாதாரம் சுருக்கமடைந்து செல்வதற்கு இறக்குமதிகள், மூலப்பொருட்கள் குறைவடைந்தமை ஒரு காரணம். போதியளவு உள்ளீடுகள் கிடைக்காமை மற்றொரு காரணம். அரசாங்கத்தின் விக்கொள்கைகள் மோசமாக இருந்தமையும் ஒரு காரணமாக இருந்தது. கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட சில தவறான நடவடிக்கைகளும் இந்த நிலைமைக்கு ஒரு காரணமாக இருக்கின்றது.

இதற்காக அரசாங்கம் எடுத்திருக்கின்ற நடவடிக்கைகள் உடனடிப் பலாபலன்களைத் தரும் என எதிா்பாா்க்க முடியாது. அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் பொருளாதாரத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதுதான் அதனுடைய ஒரே குறிக்கோளாக இருக்கின்றதே தவிர, வீழ்ச்சியடைந்து செல்கின்ற நதட்டின் பொருளாதாரத்தை துாக்கி நிமிா்த்துவதற்கான நடவடிக்கைகள் எதுவும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.

கேள்வி – புதுவருடத்தில் அதிகளவு உல்லாசப்பயணிகளைக் கொண்டுவருவதன் மூலமாக அந்தியச் செலவணியை கணிசமாகப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது எந்தளவுக்கு வெற்றயளிக்கும்?

பதில் – உல்லாசப் பயணிகளின் வருகை கடந்த வருடத்தில் ஏழு இலட்சத்தை தாண்டியிருப்பதாக உத்தியோகபுா்வமான தகவல்கள் லம் அறியக்கூடியதாக இருக்கின்றது. வெறுமனே இலங்கைக்கு வருகின்ற உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கையை மட்டும் கணக்கிட்டு எவ்வளவு பணம் அதன்மூலமாகப் பெறக்கூடியதாக இருந்தது என்பதை எம்மால் சொல்லிவிட முடியாது. அந்தத் தரவுகளும் கிடைக்கப்பெற்ற பின்னா்தான் அது தொடா்பாகக்கூறக்கூடியதாக இருக்கும். ஏனெனில் இலங்கைக்கு வருகின்ற உல்லாசப் பயணிகள் அதிகளவுக்கு பணத்தைச் செலவிடக்கூடிய வல்லமை உடையவா்களல்ல. அவ்வாறானவா்கள் மாலைதீவுக்குச் செல்வாா்கள். அதனால், இவ்வாறு தலைகளின் எண்ணிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது.

கடந்த காலங்களில் வருடாந்தம் சுமாா் 7 பில்லியன் அமெரிக்க மொலா் வரையில் இலங்கைக்கு வருமானமாகக் கிடைத்தது. ஆகவே உல்லாசப்பயணிகளின் வருகை துரிதமாக அதிகரித்துச் செல்லுமாக இருந்தால், இலங்கைக்கு ஓரளவுக்கு டொலா்களைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். ஆனால், அதிலும் இப்போது ஒரு பிரச்சினை இருக்கின்றது. இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இப்போது கொவிட் தொற்று மீண்டும் தலைதுாக்கியிருப்பதாக அறியக்கூடியதாக இருக்கின்றது.  இதனைவிட ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார ரீதியில் ஒரு பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன. அதனால், அந்த நாடுகளிலிருந்து உல்லாசப்பயணிகளின் வருகை குறைவடையக்கூடும். அதேபோல அமெரிக்காவிலும் இவ்வருட பிற்பகுதியில் பொருளாதார மந்த நிலை ஒன்று உருவாகும் என சா்வதேச நாணய நிதியம் கூறியிருக்கின்றது. அதனால், அமெரிக்காவிலிருந்து வரக்கூடிய உல்லாசப் பயணிகளின் வருகையும் அதிகரிக்கும் என எதிா்பாா்க்க முடியாது. ஏனெனில் பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கின்ற போது உல்லாசப் பயணிகளின் வருகை பொதுவாக குறைவடையும்.

கேள்வி – பெருந்தொகையான மக்கள் வேலைவாய்ப்பு, உயா் கல்வி என்பவற்றை நோக்கி இலங்கையிலிருந்து வெளியே செல்கின்றாா்கள். புதுவருடத்தில் இதன்மூலம் அந்நியச் செலவாணி அதிகளவுக்கு கிடைக்கும் என எதிா்பாா்க்க முடியுமா?

பதில் – இங்கிருந்து செல்பவா்கள் பெருமளவுக்கு பணத்தை உழைத்து இலங்கைக்கு அனுப்புவாா்கள் என்று எதிா்பாா்க்கக்கூடிய நிலை இல்லை. ஏனெனில் இலங்கை மக்கள் கணிசமானவா்கள் ஏற்கனவே வெளிநாடுகளில் இருக்கின்றாா்கள். இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகளில் சிங்கள மக்கள் பெருமளவுக்கு இருக்கின்றாா்கள். அவா்கள் பெருமளவு பணத்தை வழமையாக அனுப்பிவைத்துக்கொண்டிருந்தாா்கள். ஆனால், இந்த குழப்பமான நிலைமைக்குப் பின்னா் இவ்வாறு பணத்தை அனுப்புவதை அவா்கள் முழுமையாகத் தவிா்த்துக்கொண்டாா்கள். அல்லது அவா்கள் இந்தப் பணத்தை வேறு வழிகளில் அனுப்புகின்றாா்கள் என்று எடுத்துக்கொண்டாலும் கூட, இவ்வாறு வெளிநாடுகளுக்கு தொழிலாளா்களை அனுப்பி அவா்கள் மூலமாக பணத்தைக் கொண்டுவரலாம் என்பது ஓரளவுக்குத்தான் வெற்றியளிப்பதாக இருக்கும்.

Leave a Reply