கோட்டா கோ கம’வின் அடுத்த கட்டம் என்ன? | கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி செவ்வி

1 2 கோட்டா கோ கம'வின் அடுத்த கட்டம் என்ன? | கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி செவ்வி

கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி

கோட்டா கோ கம’வின் அடுத்த கட்டம் என்ன?

ஜனாதிபதிக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட கோட்டோ கோ கம போராட்டம் எழுபத்தைந்து நாட்களைக் கடந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இந்தப் போராட்டத்தின் எதிர்காலம் என்ன? பிரதமராகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்கவினால் என்ன சாதிக்க முடியும்? பொருளாதார நெருக்கடியின் அடுத்த கட்டம் என்ன போன்ற கேள்விகளுடன், பொருளாதார நிபுணரும் அரசியல் ஆய்வாளருமான  கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி அவர்களை இந்த வாரம் தாயகக்களம் நிகழ்வுக்காக வழங்கிய செவ்வியின் முக்கியமான ஒரு பகுதியை இலக்கு வாசகர்களுக்குத் தருகிறோம்.

கேள்வி:
கோட்டா கோ ஹோம் என ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இப்போது 75 நாட்களையும் தாண்டி இரண்டாவது கட்டத்தை அடைந்துவிட்டதாகக் கூறப்படுகின்றது. இந்தப் போராட்டத்தின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில்:
இலங்கையைப் பொறுத்தவரையில் அதன் வரலாற்றில் நீண்ட ஒரு காலத்துக்கு நடைபெறும் போராட்டமாக இது இருக்கின்றது. இது இப்போது 75 நாட்களைத் தாண்டிச்சென்றாலும், அது எந்த இடத்தை நோக்கி நகர்கிறது என்பது போராட்டக்காரர்களுக்குத் தெரியாத ஒரு சூழ்நிலைதான் இருக்கின்றது. போராட்டத்தை ஆரம்பிக்கும் போது இருந்த மக்களின் உணர்வு குறைவடைந்திருப்பதை நாம் அவதானிக்க முடிகின்றது. இதற்குக் காரணம் இந்தப் போராட்டத்தின் ஆரம்பம் முதல் இதனை முன்னெடுத்துச்செல்பவர்களிடையே வேறுபாட்டைக் காணக்கூடியதாக இருக்கின்றது. சமூகவலைத்தளங்களில் இடுபட்டிருக்கக்கூடியவர்கள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கக்கூடியவகையில் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்து முன்னகர்த்திக்கொண்டு சென்றார்கள்.

ஆனால் இந்தப் போராட்டம் எவ்வாறு முன்னகர்த்திச் செல்லப்பட வேண்டும். எவ்வாறான போராட்டங்களை முன்னகர்த்திச் செல்ல வேண்டும். இதில் அரசியல்வாதிகளுடன் எவ்வாறான தொடர்புகளை வைத்துக்கொள்ள வேண்டும் போன்ற விடயங்களில் போராட்டக்காரர்களிடையே இருக்கக்கூடிய ஐயமும், இதனை முறைப்படுத்தப்பட்ட ஒரு போராட்டமாக முன்னெடுக்காமையும் தான் இன்று இந்தப் போராட்டம் தேவையா என்ற கேள்வி முன்வைக்கப்படுகின்றது. அதனால் இந்தப் போராட்டம் 75, 100 நாட்களைக் கடந்து சென்றாலும் இதனால் கிடைக்கப்போகும் பலன் என்பது அரசியல் ரீதியாக மிகவும் குறைவானதாகத்தான் இருக்கும். இந்த நிலையில் தற்போதைய அரசாங்கம் இதனை தமக்குச் சாதகமாகவும் பயன்படுத்திக்கொண்டுவருகின்றது.

கேள்வி:
ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்று ஒரு மாதகாலம் கடந்துவிட்டது. இந்த ஒரு மாத காலத்தில் அவரது செயற்பாடுகளை எவ்வாறு மதிப்பிடுகின்றீர்கள்?

