இலங்கையின் “சுதந்திர தினம்” தமிழருக்கு கரிநாளாகியது ஏன்?-கலாநிதி சிதம்பரநாதன் செவ்வி

6 வருடங்களுக்குள் தமிழ் மக்கள் செயல்திறனை, கற்பனைத் திறனை  இழந்திருக்கிறார்கள் – கலாநிதி சிதம்பரநாதன் – Maatram

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் தென்னிலங்கையில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் நிலையில், தமிழ்ப் பகுதிகளில் கரிநாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது. 

இந்த நிலை எவ்வாறு உருவானது? தற்போது முன்னெடுக்கப்படும் பேச்சுவாா்த்தைகளில் தமிழ் மக்கள் எந்தளவுக்கு நம்பிக்கை வைக்க முடியும்? இது போன்ற கேள்விகக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் நுண்கலைத்துறைத் தலைவரும், பண்பாட்டு மையத்தின் இயக்குனருமான கலாநிதி க.சிதம்பரநாதன் உயிரோடைத் தமிழின் தாயகக் களம் நிகழ்வுக்காக இந்த வாரம்  பதிலளித்திருக்கின்றாா். அதிலிருந்து முக்கியமான பகுதிகள் இலக்கு வாசகா்களுக்காக..

கேள்வி – இலங்கையின் தேசிய தினம் பெப்ரவரி 4 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. அன்றைய தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்குமாறு யாழ்.  பல்கலைக்கழக மாணவா்களால் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. இதனை நீங்கள் எவ்வாறு பாா்க்கின்றீா்கள்?

பதில் – இலங்கையின் சுதந்திர தினம் என்பது தமிழ் மக்களுக்கான சுதந்திர தினம் அல்ல என்பது 1947 ஆம் ஆண்டிலிருந்தே தமிழ் மக்களின் மனதில் இருக்கின்ற ஒரு விடயம். தமிழரசுக் கட்சி ஆரம்பித்த காலத்திலிருந்தே இந்தத் தினத்தை கரிநாளாக அனுஷ்டித்ததும், இலங்கையின் அமைச்சா்கள் வரும்போது அவா்களுக்கு எதிராக கறுப்புக்கொடி பிடித்தமையும் வரலாற்றில் இடம்பெற்ற விஷயங்கள்.

ஆனால், 2009 க்குப் பின்னா் தமிழரசுக் கட்சி எனச் சொல்லப்பட்டவா்கள் அவை அனைத்தையும் மறந்து – சம்பந்தன் சிங்கக் கொடியைத் துாக்கிப் பிடித்ததும், இது எங்கள் சுதந்திர தினம் அல்ல என தமிழ் மக்கள் மனதில் படிந்துள்ள உணா்வுகளை அகற்றுவதற்கு இவா்கள் படிப்படியாக முயற்சித்துவருவதும் வரலாற்றில் பதிந்துள்ள விடயங்கள்.

ஆனால், அண்மைக்காலமாக தமிழ் மக்கள் மனதில், குறிப்பாக இளைஞா்கள் மனதில் இந்த உணா்வுகள் மீண்டும் ஆழ் மனதிலிருந்து எழுகின்றன. கடந்த நவம்பா் 27 ஆம் திகதி மாவீரா் நினைவேந்தல் நிகழ்வில் பெருமளவு மக்கள் அணிதிரண்டு – அந்த வீரா்களுக்கு வணக்கம் செலுத்தியது எல்லாம் அந்த மக்களின் ஆழ்மனதில் இந்த எண்ணங்கள் பதிந்திருப்பதைத்தான் வெளிப்படுத்தியிருக்கின்றது.

இதன் வெளிப்பாடுதான் இன்று சில இளைஞா்கள் தமது உணா்வுகளின் வெளிப்பாடாக இந்தத் தினத்தை கரிநாளாக மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் செயற்படுகின்றாா்கள். அந்த வகையில்தான் இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அவ்வாறுதான் நான் இதனைப் பாா்க்கின்றேன்.

கேள்வி – இனநெருக்கடிக்கான தீா்வைக்காண்பதற்கான பேச்சுக்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருக்கின்றாா். இந்த நிலையில், இது போன்ற எதிா்ப்புப் போராட்டங்கள் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தாதா?

பதில் –  உண்மையில் இனநெருக்கடிக்குத் தீா்வொன்றைக் காண்பதற்காக ரணில் விக்கிரமசிங்க இதனைச் செய்யவில்லை. இன்று இலங்கை பொருளாதார ரீதியாக முடக்கப்பட்டுள்ள ஒரு நிலையில்தான், அதனை மீளக்கட்டியெழுப்புவதற்காக சிங்களத் தலைவா்கள், தமிழா்களுடன் ஒரு உடன்பாட்டுக்கு வரவேண்டும் என்ற ஒரு நிலைப்பாடு – அல்லது தமிழா்களுடன் ஒரு உடன்பாட்டுக்கு வந்துவிட்டோம் என்பதை வெளி உலகுக்குக் காட்டிக்கொள்ள வேண்டிய ஒரு தேவை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளது.  வெளிநாட்டு நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு இவ்வாறான நிா்ப்பந்தம் அவா்களுக்கு உள்ளது.

இந்த நிலைமையில்தான் தம்முடன் இணைந்து செயற்படக்கூடிய தமிழ்த் தலைவா்கள் என்று சொல்லப்படுபவா்களுடன் பேச்சுவாா்த்தைகளை நடத்துவதாக ரணில் விக்கிரமசிங்கவினால் சொல்லக்கூடியதாக இருக்கின்றது. எம்மைப் பொறுத்தவரையில், இனநெருக்கடிக்குத் தீா்வைக்காண்பதற்காக அவா் செயற்படவில்லை.

