உக்ரைன் போர் எதிர்வரும் 3 வாரங்களுக்கு மிகவும் பேரழிவுமிக்க முக்கியமான திருப்பத்தை சந்திக்கலாம் என்ற அச்சங்கள் உலகில் ஏற்பட்டுள்ளது. அதற்கான காரணம் கடந்த 23 ஆம் நாள் ரஸ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் சேர்ஜி சோய்குவை தொடர்புகொண்ட அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலாளர் லொயிட்ஸ் ஒஸ்ரின் இடம் உக்ரைன் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் ஒரு அழிவுமிக்க அணுக்குண்டு (Dirty bomb) வெடிப்பை மேற்கொள்ளப்போவதாகவும் அதனை அமெரிக்கா தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் சேர்ஜி தெரிவித்ததுதான்.
ஆனால் பென்ரகனின் பாதுகாப்பு தொடர்பான தொடர்பாடல் அதிகாரி ஜோன் கேர்பி அதனை நிராகரித்துள்ளதுடன் ரஸ்யா அணுக்குண்டு வீசப்போவதாக ரஸ்யா மீது குற்றம் சுமத்தியுள்ளார். எனினும் இது தொடர்பில் இந்தியா, சீனா, பிரித்தானியா, ஜேர்மனி , துருக்கி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுடன் தொடர்புகொண்ட சேர்ஜி நிலமையை விளக்கியுள்ளதுடன், இந்த விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கும் கொண்டு சென்றுள்ளார் ரஸ்யாவின் வெளிவிவகார அமைச்சர் லாரோவ்.
வழமைபோல அதிகாரமற்ற ஐ.நா சபை எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளபோது ஒரு அணுவாயுதப்போருக்கு தம்மை தயார்ப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன அமெரிக்காவும் ரஸ்யாவும். கடந்த 17 ஆம் நாள் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் பிரதேசத்தில் அணுவாயுத ஒத்திகையை நிகழ்த்திய அதேசமயம், ரஸ்யாவும் கடற் பிரதேசத்தில் தனது அணுவாயுத ஒத்திகையை கடந்த வாரம் நடத்தியுள்ளது.
நேட்டோ தலைமையிலான 14 நாடுகள் அமெரிக்காவின் பி-52 ரக அணுக்குண்டுகளை வீசும் விமானங்கள் உட்பட 60 விமானங்கள் சகிதம் ரஸ்யாவை அண்மித்த நோர்வே கடல் பகுதியில் Steadfast noon என்ற அணுவாயுத ஒத்திகையை நடத்திய பின்னர் இடிமுழக்கம் (Grom) என்ற சங்கேத பெயருடன் கோல வளைகுடா பகுதியில் ரஸ்யா தனது அணுவாயுத ஒத்திகையை நடத்தியுள்ளது.
இந்த ஒத்திகையில் RS-28 சார்மாட் எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் கடலில் இருந்து ஏவப்படும் அணுக்குண்டுகளை சுமந்து செல்லும் கைப்பர்சொனிக் ஏவுகணைகள் என பல தரப்பட்ட ஏவுகணைகள் ஏவப்பட்டிருந்தன.
அதாவது உக்ரைன் ஒரு அணுவாயுத வெடிப்பை மேற்கொள்ளப்போவதாக ரஸ்யா அறிவித்த பின்னர் இந்த ஒத்திகைகள் அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. அணுக்குண்டு உக்ரைனுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அல்லது அதனை தயாரிக்கும் தொழில்நுட்பங்களை பிரித்தானியா உக்ரைனுக்கு வழங்கியுள்ளதாக தெரிவத்துள்ள ரஸ்யா அதன் தாக்கம் என்ன என்பது தொடர்பிலும் விளக்கமளித்துள்ளது.