பதில்:
ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரையில் அவர் இந்தப் பதவிகளுக்கு அதிகம் ஆசைப்படும் ஒருவர். ஜனாதிபதி அழைப்பு விடுத்தும் பிரதான எதிர்க்கட்சி இந்தப் பதவியைப் பெற்றுக்கொள்ள முன்வரவில்லை என்ற நிலையில்தான் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றார். அந்த நிலையில் ஜனாதிபதிக்கு இருந்த ஒரே தெரிவு ரணில் விக்கிரமசிங்கவாக இருந்தது. எனவே இதனைப் பயன்படு;திக்கொண்டு அவர் இப்போது பிரதமர் நாற்காலியை அலங்கரிக்க ஆரம்பித்துவிட்டார்.

பிரதமர் நாற்காலியில் அமரும் போதே தன்னால் இந்த ஜனாதிபதியுடன் வேலை செய்ய முடியாது என்பது அவருக்குத் தெரியும். ஆனால், அந்தப் பிரதமர் பதவியை தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துக்காகவும், தன்னுடைய கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காகவும் தான் இந்தப் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டார். நாடு இப்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வைக்காணும் எண்ணப்பாடு அவரிடம் இல்லை என்பது இப்போது அவர் தெரிவித்துவரும் கருத்துக்களிலிருந்து பார்க்கலாம்.

ஜனாதிபதியுடன் முரண்படாமல் தமது வேலைகளைச் செய்துகொண்டு போக முடியாது என்பது ரணிலுக்குத் தெரியும். அதனைத் தெரிந்துகொண்டே தான் அவர் அந்தப் பதவிக்கு வந்தார். மத்திய வங்கியின் ஆளுநரை நியமிக்கும் விவகாரமாக இருக்கலாம். தனித்தனியாக கூட்டங்களை நடத்துவது. அதிகாரிகளை மாற்றியமைக்க முற்படும்போது ஜனாதிபதி அவற்றுக்குத் தடைகளைப் போடுவதாகவும் இருக்கலாம். இவை அனைத்திலும் முரண்பாடுகள் உருவாகியிருப்பதைக் காணலாம். 2019 க்கு முன்னர் நல்லாட்சியில் காணப்பட்ட அதே நிலைமை இப்போது மீண்டும் வந்திருக்கின்றது.

இவ்வாறான ஒரு நிலைமை வரும் என்பதைத் தெரிந்துகொண்டுதான் ரணில் விக்கிரமசிங்க இந்தப் பொறுப்பினை எடுத்தார். இந்த ஒரு மாத காலத்தில் காலத்தை ஓட்டிச்செல்வதற்கான ஒரு ஓட்டுநராக அவர் இருந்திருக்கிறாரே தவிர, ஆக்கபூர்வமான ஒரு முயற்சியை அவர் செய்யவில்லை. அவ்வாறு அவர் செய்வதற்கு முற்பட்டாலும் ஜனாதிபதி அதற்கு இடமளிக்கமாட்டார்.

இருவருக்கும் உள்ள பிரச்சினை என்னவென்றால் இவர்கள் தங்கியிருக்கின்ற அணியின் பலம் குறைந்துவிட்டது. தமது அணிகளைப் பலப்படுத்துவதுதான் இப்போது இவர்களுக்குத் தேவையாக இருக்கின்றதே தவிர, நாட்டின் பிரச்சினையை இவர்கள் முன்னுக்குக் கொண்டுபோகப்போவதில்லை. ஆக, ரணில் விக்கிரமசிங்கவின் இந்த ஒரு மாதகாலம் பொதுஜன பெரமுனவை அம்பலப்படுத்தி, தனது கட்சியைப் பலப்படுத்த அவர் முயற்சித்த காலமாகவும், அதனை முறியடிப்பதற்காக ஜனாதிபதி செயற்பட்ட காலமாகவுமே போயிருக்கின்றது.

கேள்வி:
பெருமளவுக்கு எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்த சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை பிணை எடுப்பதில் நாணய நிதியம் செய்யக்கூடிய பங்களிப்பு எவ்வாறானதாக இருக்கும்?

