இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை விமர்சையாகக் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துவரும் நிலையில், தமிழ்த் தரப்பினர் இதனை கரிநாளாக அறிவித்திருக்கின்றார்கள்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் வடக்கிலிருந்து மட்டக்களப்பை நோக்கி நான்கு நாட்கள் பேரணி ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்திருக்கின்றார்கள்.
வடக்கு – கிழக்கு நிலை இவ்வாறிருக்க, பாராளுமன்றக் கூட்டத் தொடரை ஒத்திவைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 8 ஆம் திகதி புதன்கிழமை சம்பரதாயபூர்வமாக புதிய கூட்டத் தொடரை ஆரம்பித்துவைக்கவுள்ளார். இதன்போது அவர் நிகழ்த்தப்போகும் உரை முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்பதுதான் அவரது நிலைப்பாடாக இருக்கும் எனத் தெரிகின்றது. கடந்த வாரம் அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர், 13 க்கு எதிராக தென்னிலங்கையில் சிங்கள தேசியவாதிகளால் முன்னெடுக்கப்படும் பிரச்சாரங்களுக்கு கடுமையான பதிலடியைக் கொடுத்தார்.
13 அரசியலமைப்புக்கு உட்பட்ட ஒன்று என்று தெரிவித்த ரணில், அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு நிறைவேற்று அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி என்ற முறையில் தனக்கு இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். இதனை யாராவது தேவையற்றது எனக் கருதினால், அரசியலமைப்புக்கு மற்றொரு திருத்தத்தைக் கொண்டுவந்து அதனை நீக்கிவிடலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அதாவது 13 ஐ விமர்சிப்பவர்கள் என்ன செய்யலாம் என்பதற்கான வழிகளையும் அவர் காட்டியிருக்கின்றார். 13 ஆவது திருத்தம் இலங்கை – இந்திய உடன்படிக்கையின் மூலமாகக் கொண்டுவரப்பட்ட ஒன்றாக இருப்பதால், அதனை இல்லாதொழிப்பதற்கான முயற்சிகளை எந்தவொரு கட்சியும் துணிந்து முன்னெடுக்காது என்பது ரணிலுக்குத் தெரியும். விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சரத் வீரசேகர மற்றும் பிக்குமார் சிலரும் தமது அரசியலைத் தக்கவைத்துக்கொள்வதற்காக இவ்வாறான கருத்துக்களை முன்வைத்தாலும், அதனை செயற்படுத்துவதற்கு முன்வருவார்கள் என்பது எதிர்பார்க்கக்கூடியதல்ல.
மாகாண சபை முறையை அண்மைக்காலம் வரை கடுமையாக எதிர்த்துவந்த ஜே.வி.பி.யும் தனது நிலைப்பாட்டை இப்போது மாற்றிக்கொண்டிருக்கின்றது. இதன் மூலமாக தமக்கு தீர்வு கிடைக்கும் என தமிழ் மக்கள் நம்புவதால் இதனை தான் எதிர்க்கப்போவதில்லை என ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருக்கின்றார்.
இது தமிழ் மக்களுடைய வாக்குகளைக் கவர்வதற்கான ஒரு உபாயமாகவும் இருக்கலாம். அல்லது இந்தியாவுடன் அவர்களுடைய உறவுகள் வலுப்பெற்றுவருதன் பிரதிபலிப்பாகவும் இருக்கலாம்.
எது எப்படியிருந்தாலும், மாகாண சபை முறைக்கான எதிர்ப்பு தென்னிலங்கையில் வலுவிழந்து செல்வதை இது வெளிப்படுத்துவதாகவும் கொள்ளலாம்.
அதேவேளையில், இந்தியாவும் இலங்கை மீதான தன்னுடைய பிடியை உறுதியாக வைத்துக்கொள்வதற்கு 13 ஆவது திருத்தத்தைத்தான் நம்பியிருக்கின்றது. இரு வாரங்களுக்கு முன்னதாக கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஜனாதிபதியுடனான சந்திப்பின்போதும் இதனை வலியுறுத்தியிருந்தார். அதேவேளையில் ஜெனிவாவில் புதன்கிழமை ஆரம்பமான நாடுகளில் காலக்கிரம ஆய்வில் இலங்கை தொடர்பாக உரையாற்றிய இந்தியப் பிரதிநிதியும், 13 முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதைத்தான் பிரதானமாக வலியுறுத்தியிருந்தார். ஜெனிவாவில் இந்தியா தொடர்ச்சியாக இந்தக் கருத்தைத்தான் முன்வைத்து வருகின்றது என்பதும் கவனிக்கத்தக்கது.
இந்தியாவைப் பொறுத்தவரையில், இலங்கையின் அரசியலமைப்பில் 13 இருப்பதால் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலமாக மாகாண சபைகளுக்கு அதிகளவு அதிகாரங்கள் கிடைக்கும். வடக்கு – கிழக்கில் எதிர்கொள்ளப்படும் காணி மற்றும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளுக்கு இதன்மூலமாகத்தான் தீர்வு ஒன்றைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கையை இந்தியா வெளிப்படுத்தியிருக்கின்றது.
கொழும்பில் ஜெய்சங்கரை சந்தித்த தமிழ்க் கட்சி ஒன்றின் பிரதிநிதி, சமஸ்டிதான் பிரச்சினைக்குத் தீர்வாக அமையும் என்பதை வலியுறுத்தினார். இதற்குப் பதிலளித்த ஜெய்சங்கர், அதனை மறுதலிக்கவில்லை. ஆனால், அரசியலமைப்பில் இருக்கின்ற 13 ஐயே அரசாங்கம் நடைமுறைப்படுத்தாமல் இருக்கும் நிலையில், சமஸ்டியைத் தருவார்கள் என எதிர்பார்க்க முடியுமா? என்ற பதில் கேள்வியையும் கேட்டிருந்தார்.
தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரையில், 13 ஐ இறுதித் தீர்வாக ஏற்றுக்கொள்வதற்கு அவர்கள் தயாராகவில்லை. அது ஒற்றையாட்சிக்குள் தீர்வைத் தருவதாக இருப்பதால், பகிரப்படும் அதிகாரங்கள் மீண்டும் பறிக்கப்பட்டுவிடலாம் என்ற அச்சத்தை அவர்கள் வெளிப்படுத்துகின்றார்கள்.
ஏற்கனவே இவ்வாறு பல அதிகாரங்கள் மாகாண சபைகளிடமிருந்து பல்வேறு வழிகளில் பறிக்கப்பட்டது. குறிப்பாக திவினுகம சட்டமூலத்தின் மூலமாக மாகாண சபைகளின் அதிகாரங்கள் பல பறிக்கப்பட்டன. இந்த நிலையில்தான் சமஸ்டி என்ற கோரிக்கை தமிழ்த் தரப்பினரால் முன்வைக்கப்படுகின்றது. 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதே ஆபத்தானது எனக்கூறும் சிங்கள தேசியவாதிகள் சமஸ்டி என்பதை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். சிங்களத் தலைவர்களும் தமது பதவியை பணயம் வைத்து அதற்குத் துணியமாட்டார்கள்.
இந்த நிலையில்தான் 13 குறித்த கோரிக்கை தமிழ்த் தரப்பினரால் முன்வைக்கப்படுகின்றது. கஜேந்திரகுமாரின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டும் இதனை எதிர்க்கின்றது. 13 ஐ ஏற்றுக்கொள்வது என்பது சமஸ்டி என்ற கோரிக்கையை குழிதோண்டிப் புதைத்துவிடுவதாகிவிடும் என்ற அச்சம் அவர்களால் வெளியிடப்படுகின்றது. அத்துடன் 13 ஐ ஏற்றுக்கொள்பவர்களை துரோகிகள் என்றும் அவர்கள் முத்திரை குத்துகின்றார்கள். அதனால்தான் ஏனைய தமிழ்க் கட்சிகள் 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என்று கேட்பதற்குப் பதிலாக ‘அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள்” என்று தமது கோரிக்கையை மாற்றியிருக்கின்றார்கள்.
இந்த நிலையில் சுதந்திர தினத்துக்கு முன்னதாக தீர்வைக் காணப்போதாக கடந்த வருட இறுதியில் அறிவித்த ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்றக்கூட்டத் தொடரை ஒத்திவைத்து பெப்ரவரி 8 ஆம் திகதி புதிய கூட்டத் தொடரை ஆரம்பித்துவைக்கின்றார். அதில் அவர் நிகழ்த்தப்போகும் உரை முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன.
இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தைத் தொடர்ந்து அமெரிக்க இராஜாங்கச் செயலாளரின் விஜயம் இடம்பெற்றது. இருவருமே அரசியல் தீர்வு குறித்து அதிகளவுக்கு அழுத்தம் கொடுத்திருக்கின்றார்கள்.
அதனைவிட, ஜெனிவாவில் இவ்வாரம் இடம்பெற்ற காலக்கிரம ஆய்வில் இலங்கை தொடர்பான விமர்சனங்களே அதிகமாக இருந்தது. 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்தியப் பிரதிநிதி மீண்டும் இங்கு வலியுறுத்தினாா்.
இந்தப் பின்னணியில் ஐ.எம்.எப். மூலமாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட உதவிகள் தாமதமாகின்றது. ஆக, சர்வதேச சமூகத்தை ஏதோ ஒருவகையில் திருப்திப்படுத்த வேண்டும் என்ற தேவை ரணிலுக்கு ஏற்பட்டுள்ளது.
13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துகின்றோம் என்று அறிவிப்பதன் மூலமாக மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடப்போவதில்லை. அதற்கான களம் மாகாண சபைகள்தான். மாகாண சபைகள் செயற்படாத நிலையில், ஆளுநரின் கரங்களில் மாகாண சபைகள் இருக்கும் நிலையில், 13 ஐ நடைமுறைப்படுத்துவது என்பது அர்த்தமுள்ளதாக இருக்காது. ஆக, மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் முன்வர வேண்டும். இந்திய வெளிவிவகார அமைச்சரும் அதற்கான அழுத்தங்களைக் கொடுத்திருக்கின்றார்.
இதனால் 13 குறித்த முக்கியமான அறிவித்தல் ஒன்றை பெப்ரவரி 8 ஆம் திகதி ஜனாதிபதி வெளியிடுவாரா? அவ்வாறான அறிவித்தல் ஒன்றை அவர் வெளியிட்டால், சிங்கள தேசத்தின் பிரதிபலிப்பு எவ்வாறானதாக இருக்கும்? உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை மார்ச் 9 ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ள நிலையில், ரணிலின் நகர்வுகள் எவ்வாறானதாக இருக்கும்? தேர்தலை நோக்கமாகக் கொண்டு உள்நாட்டு அரசியலை மனதில் வைத்து அவர் செயற்படப்போகின்றாரா? அல்லது சர்வதேசத்தை திருப்திப்படுத்தும் வகையில் அவர் காய்களை நகர்துவாரா?
இவைதான் கொழும்பு அரசியலில் இப்போது எழும் கேள்விகளாகும். பெப்ரவரி 8 இல் ரணில் நிகழ்த்தப்போகும் உரை இலங்கை எந்தப் பாதையில் செல்லப்போகின்றது என்பதை வெளிப்படுத்துவதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.