கடன்வழங்குனர்களுடன் வெளிப்படைத்தன்மை வாய்ந்த தொடர்புகளை இலங்கை பேணும் என உறுதியளிப்பு

251 Views

இலங்கையின் கடன்வழங்குனர்களுடனான இரண்டாம் சுற்றுப்பேச்சுவார்த்தைகளின்போது அனைத்து கடன்வழங்குனர்களுடனும் சமத்துவமானதும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான முறையில் தொடர்புகளைப் பேணுவதற்குத் தயாராக இருப்பதாக இலங்கை மீள உறுதியளித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான உத்தியோகத்தர்மட்ட இணக்கப்பாடு கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி எட்டப்பட்ட நிலையில், அதன்மூலமான நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தினால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பூர்த்திசெய்வது அவசியமாகும். அதற்கமைய கடன்களின் ஸ்திரத்தன்மை தொடர்பில் கடன்வழங்குனர்களிடமிருந்து உத்தரவாதத்தைப் பெற்றுக்கொள்வதும், கடன்மறுசீரமைப்பை மேற்கொள்வதும் இன்றியமையாதவையாகும்.

அந்தவகையில் அண்மையகால நுண்பாகப்பொருளாதார நிலைவரம், சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கும் மறுசீரமைப்புக்கள், கடன்மறுசீரமைப்பு செயன்முறையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்பன தொடர்பில் கடந்த செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி இலங்கை அதன் வெளியகக் கடன்வழங்குனர்களுக்கு விளக்கமளித்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே கடன்வழங்குனர்களுடனான இரண்டாம் சுற்றுப்பேச்சுவார்த்தைகள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நிகழ்நிலை முறையில் நடைபெற்றதுடன் இப்பேச்சுவார்த்தைகளுக்கு நிதியமைச்சின் செயலாளர் கே.எம்.மஹிந்த சிறிவர்தன மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் தலைமைதாங்கினர்.

இதன்போது கருத்து வெளியிட்ட நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, ‘இப்போது இலங்கை மிகக்கடினமானதொரு காலப்பகுதியில் இருப்பதுடன் நுண்பாகப்பொருளாதார உறுதிப்பாட்டை அடைந்துகொள்வதற்காக இயலுமானவரை விரைவாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்திற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்வதற்கு முயன்றுவருகின்றோம் என்றார்.

Leave a Reply