பதில்:
சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாடுகளை ஆழமாகப் பார்த்தால், அதனை வைத்துக்கொண்டு இலங்கைக்கு என்ன நடக்கும் என நாம் சொல்லமுடியும். நாணய நிதியத்தைப் பொறுத்தவரையில் அது ஆரம்பிக்கப்பட்டு எழுபது வருடங்கள் கடந்திருந்தாலும் கூட, ஒவ்வொரு நாடுகளிலும் இருக்கக்கூடிய பொருளாதார, அரசியல் ஸ்திரத் தன்மையை வைத்துக்கொண்டுதான் ஐ.எம்.எப்.இன் உதவிகள் பூரணமான நிலையை உருவாக்கும். ஆனால், இலங்கையைப் பொறுத்தவரையில் சர்வதேச நாயண நிதியம் எவ்வாறு கடனை வழங்கும் எனச்சொன்னால், கடனைப் பெறுவதற்கான அக, புறச் சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும். அதற்குப் பின்னர் தான் ஐ.எம்.எப். இடமிருந்து வரும் நிதிகள் இந்த நாட்டின் முன்னோக்கி நகரும் விடயங்களிலும் சாதகமான பதிலைத் தரும். இல்லையெனில், மிகப் பாதகமான விளைவுகளைத்தான் தரும்.

அவர்கள் கடன்களை வழங்குவதற்கு பல நிபந்தனைகளை விதிப்பார்கள். முதலாவதாக அரசாங்கத்தின் செலவினங்களைக் குறைக்கவேண்டும் எனக் கோருவார்கள். அரசாங்க உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை எட்டு இலட்சத்திலிருந்து இப்போது பதினெட்டு இலட்சமாக அதிகரித்திருக்கின்றது. அரசாங்க உத்தியோகங்களில் தேவைக்கு அதிகமானவர்கள் இருக்கின்றார்கள். அரசியல்வாதிகள் தமது வாக்குகளை தக்கவைப்பதற்காக அளவுக்கு அதிகமானவர்களை அரசாங்க உத்தியோகங்களில் நியமித்திருக்கின்றார்கள். இவ்வாறானவர்களை அந்த இடங்களிலிருந்து அகற்றவேண்டிய சூழ்நிலை அரசாங்கத்துக்கு உடனடியாக ஏற்படும். இவ்வாறு 10 அல்லது 12 இலட்சம் பேரை வேலையிலிருந்து நிறுத்தினால் மக்கள் கிளர்ச்சி ஒன்று வெடிக்கும் நிலை ஏற்படும். இதனை இந்த நாடு எந்தளவுக்குத் தாங்கும்?

இதனைவிட அரசாங்க நிறுவனங்கள் சிலவற்றை மூடவேண்டிய நிலை ஏற்படலாம். சில நிறுவனங்களை தனியார்மயப்படுத்த வேண்டிய நிலை உருவாகலாம். இவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட்டால் இந்த நாட்டில் இருக்கக்கூடிய அரசியல் கட்டமைப்புக்கள், தொழிற்சங்கக் கட்டமைப்புக்கள் போன்றவற்றுக்கு இடமளிக்க முடியாத நிலை ஏற்படும்.

இவ்வாறான நிலைமையில் சர்வதேச நாணய நிதியம் சுமார் ஒரு பில்லியன் டொலரை வழங்கலாம். இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கும் முழுமையான தொகையும் வந்து சேர்வதற்கு காலம் செல்லலாம். அதனால், சர்வதேச நாணய நிதியத்தின் மூலமாக இந்த நாட்டை பிணை எடுக்க முடியுமா எனக் கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கும் இந்த நாட்டின் நிலைமைக்கும் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றது. அதனால் நாணய நிதியத்தின் மூலமாக பிணை எடுக்கக்கூடிய சூழ்நிலை இலங்கை இப்போதைக்கு இல்லை என்பதுதான் உண்மை!

Tamil News