இலங்கைக்கு சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி கிடைப்பது தாமதமாகின்றது என வெளியாகும் செய்திகள் தவறானவை என இராஜாங்க அமைச்சர் செசான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை எதிர்பார்த்ததைப் போன்று சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இந்த கடனை டிசம்பர் மாதத்தில் பெற்றுக்கொள்ள முடியாது என தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மாநாடு காரணமாக சீனா உடனான கடன் மறுசீரமைப்பிற்கான பேச்சுவார்த்தைகளை குறுகிய காலத்திற்கு நிறுத்தியுள்ளமையினால், IMF கடனை பெறுவதில் தாமதம் ஏற்படுவதாக வாஷிங்டன் நிதி மூலம் ஒன்றை மேற்கோள் காட்டி Hindustan Times செய்தி வௌியிட்டுள்ளது.
எனவே, அடுத்த வருடம் மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த நிறைவேற்றுக்குழு கூடும் வரை இலங்கை அதனை பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் என அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில்,டிசம்பரின் பின்னர் மார்ச் மாதத்திலேயே சர்வதேச நாணயநிதியத்தின் கூட்டம் இடம்பெறும் என சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன இது பிழையான விடயம் சர்வதேச நாணயநிதியத்தின் கூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெறும் என இராஜாங்க அமைச்சர் செசான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கடன் வழங்கிய அனைத்து தரப்பினருடனும் இணைந்து செயற்படுவது குறித்து அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது நாங்கள் சமமான ஒப்பிடக்கூடிய வெளிப்படையான விதத்தில் செயற்படுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணயநிதியத்தின் உதவி தொடர்பான பேச்சுவார்த்தைகள் எப்போதும் குழப்பமானவை என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் சீனா இந்தியா ஜப்பான் உட்பட எங்களிற்கு கடன் வழங்கிய அனைத்து தரப்பினருக்கும ஆக்கபூர்வமான ஈடுபாட்டிற்காக நன்றி தெரிவிக்கின்றோம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.