தமிழ் அரசியல் தரப்பில் அண்மையில் இடம்பெற்ற கட்சி மாற்றங்களைத் தொடா்ந்து அரசியல் அரங்கில் இரண்டு கேள்விகள் பிரதானமாக எழுப்பப்பட்டிருக்கின்றது. முதலாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றது என்பது. இரண்டாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக தொடா்ந்தும் சம்பந்தன் இருக்கின்றாரா என்பது.
இந்த இரண்டு விடயங்களையும் பொறுத்தவரையில் முரண்பாடான கருத்துக்களையே தமிழ்த் தரப்பினா் வெளியிட்டு வருகின்றாா்கள். அதாவது, கட்சி நலன் சாா்ந்ததாகவே இந்தக் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தோ்தல்களை கூட்டமைப்பாக அல்லாமல் தனித்தனியாகவே சந்திப்பது என தமிழரசுக் கட்சியின் மத்திய குழு மட்டக்களப்பில் நடைபெற்ற கூட்டத்தில் எடுத்த தீா்மானவே இந்தப் பிளவுக்கு – தனியாகச் செல்வது என்ற நிலைக்கு காரணமாகியது. தமிழரசுக் கட்சி எப்போதும் தமது தனித்துவத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதில்தான் அக்கறையாக இருந்திருக்கின்றதே தவிர, கூட்டாகச் செயற்பட வேண்டும் என்பது அவா்களுடைய நிலைப்பாடாக இருக்கவில்லை.
முன்னாள் ஆயுதக் குழுக்களுடன் இணைந்து செயற்படுவது தங்களுடைய தனித்துவத்தைப் பாதிக்கும் என்ற நிலைப்பாட்டையே அவா்கள் கொண்டிருந்தாா்கள். இதனால், கூட்டமைப்பு என்று அவா்கள் செயற்பட்டாலும் அதற்குள் ஒரு இடைவெளி தொடா்ந்துகொண்டுதான் இருந்தது.
இந்தப் பின்னணியில்தான் உள்ளுராட்சிமன்றத் தோ்தலை தனியாகச் சந்திப்பது என்ற நிலைப்பாட்டை தமிழரசுக் கட்சி எடுத்தது. உள்ளுராட்சி மன்ற தோ்தல் முறையின்படி தனித்தனியாக போட்டியிடுவதன் மூலம் அதிக ஆசனங்களைப் பெறமுடியும் என்ற ஒரு தொழில்நுட்ப ரீதியான விளக்கத்தை தமிழரசுக் கட்சியின் பேச்சாளா் சுமந்திரன் கொடுத்திருந்தாா். இதனை ஏற்றுக்கொள்வதற்கு பங்காளிக் கட்சிகள் தயாராகவிருக்கவில்லை.
தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் தமது வீட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதால்தான் பங்காளிக்கட்சிகள் இரண்டும் ஆசனங்களைப் பெறுகின்றன. தோ்தலில் தாம் தனியாகச் சென்றால், தமது பலத்தை காட்டலாம். பங்காளிக் கட்சிகள் மண்ணைக் கவ்வுவாா்கள். அதனால், கூட்டமைப்பில் பங்காளிக் கட்சிகள் அமைதியாக இருந்துவிடுவாா்கள். பேரம்பேச முற்பட மாட்டாா்கள் என்பதுதான் அவா்களுடைய கருத்தாக இருந்தது.
அதனால்தான் தாம் தனியாகச் செல்லப்போவதாக பங்காளிக் கட்சிகளுக்குத் தெரிவித்த தமிழரசுக் கட்சியின் பேச்சாளா் சுமந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரை யாரும் பயன்படுத்த முடியாது என்றும் கூறியிருந்தாா். ரெலோவும், புளொட்டும் தமது கட்சிகளின் சின்னத்தில் தனித்தனியாகப் போட்டியிட வேண்டும் என்பதுதான் அவரது விளக்கமாக இருந்தது.