அணுசக்தி மின் உற்பத்தி நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட பின்னர் சேமிக்கப்படும் கதிரியக்க யுரேனியம் ஒக்சைட்டு அல்லது கோபோல்ட்-90 போன்ற கதிரியக்க கழிவுகளை ஒரு கொள்கலனினுள் நிரப்பி அதனை ரி.என்.ரி வெடிமருந்து கொண்டு வெடிக்க வைப்பதே திட்டம். அவ்வாறு வெடிக்கும்போது எழும் கதிரியக்க அதிர்வலைகள் அந்த பிரதேசத்தின் வாயு மண்டலம் மற்றும் வளமிக்க நிலங்கள் என்பவற்றை மனிதர்கள் வாழமுடியாத பகுதிகளாக மாற்றுவதுடன், வழி மண்டலத்தில் உள்ள கதிரியக்கத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்தும் அவதானிக்க முடியும்.
அதன் பின்னர் அதனை ரஸ்யா செய்ததாக குற்றம் சுமத்துவதே திட்டம் என தெரிவித்துள்ளார் ரஸ்யாவின் அணுக்கதிரியக்க, இராசாயண மற்றும் உரியல் ஆயுதத் தடுப்பு பிரிவின் தலைவர் லெப். ஜெனரல் கிரிலோவ்.
இவ்வாறு செய்வதால் உக்ரைனும் மேற்குலகமும் எதனை சாதிக்க முற்படுகின்றனர்?
ரஸ்யா அணுவாயுதத்தை பயன்படுத்தியே போரை முடித்தது என்று ரஸ்யாவின் ஆளுமையை குறைப்பது, பேரழிவுமிக்க ஆயுதத்தை மக்களின் மீது ரஸ்யா பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தி ரஸ்யாவை ஐ.நாவில் இருந்து வெளியேற்றுவது இல்லையேல் உலக அரங்கில் தனிமைப்படுத்துவது, மேலும் ரஸ்யா மீது நேட்டோ நாடுகள் அணுக்குண்டுகளை வீசுவதற்கான காரணத்தை தேடுவதாக இருக்கலாம்.
ஆனால் ரஸ்யா இந்த திட்டத்தை முன்கூட்டியே கண்டறிந்து ஐ.நாவரை கொண்டு சென்றுள்ளது என்பது பிரித்தானியாவின் வெளியக புலனாய்வுத்துறையான எம்.ஐ-6 மற்றும் பென்ரகன் ஆகியவற்றின் தொடர்பாடல் சங்கேத மொழிகளை ரஸ்யா உன்னிப்பாக அவதானிக்கின்றதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ரஸ்யாவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சர் பென் வலஸ் அவசர அவசரமாக நியூயோர்க் புறப்பட்டு சென்றதும் கவனிக்கத்தக்கது.
களமுனையை பொறுத்தவரையில் கேர்சன் பகுதியில் உக்ரைன் படையினரின் வலிந்த தாக்குதல் எந்தவித முன்னேற்றங்களும் அற்றநிலையில் இருப்பதுடன், புதிதாக திரட்டிய 300,000 படையினருடன் ரஸ்யா மிகப்பெரும் பனிக்கால போருக்கு தயாராகிவருவதாகவே எண்ணத்தோன்றுகின்றது.
