இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். பெருமளவிலானவர்கள் வேலை தேடி வெளிநாடு செல்லத்தொடங்கியுள்ளனர். பலர் அகதிகளாக இந்தியாவிற்கு செல்கிறனர். மேலும் பலர் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு சட்டமுரணமான கடல் பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், தமிழர் தாயகத்தில் அதிகமாக இளம் சமூகத்தை குறி வைத்து போதைப்பொருள் விற்பனை நடைபெற்று வருகின்றது. இதில் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது. தினம் ஒருவர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படுகின்றார்.
இந்நிலையில்,யாழ். தெல்லிப்பழை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சந்தேகநபரொருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதே நேரம் கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லுாரி ஆகியவற்றின் மாணவர்கள் மூவர் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு மாணவர்களுக்கு போதைப்பொருளை விற்பனை செய்த இரு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.மேலும் இலங்கையில் தற்போது பாலியல் வன்முறைகளும் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஒன்பது மாதங்களுக்குள் பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வுகள் மற்றும் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகங்கள் உட்பட 1,500 பாலியல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இலங்கையில் தற்போது பதிவாகும் மனிதப் படுகொலைகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த 9 மாத காலப்பகுதியில் மாத்திரம் 435 படுகொலைகள் பதிவாகியுள்ளன.