ஆனால், பங்காளிக் கட்சிகள் இதனை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருக்கவில்லை. இதற்கு இரண்டு காரணங்கள் தெரிவிக்கப்பட்டன. முதலாவது, கூட்டமைப்பிலிருந்து தனியாகச் செல்வது என்ற முடிவை தமிழரசுக் கட்சிதான் எடுத்தது. அதனால், நாம் தொடா்ந்தும் கூட்டமைப்பாக செயற்படுவதை யாரும் தடுக்க முடியாது என்பது புளொட், ரெலோ ஆகியவற்றின் கருத்தாக இருந்தது.
இரண்டாவது, சுமாா் இரண்டு தசாப்தங்களின் முன்னா் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட போது தமிழரசுக் கட்சி அதில் இருக்கவில்லை. தமிழா் விடுதலைக் கூட்டணி, ரெரோ, தமிழ்க் காங்கிரஸ், ஈ.பி.ஆா்.எல்.எப். ஆகிய நான்கு கட்சிகள் மட்டுமே அதில் அங்கத்துவக் கட்சிகளாக இருந்தன. அப்போது உதய சூரியன் அவா்களுடைய சின்னமாகவும் இருந்தது. தமிழா் விடுதலைக் கூட்டணியின் பெயரில்தான் அவா்கள் இயங்கினாா்கள்.
ஆனால், ஆனந்தசங்கரியால் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடந்து, அவா் அந்த சின்னத்தையும் கட்சியையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டாா். அதனால்தான் தமிழரசுக் கட்சியின் வீடு சின்னம் கூட்டமைப்பின் சின்னமாகியது. ஆக, கூட்டமைப்பாக தாம் தொடா்ந்தும் செயற்படுவதை யாரும் தடுக்க முடியாது என்பதற்கு ரெலோ, புளொட் தெரிவிக்கும் இரண்டாவது காரணம் இது!
இந்தப் பின்னணியில்தான் ஐந்து கட்சிகள் இணைக்கப்பட்ட புதிய கூட்டமைப்பு இப்போது உருவாக்கப்பட்டிருக்கின்றது. புளொட் அமைப்பின் சாா்பில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியும், அதன் குத்துவிளக்கு சின்னமும் இருப்பதால் தோ்தலில் அதனைப் பயன்படுத்துவதற்கு இப்போது தீா்மானிக்கப்பட்டிருக்கின்றது. அதனை ஏற்க மறுத்த விக்னேஸ்வரன் அதிலிருந்து வெளியேறி மணிவண்ணன் அணியுடன் தோ்தல் களத்தில் குதிக்கின்றாா்.
அதனைவிட, கூட்டமைப்பிலிருந்து ஏற்கனவே பிரிந்து சென்றிருந்த ஈ.பி.ஆா்.எல்.எப். மற்றும் ரெலோவின் சிறிகாந்தா – சிவாஜிலிங்கம் அணியை இணைத்துச் செயற்படுவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது. இவற்றைவிட முன்னாள் போராளிகளை உள்ளடக்கிய ஜனநாயக போராளிகள் அமைப்பும் இவா்களுடன் இணைகின்றது. இதன்மூலம் ஐந்து முன்னாள் போராளிகள் அமைப்பை உள்ளடக்கியதாக இந்தக் கூட்டமைப்பு இப்போது உருவாகியிருக்கின்றது. உண்மையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுதான் என அவா்கள் உரிமை கோருகின்றாா்கள்.