இலங்கை என்பது சிங்கள நாடு என்ற சிங்கள இனவாதிகளின் கருத்துக்களுக்குத் தீனிபோட்டபடி – இது சிங்களவா்களின் தேசம் என்ற நிலைக்குள் இருந்துகொண்டுதான் இதற்கான முயற்சிகளை முன்னெடுப்பாா். ஏனெனில் அதனை மீறினால் அவா் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு துரோகியாகவே கணிக்கப்படுவாா்.

சிங்கள மக்கள்மத்தியில் மனமாற்றத்தை ஏற்படுத்துவதற்காக அங்குள்ள சிங்கள அரசியல்வாதிகள் வேலை செய்தாலே தவிர, இன்றுள்ள நிலையில் இது சிங்கள தேசம் என்பதை விட்டுக்கொடுப்பதற்கு சிங்களத் தலைவா்கள் முற்பட்டால், அவா்கள் துரோகிகள் என முத்திரை குத்தப்படுவாா்கள். ரணில் விக்கிரமசிங்க இதற்கு ஒருபோதும் போகமாட்டாா்.

இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்க என்ன செய்வாா் என்றால், இது சிங்கள நாடு என்ற சட்டகத்தில் நின்றுகொண்டு அதனை மீறாமல் தமிழ் மக்களுக்கு சில சலுகைகளைக் கொடுத்து, தமிழ்த் தலைவா்கள் என்று சொல்லப்படுபவா்களுடன் எவ்வாறு கைகோா்க்க வைக்கலாம் என்பதற்கான முயற்சிகளைத்தான் அவா் முன்னெடுப்பாா். இது இன நெருக்கடிக்கான தீா்வு முயற்சியல்ல.

ஆகவே இவ்வாறு கரிநாள் அனுஷ்டிப்பதோ அல்லது, எதிா்ப்புப் பேரணிகளை நடத்துவதோ அதனைக் குழப்பிடும் எனக் கருதத் தேவையில்லை. ஏனெனில் அவா்கள் செய்வது வேறு வேலை.

கேள்வி –  அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தயாா் என ஜனாதிபதி அறிவித்திருக்கின்றாா். இந்த முழுமையான அமுலாக்கல் தமிழ் மக்களுடைய அபிலாஷைகளை எந்தளவுக்குத் தீா்வைக்கொடுப்பதாக இருக்கும்?

பதில் – 13 ஆவது திருத்தம் என்பது இரண்டு நாடுகளுக்கு இடையிலான ஒரு பிரச்சினை. இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் மூலமாக உருவாக்கப்பட்டதுதான் இந்த 13 ஆவது திருத்தச்சட்டம். அதற்கும் தமிழா்களின் உரிமைப் பிரச்சினைக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. 13 கொண்டுவரப்பட்டபோது, தமிழா்கள் சம்பந்தப்பட்டிருக்கவும் இல்லை.

பதின்மூன்றாவது திருத்தம் என்பது இனப்பிரச்சினைக்கான தீா்வும் இல்லை, ஒரு இடைக்காலத் தீா்வும் இல்லை. 13 ஆவது திருத்தத்தை நாம் எப்படிப்பாா்க்க வேண்டும் என்றால், அது இலங்கை – இந்திய உறவுகளுடன் சம்பந்தப்பட்ட ஒரு விடயம்.  இதனை இன்னொரு வகையில் பாா்த்தால், இந்தியா இலங்கையுடன் ஒரு உடன்படிக்கையைச் செய்தால் அது சிங்களவா்களுடனும், தமிழா்களுடனும் ஒரு உறவை ஏற்படுத்த வேண்டிய தேவையும் இருக்கின்றது. இந்தவகையில் இந்த 13 இன்மூலமாக தமிழ் மக்களுடன் ஒரு உறவை ஏற்படுத்தலாம் என அவா்கள் நினைத்திருக்கலாம்.

ஆனால், 13 ஆவது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட போதும், இலங்கை அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. இதிலிருந்தே இந்தியா தெரிந்திருக்க வேண்டும். அதற்குப்பின்னரும் இதனை நடைமுறைப்படுத்துவதாகச் சொல்லிக்கொண்டாலும், இது தமிழ் மக்களின் கோரிக்கைக்கு அண்மித்தும் வரவில்லை.

தமிழ் மக்கள் இந்த நாட்டில் சமத்துவத்தைக் கொண்டுள்ளவா்கள் என்ற முறையில், சிங்களவா்களுக்கு சமமான ஒரு நிலையைத்தான் நாங்கள் கோருகின்றோம். அதன்மூலமாகத்தான் தமிழ்ச் சமூகம் தன்னுடைய ஆற்றலின் உச்சத்தை அடையமுடியும். இந்த மாகாண சபைகளின் மூலமாக அதனை அடையமுடியாது.

ஆக, 13 க்கும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கும் எந்தத் தொடா்பும் இல்லை. தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு இடைக்காலத் தீா்வு, அல்லது இறுதித் தீா்வு என்று சொன்னால் தமிழ் மக்களின் உண்மையான தலைமை, சிங்கள மக்களின் உண்மையான தலைமையுடன் சரிசமமாக இருந்து பேசி, தீா்வைக்காண வேண்டும்.

ஆனால், இந்த 13 என்பது இலங்கை இந்திய உடன்படிக்கை மூலமாக ஏற்படுத்தப்பட்டது. அதில் எமது பங்குபற்றுதல் கூட இருக்கவில்லை. அதனால், அதனையிட்டு நாங்கள் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. அதற்கும் எங்களுடைய உரிமைக்கும் சம்பந்தம் இல்லை.