அது மட்டுமல்லாது கிரைமியா பாலம் மீது உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலுக்கு பின்னர் உக்ரைனின் எரிசக்தி மற்றும் படைத்துறை உட்கட்டுமானங்களை ரஸ்யா தொடர்ந்து தாக்கியழித்து வருகின்றது. ரஸ்யாவின் ஏவுகணைகளையோ அல்லது ஈரானின் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட Shahed-136 என்ற ஆளில்லாத தாக்குதல் விமானத்தையோ உக்ரைனின் வான்காப்பு படையினரால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அமெரிக்காவின் என்ற Raytheon Technologies நிறுவனம் இரண்டு NASAMS வகை விமான மற்றும் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணை தொகுதிகளை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது. மேலும் ஜேர்மனியும் IRIS-T SLM வகை ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணை தொகுதிகளை வழங்கியுள்ளது. ஆனால் இவை அனைத்தையும் தாண்டி கடந்த வியாழக்கிழமை (27) இரவும் உக்ரைனின் Dnipropetrovsk பகுதியில் உள்ள மின்சக்தி நிலையம் தாக்கி அழிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் உக்ரைனின் 40 சதவிகித மின் உற்பத்தித்திறன் முற்றாக அழிவடைந்துள்ளது. சோவியத்தின் காலத்தில் கட்டப்பட்ட இந்த ரான்ஸ்போமர்களை மீள கட்டியமைப்பதற்கும் சோவியத்தின் தொழில்நுட்பம் அல்லது உதிரிப்பாகங்கள் தான் தேவை. இதனால் உக்ரைனில் இருந்து போலந்து மற்றும் மோல்டோவா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதுடன், உக்ரைனின் தொழிற்சாலைகள் மூடப்படுவதுடன், உக்ரைனும் இருளில் மூழ்கியுள்ளது.
உக்ரைனில் இருந்து பெருமளவான மக்கள் வெளியேறிவருவதுடன், வெளிநாடுகளில் தங்கியிருக்கும் அகதிகளையும் இந்த குளிர்காலத்தில் நாடு திரும்பவேண்டாம் என உக்ரைனின் உள்துறை அமைச்சு கேட்டுள்ளது. முற்றாக பொருளாதாரத்தால் வீழ்ந்த உக்ரைனை தக்கவைப்பதற்கு அனைத்துலக நாணயநிதியம், உலக வங்கி மற்றும் மேற்குலக நாடுகள் தொடர்ந்து நிதியை வாரிவழங்கி வருகின்றன.
தனது வரவுசெலவுத்திட்டத்தை நிரப்ப 38 பில்லியன் டொலர்கள் தேவை என்கிறது உக்ரைன் அது மட்டுமல்லாது ஐரோப்பிய ஒன்றியம் மாதம்தோறும் 2 பில்லியன் டொலர்களை தரவேண்டும் எனவும் கேட்டுள்ளது. நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு உதவ வேண்டும் என கேட்டுள்ளார் அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் அன்தோனி பிளிங்டன்.
உக்ரைன் சமர் ஆரம்பித்த பின்னர் 3 பிரதமர்களை கண்டுள்ள பிரித்தானியாவின் புதிய பிரதமர் ரிசி சுனாக் கூறுகின்றார் தமது பொருளாதாரம் சீரழிந்ததற்கு உக்ரைன் போர் காரணம் என்று. பல நாடுகள் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து விட்டன அதில் இருந்து அமெரிக்காவும் தப்பவில்லை. பிரித்தானியாவின் எரிவாயு கையிருப்பு 9 நாட்களக்கு தான் போதும் என தெரிவித்துள்ளார் Centrica and owner of the national British Gas நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி Chris O’Shea. ஜேர்மனி 89 நாட்கள் தாக்குபிடிக்குமாம். அமெரிக்காவில் டீசல் கையிருப்பு 25 நாட்கள் தான் போதுமாம்.
இந்த நிலையில் ஹங்கெரியின் அதிபர் Viktor Orban கடந்த வெள்ளிக்கிழமை (28) கூறிய கருத்து தான் ஞாபகம் வருகின்றது.
ரஸ்யா மீது பிரசெல்ஸ் கொண்டுவந்த தடைகள் பலனழிக்கவில்லை. நாம் எல்லோரும் ஒருங்கிணைந்து ரஸ்யாவை வீழ்த்த குழி வெட்டினோம் ஆனால் தற்போது அந்த குழிக்குள் நாமே வீழ்ந்துவிட்டோம். எனவே அடுத்து என்ன செய்யவேண்டும் என நாம் தற்போது முடிவெடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என அவர் தொவித்திருந்தார்.