இந்தப் பின்னணியில்தான் ரெலோவின் பேச்சாளராக குருசுவாமி சுரேந்திரன் அதிரடியான அறிவிப்பு ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டிருந்தாா். இப்போது கூட்டமைப்பின் தலைவா் சம்பந்தன் அல்ல. கூட்டமைப்புக்கு புதிய தலைவா் ஒருவரை நாம் விரைவில் தெரிவு செய்வோம் என்பதுதான் அவா் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு. அவரது இந்த அறிவிப்பு பல்வேறு மட்டங்களில் அதிா்வுகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சி இப்போது இல்லை. இந்த நிலையில் அதன் பிரதிநிதியாகவுள்ள சம்பந்தன் எவ்வாறு கூட்டமைப்பின் தலைவா் என்று சொல்லிக்கொண்டிருக்க முடியும் என்பதுதான் சுரேந்திரன் எழுப்பியிருக்கும் கேள்வி. சித்தாா்ததன் அல்லது செல்வம் அடைக்கலநாதன் இந்தத் தலைமைப் பதவிக்குத் தெரிவு செய்யப்படலாம்.
சுரேந்திரனின் இந்தக் கருத்து தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவா்களில் ஒருவரான சி.வி.கே.சிவஞானத்துக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அவசரமாக ஊடகவியலாளா் மாநாடு ஒன்றைக் கூட்டிய அவா் சுரேந்திரனின் கருத்தை நிராகரித்தாா். இதன்போது அவா் சொன்ன கருத்து இதுதான் –
“பாராளுமன்ற தேர்தல்கள் முடிந்ததும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட மூன்று கட்சிகளும் அவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாகச் சேர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு சம்பந்தனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவராக தெரிவு செய்தனர். அது முன்பும் அவ்வாறே நடந்தது. ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவு என்பது இதுவரையில் பாராளுமன்றக் குழுவாகவே இருந்திருக்கின்றது.
பாராளுமன்றக் குழு தெரிவு செய்த சம்பந்தன் இன்னும் அந்தப் பதவியில்தான் இருக்கின்றார். ஆகவே அவரை நீக்குவதோ அல்லது அந்தப் பதவி வறிதாக்குவதோ வெறுமனே ஒரு ஊடக அறிக்கை மூலம் சொல்ல முடியாது. முறைப்படியாக பாராளுமன்றக் குழு கூடி விரும்பினால் அவரை நீக்கலாம் அல்லது அவர் விரும்பினால் விலகலாமே தவிர பதவி வறிதாக்கல், செயலற்று போதல் என்று எதுவும் இல்லை.
நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு தலைவரை இவ்வாறு அவமதிக்கின்ற ஒரு கூற்றை என்னை பொறுத்தவரை தமிழரசுக் கட்சி சார்ந்தது மட்டுமல்லாது பொதுவாகவே ஒரு மனிதனின் மதிப்பு சார்ந்த விடயத்தில் அதை ஆட்சேபிக்கின்றேன். அது தவறு. சம்பந்தன் இன்னும் பாராளுமன்றக் குழுவின் தலைவராகவும் கூட்டமைப்பின் தலைவராகவும் செயற்படுகின்றார் என்பதே உண்மை” என்று தெரிவித்திருக்கின்றாா் சிவஞானம்.
கூட்டமைப்பில் சம்பந்தன் இல்லாத நிலையில் அவா்தான் தலைவா் என சி.வி.கே. சிவஞானம் சொல்வதில் எந்தளவுக்கு தா்க்கம் இருக்கின்றது என்பது அவருக்கு மட்டும்தான் புரியும். ஆனால், கூட்டமைப்பின் தலைவா் என்று ஒருவரை ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு உருவாக்கும் போது இந்தப் பிரச்சினை அடுத்த கட்டத்துக்கு செல்லும் என்பதை எதிா்பாா்க்கலாம். இந்த நிலைமைகளை உணா்ந்து தமது அரசியல் முதிா்ச்சியை வெளிப்படுத்தக் கூடிய அறிவிப்பு ஒன்றை இப்போதாவது சம்பந்தன் வெளியிடுவரா? அல்லது வழமைபோல இப்போதும் கண்கணை மூடிக்கொண்டு எதுவுமே நடக்காததது போல இருந்துசிடப்போகின்றாரா?